பாஸ்கர பாரதி

நேற்று நடந்தது. அதற்கு முதல் நாள். அல்லது, அதற்கும் முன்னர் நடந்தது. என்றோ எப்போதோ எப்படியோ நிகழ்ந்து விட்டதை எண்ணியெண்ணி, மாளாமல் மனத்துயரம் கொள்வோர் ஏராளம். நடந்திருக்கக் கூடாதுதான். ஆனாலும் நடந்தேறி விட்டது. அடிமனதில் வெகு ஆழமாக அழுத்தமாக இடம் பிடித்து விட்டத் துயர சம்பவம், கொடிய நிகழ்ச்சி. 

இன்னும் எத்தனை நாட்களுக்கு உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருக்க அனுமதிக்கலாம்?. கவலை – ஒரு அதி பயங்கர நோய். தனக்குப் புகலிடம் கொடுத்து விட்ட மனிதனை அரித்து அரித்துச் செல்லாக் காசாக்கி விடும். செல்லரித்த சுவர்ப் படம் ஆக்கி விடும். எந்த மருத்துவ விற்பன்னராலும் சரி செய்ய இயலாத இந்த நோய்க்கு என்னதான் மருந்து?  

கவலை – உயிர் மாய்க்கத் துடிக்கும் பேய். உடன் இருந்தும் கொல்லும் பகை. முகூர்த்த வேளையில் முகாரி பாடும். முயற்சிக்குத் தடையாய் முட்டுக் கட்டை போடும். 

கவலையின் ஊற்றுக்கண், பிறப்பிடம், மூல வித்து எது என்பதை ஆய்ந்து கண்டு, அதை அழிப்பதன் மூலமே கவலையெனும் நச்சு மரத்தை அடியோடு அழிக்க முடியும். கடந்து போன நாட்களின் மிச்சங்கள், கசந்து போன நடப்புகளின் எச்சங்கள், இதிலேதான் எந்தவொரு துயரமும் துயில் கொண்டிருக்கிறது. 

துணிந்து முன்னேற முயல்கிறபோது, துயரம் தன் துயில் களைந்து எதிர் வந்து நிற்கிறது. பக்கத்துப் பசுமையைப் பார்வைக்கு மறைத்து விட்டுத் தொலை தூரத் தொல்லைகளைப் பெரிதாக்கிக் காட்டுகிறது. விளைவு? சோர்ந்த முகமும், சோக முடிவும்.  

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? கவலை எனும் நோய் தீர்க்கும் நன்மருந்து யாது? ஏதும் உண்டா? எவர் கூறுவார்? மனித இனத்தை உய்விக்க வந்த மகாகவியின் பாடல்கள் இருக்க, மருந்து வேறு எதற்கு? ஆற்றொணாத் துயரையெல்லாம் ஆற்றி விடும் ஆற்றல் கொண்ட பாடல் ஒன்று உண்டு. முடிந்து போனதற்கு மீண்டும் முன்னுரை வேண்டாம்.

பழைய நினைவுகளினால் பாதாளத்துக்குப் பாதை போட வேண்டாம்.

நிகழ்ந்து விட்டதை நினைவுகளில் இருந்து நிரந்தரமாக நீக்கி விடலாம்.

இன்று, வெகுவாக இன்று, இப்பொழுது, வெகு சற்று முன்னரே ஜனித்தோம் என நினைப்போம். 

இப் பிறப்பு – புதுப் பிறப்பு. இப் பிறப்பு – இறந்து பெற்றதில்லை. எவரையும் இரந்து பெற்றதில்லை. இனி, வயிறாற உண்போம், வேண்டு மட்டும் வேடிக்கையாய் விளையாடித் தீர்ப்போம். 

துயரங்களையெல்லாம் துடைத்து எறிந்தாயிற்று. அவை திரும்பி வரப் போவதில்லை. மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம். இனி, இன்பம் எங்கும் நிலையாய்த் தங்கும். எவராலும் எண்ணத்தாலும் எட்ட முடியாத சிகரத்தின் உச்சியை எட்டே வரிகளில் எட்டையபுரத்துக் கவிஞன் எட்டிப் பிடிக்கிறான். 

மகாகவியின் இப்பாடல் வரிகளை மனம் லயித்துச் சொல்லிப் பாருங்கள். உங்களுக்குள் உறங்கும் ஒரு புதிய ஜீவன் உயிர் பெற்று எழுவதை உறுதியாய் உணர்வீர்கள். இதோ, அந்தப் பாடல்.   

                   சென்றதினி மீளாது!  

சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து 

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா. 

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் 

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு 

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; 

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. 

 

படத்திற்கு நன்றி: http://pondynews.com/tour-bharathi-mani.php

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.