தை மாதமே உன் சிறப்புத்தான் என்ன! (பாகம்-2)
விசாலம்
இந்தத் தை மாதத்தில் ஆன்மீகத்துடன் நம் தேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வான “குடியரசு தினமும்” கொண்டாடப் படுகிறது. நமது பாரத நாடு அடிமைத் தளையில் சிக்கிக் கொண்டுத் தவித்த நேரத்தில், பலர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பல விதமாகப் போராடினர். சிலர் அஹிம்சையை மேற் கொண்டனர். சிலரோ இதை மட்டும் கொண்டால் காரியம் நடக்காது என்று உணர்ந்து தீவிரவாதத்தையும் எதிர் கொண்டனர். இதனால் பலியானவர்களில் ஒருவரான “பகத்சிங்”கை மறக்க முடியுமா?” திருப்பூர்க் குமரனைத்தான்” மறக்க முடியுமா? தன் குழந்தையையும் முதுகில் கட்டிக் கொண்டு குதிரை மேல் ஏறிச் சாகசமாகப் போரிட்ட வீர ஜான்சி ராணி சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்று விட்டாரே!
சர்தார் பகத்சிங்கிற்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வீர மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைப் பார்த்துக் கொதித்துப் போன ஒருவர் தானும் சுதந்திரப் போராட்டக் களத்தில் முழு மூச்சுடன் இறங்கினார்.
அவர்தான் நமது பெருமைக்குரிய “சுபாஷ் சந்திர போஸ்” இவர் அமர்ந்த நாற்காலி இன்றும் செங்கோட்டையில் (Red fort) தொல் பொருட்காட்சியில் வைக்கப்பட்டு அவரைப் பற்றி நாற்காலியின் கீழே மிகவும் சிறப்பாக எழுதப் பட்டிருக்கிறது .
இந்த மாதத்தில் இவரது பிறந்த நாள் ஜனவரி 23-ல் வருகிறது. இவர் பிறந்த ஆண்டு1897. இவர் சொன்ன வாசகம் “இரத்தம் கொடு நான் சுதந்திரம் கொடுக்கிறேன் ( Give blood i will give you freedom)
இப்போது குடியரசு தினத்திற்கு வருவோம். ஜனவரி- 26 அன்று குடியரசு தினம். ஒவ்வொரு குடி மகனுக்கும் இது தெரிந்த விஷயம். மக்களுக்கு, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியே குடியரசு.
மக்களே தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஆட்சி அமைகிறது. சில வருடங்கள் முன்னால் வரை மக்கள், தங்கள் அறிவைப் பயன்படுத்திப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இப்போது லஞ்சம், பேராசை போன்ற வலைகளில் விழுந்து விட்டனர். இதே போல் தேர்தலில் நிற்கும் தலைவர்களும் நியாயமாக நடக்கத் தவறி விடுகின்றனர். தன்னலமில்லாத சேவை செய்யும் மனப்பாங்குக் கொண்டவர்களை இக்காலத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். இதை நினைக்க மனம் வேதனையடைகிறது.
இந்தியாவில் பல மதங்களும், பல ஜாதிகளும், பல தரப்பட்ட மொழிகளும் இருக்க மிகவும் பெருமைப்படுவது போல் நம் குடியரசு நாடு சிறப்பாக நடந்துதான் வந்தது. அப்போது ஒரு லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். திரு.கோபால கிருஷ்ண கோகலே, லோகமான்ய திலகர், திரு.காமராஜர் என்ற பல தியாகிகள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டனர்.
அதற்கெல்லாம் ஒரு திருஷ்டி வந்தது போல் இன்று நிலைமை மோசமாகி வருவதைக் காண்கிறோம். ஆனாலும் இது இப்படியே நீடிக்காது. திரும்பவும் நல்ல நிலைமையை அடைய முடியும் என நம்பிக்கை வைப்போம்.
குடியரசு தினத்தைப் பார்த்து மகிழ வேண்டுமானால் நாம் தில்லி செல்ல வேண்டும். இதில் முப்படைகளும் பங்கு பெற்றுத் தங்கள் கைத்திறனைக் காட்டுவார்கள். தவிர பள்ளிச் சிறுவர்களின் ஆடல் பாடல்களும் இடம் பெறும். யானை, குதிரை, ஒட்டகம் என்று வருடா வருடம் இதைப் பார்க்கக் கூட்டம் ஏகமாய் வரும். பார்க்க மிகவும் ரஞ்சகமாக இருக்கும். பல மாகாணங்களில் இந்தக் குடியரசு தினக் கொண்டாட்டம் நடந்தாலும் தில்லியில் நடப்பது மறக்க முடியாத ஒன்று.
அடுத்து வருவது வசந்த பஞ்சமி. வசந்த காலம் என்றாலே குயிலின் குக்கூவும், மயிலின் ஆடலும் நம் மனக்கண் முன் வந்து ஆனந்தத்தைக் கொடுக்கும். தவிர பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, அதன் நறுமணம் தென்றலில் கலந்து வீச ஆஹா! அருமைதான். ரொம்பக் குளிரும் இல்லாமல் மிதமான சூட்டுடன் எல்லோருக்கும் இன்பம் தரும் காலம். தவிர கலைகளுக்கெல்லாம் தலைவியான அந்தக் கலைவாணியைப் பூஜிக்கும் தினமும் இந்த மாதம் தான். வட நாட்டில் வசந்த பஞ்சமியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். மரங்களில் ஊஞ்சல் கட்டி அதில் பலவிதக் கனவுகளுடன் அமர்ந்து ஆடுவார்கள், எல்லோரும் மஞ்சள் வண்ண உடை உடுப்பார்கள். மஞ்சள் பூக்களால் பூஜைகளும் நடக்கும். இனிப்புப் பண்டமும் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும் .
இந்த நன்னாளில் தான் ராசலீலையும் சில இடங்களில் நடக்கும். பெண்கள் கோபிகைகளாகத் தங்களை அலங்கரித்துக் கொண்டு நடுவில் கண்ணன் நிற்க, “கோபிகா கீதம்” போன்ற பாடல்களைத் தொடர்ந்து “ராசலீலை” என்ற நடனமும் ஆடுவார்கள். “காலங்களில் அவள் வசந்தம்” என்ற பாடல் வசந்தத்தின் பெருமையைக் கூறுகிறதே.
இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற தை மாதம் எல்லோரையும் கவரும் மாதம் தான்.
குடியரசு தினம் படத்திற்கு நன்றி: http://indian-travel-tourism.blogspot.in/2011/01/republic-day.html
வசந்த பஞ்சமி படத்திற்கு நன்றி: http://www.bharatonline.com/uttarakhand/festivals/basant-panchami.html
