வெட்கம்….. வேதனை….!

0

தலையங்கம்

ஆன்மீக நெறி வழிபாட்டிற்கு ஆலயங்கள் எந்த அளவிற்கு புனிதத்துவம் வாய்ந்ததோ அதே அளவிற்கு அரசியலாளர்களுக்கு சட்டசபை. அவர்களுக்கு அதுதானே வழிபாட்டுத்தலம். அதற்குள் நுழைவதற்கு எத்துனை முயற்சிகள், உழைப்புகள், திறன் வெளிப்பாடுகள். இவ்வளவிற்கும் பிறகு உள்ளே நுழையும் ஒரு உன்னதமான இடத்திற்கு, சாமான்ய மக்கள் ஒரு பார்வையாளராகக்கூட எளிதாக நுழைய முடியாத ஒரு புனிதமான இடம், அப்படிப்பட்ட ஒரு இடத்தில், நாட்டின் முன்னோடிகளாகத் திகழ வேண்டிய பதவியில் இருப்பவர்கள், சட்டசபையில் தீவிர விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அதுவும் நாட்டின் வறட்சி நிலையைப் பற்றிய தீவிரமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் துளியும் மனிதாபிமானமே இல்லாத செயலாக, மூன்று அமைச்சர்கள் சட்டசபையில் உட்கார்ந்து கொண்டு, வெளிநாட்டில் , ரௌடிக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் மிக மோசமான , நீலப்படம் போன்ற காணொலியை, தங்களுடைய கைப்பேசியில் இருந்து கண்டு களித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதனை புகைப்படக்காரர்கள், தெளிவாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதால் மாட்டிக் கொண்டு வேறு வழியிலாமல் பதவி விலகியுள்ளார்கள்! கர்நாடக சட்டசபையில் அரங்கேறியுள்ள இந்த அவலம் நாட்டிற்கே அவமானச் சின்னம்.

கர்நாடக சட்டசபைக் கூட்டம் விதான சௌதாவில் நேற்று நடந்து கொண்டிருந்தபோது தூர்தர்ஷன் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், சபை நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தன. கர்நாடக அமைச்சர்கள் லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ணபாளேமர் ஆகிய மூவரும் கீழ் தளத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். இவர்கள் கையில்தான் இப்படிக் கேவலமான படங்களுடனான வீடியோப் படங்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் இருவரும் செல்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அந்தப் படத்தை துறைமுகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கிருஷ்ணபாளேமர் இவர்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருக்கும் இதில் முக்கியப் பங்கு இருப்பதுதான் முக்கிய செய்தியே! அதாவது வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தான் இருக்கிறது இது! நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.