அம்மே அம்மே இது நற்காலமே

5

அண்ணாகண்ணன்

Annakannan

அம்மே அம்மே இது நற்காலமே
ஆமே ஆமே இனி உற்சாகமே

மனமே காதலில் பண்படுமே
மானுடம் அன்பினில் மேம்படுமே
திருமிகுமே தீபம் தென்படுமே
திக்குகள் உன்னைக் கும்பிடுமே

எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தைத் தருகவே.

ஒட்டாத நெஞ்சமும் ஒட்டிவர வேண்டுமே
விட்டாடும் யாவுமே தொட்டாட வேண்டுமே.
மொட்டாகப் புன்னகை கட்டாயம் வேண்டுமே
சிட்டாக வானிலே சென்றாட வேண்டுமே.

பட்டமரம் பூக்குமே பாறையும் சுரக்குமே
வெட்டவெளி எங்குமொளி வெள்ளமெனப் பாயுமே
நட்டநடு நெற்றியிலே நட்சத்திரம் தோன்றுமே
விட்டகுறை தொட்டகுறை இட்டுநிறைவாகுமே.

வேட்டைக்குப் போகலாம் வீரத்தைக் காட்டலாம்
மேட்டையும் பள்ளத்தையும் மிதமாய் இணைக்கலாம்
கோட்டைக் கடந்துவந்தால் கோட்டையைப் பிடிக்கலாம்
பாட்டைப் படித்துக்கொண்டே படைகளை நடத்தலாம்.

ஆட்டத்தைத் தொடங்குவோம் ஆழத்தில் இறங்குவோம்
கூட்டத்தைக் கூட்டுவோம் கொட்டத்தை அடக்குவோம்
வாட்டத்தைப் போக்குவோம் வாழ்க்கையை வாழுவோம்
நாட்டுக்குள் நன்மையை நாட்டுவோம் நாட்டுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “அம்மே அம்மே இது நற்காலமே

 1. மானுடம் அன்பினில் மேம்படுமே,

  மொட்டாகப் புன்னகை கட்டாயம் வேண்டுமே

  என்ற வரிகள் என்னைக் கவர்ந்தன ,

  “அன்பின் வழியது உயர்நிலை” என்ற குறள் ஞாபகம் வந்தது

 2. ”ஆட்டத்தைத் தொடங்குவோம் ஆழத்தில் இறங்குவோம்
  கூட்டத்தைக் கூட்டுவோம் கொட்டத்தை அடக்குவோம்”

  சிந்திக்க வேண்டிய வரிகள்

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 3. வானத்து விண்மீனின் கண்சிமிட்டலையும்
  கானகத்துக் குயிலின் குரலிசையையும்
  மோனத் தவத்தின் மௌன ராகத்தையும்
  நாட்டு நடப்பைப் பற்றிய தீர்க்க தரிசனத்தையும்
  நல்லதே நினைக்கின்ற நன் மனத்தினையும்
  வீட்டிலுள்ளோர் உணரும் வகையில் விந்தைக்
  கவிதை படைத்த தங்களுக்கு என் மனமுவந்த நன்றிகளையும்
  புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்

  விமலா ரமணி

 4. துன்பங்களைத் துடைத்தெறிந்து
  இன்பங்களை இணைத்து வா..
  வெற்றி காத்திருக்கிறது..

  இருளில் நிலவில்லையா?
  விண்மீன் இல்லையா?
  எதுவும் தெரியவில்லையா?
  தேடிப் பார்..
  விட்டில் பூச்சியாவது இருக்கும்..

  என்பது போன்ற உணர்வை உருவாக்கும் மிகச் சிறந்த நயமான கவிதை.

  இப்படிக்கு,
  ஓ.கே.விஜயகுமார், மேட்டுப்பாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *