காதலர் தினம் 2012
தமிழ்த்தேனீ
“ காதலர் தினம் “
ஏன் என்று தெரியவில்லை எப்படி
என்றால் பதிலில்லை
தகுதிகள் யோசிக்கவில்லை
அதிசயம் ஆனால் உண்மை
விளைவுகள் தெரியாது! முன் பின்
எனக்கு பழக்கமில்லை பார்த்தபின்
உன்னை மறக்கவே இல்லை
நீயும் என்போல்தானா தெரியவில்லை
ஆனாலும் உண்மை ,சத்தியமான உண்மை
ஆம் நான் உன்னைக் காதலிக்கிறேன்!
வருகிறது! காதலர் தினம் வருகிறது ! வருடத்துக்கு ஒரு முறை வருகிறது! ஆனால் காதல் தினம் தினம், மணிக்கு மணி, நிமிடத்துக்கு நிமிடம், வினாடிக்கு வினாடி வந்துகொண்டே இருக்கிறது, மொட்டாகி முகிழ்த்து மலர்ந்து விரிந்து பூத்துக்கொண்டே இருக்கிறது, இதழ் மூடிக் காய்த்துக்கொண்டே இருக்கிறது ,உள்ளுக்குள்ளே கனிந்து கனிந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இப்படிப் பூக்கும் காதல்களில் எத்துனை சதவிகிதம் உண்மையான காதல் என்று ஆராய்ந்தால் நாம் அடையப்போவது ஏமாற்றமே.
“பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை தோன்றுதல்தான் அழகு”
என்பதை புரிந்து கொள்ளுதலே காதலின் அடிப்படை .ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்து முதலில் தங்களுடைய குறைகளைத் தெரிய வைத்து பின் தெளிய வைத்து தெளிவாக காதலித்தால் மட்டுமே காதல் இனிக்கும் . காமத்தை காதல் என்று புரிந்து கொள்ளுதலும், இயல்பான ஆர்வத்தை காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலுமே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சரி உண்மையான காதல் என்றால் என்ன? திருமணத்தில் முடிவதுதான் உண்மையான காதல் என்றால் ஆதிகாலம் தொட்டு ஆதாம் ஏவாள் முதல் ஷாஜஹான் மும்தாஜ் உட்பட, தற்காலக் காதலர்கள் வரை ஆராய்ந்தால் ஒன்று கூட உண்மையான காதலாக அங்கீகரிக்கப்படாது என்பதே உண்மை. அப்படியானால் இந்தக் காதல் எதற்கு உதவுகிறது என்று ஆராய்ந்தால், வெறும் பருவக் கிளர்ச்சிக்கும் , வயசுக் கோளாறு என்று சொல்கிறோமே அதற்கும் ஒரு வடிகாலாக மட்டுமே உபயோகப் படுகிறது என்று வைத்துக்கொண்டால் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் இந்தக் காதலுக்கும், காதலர் தினத்திற்கும்?
அப்படி அல்ல ,ஆயிரம் பூக்கள் பூத்தாலும் ஒரு சில மலர்களே முறையாக உபயோகப்படுத்தப் படுகின்றன. அது போல் ஆயிரம் காதல்கள் முகிழ்த்தாலும் அவற்றின் பின்புலம் எப்படி இருந்தாலும், அது உண்மைக் காதலாக இருந்தாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையாக ஏற்படும் பருவக் கவர்ச்சியாலோ, பருவக் கிளர்ச்சியாலோ ஏற்பட்டிருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட பெண்ணின், ஆணின் , ஒருவரை ஒருவர் நேசிக்கும் அளவின் தன்மையைப் பொறுத்து உண்மை உணர்வு பிரதிபலிக்குமே ஆயின்,அல்லது இருவரில் ஒருவர் ,அல்லது இருவருமே , அந்தக் காதல் தோற்கின் தம் உயிரையும் விடும் அளவுக்கு வெறிகொண்டாலும், அல்லது நல்ல உறுதி எடுத்துக்கொண்டு எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் , எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்கொண்டு சமாளித்து வாழ்ந்து காட்டினாலும், அந்தக் காதலை உண்மையான காதல் என்று ஏற்றுக் கொள்ளலாம்.
துரதிர்ஷ்டவசமாக தற்காலத்தில் அது போன்ற காதல் 99 சதவிகிதம் இல்லையென்றே தோன்றுகிறது. ” ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மனமார நேசிப்பதுதான் காதல் என்றால் இதுவரை அது ஏற்படவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
சமீபகாலத்தில் திரைப்படங்கள், இணையம், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவைகளின் உபயத்தால் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகளும், மாணவர்களும் கூட, தாம் செய்வது காதல் அல்ல வெறும் இனக்கவர்ச்சி என்றுகூட உணராமல், பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கூடம் செல்லாமல், சேர்ந்து கைகோர்த்துக்கொண்டு சுற்றும் பலரை நான் கண்டு வருத்தமடைந்திருக்கிறேன். அவர்களைப் போன்றோர்களைக் கண்டால் அழைத்து மிரட்டியோ, அல்லது இதமாகச் சொல்லியோ தங்கள் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறேன்.
ஆக இந்தக் காதலர் தினத்திலிருந்து இவர்களைப் போன்றோர்களைக் கண்டால் நம்மைப் போல் மற்றொரு பெற்றோரின் குழந்தைகள் இவர்கள், இவர்கள் வாழ்க்கை சீரழியாமல் காப்பது நம் கடமை என்று நாமும் உணர்ந்து, நாம் கெட்ட பெயர் எடுத்தாலும் பரவாயில்லை. வருங்கால சந்ததிகளை நல்வழிப்படுத்த நாமும் பாடுபடுவோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு காதலர்களை மிரட்டுவோம்.
இந்தக் காதலர் தினத்திலிருந்தாவது உண்மையான காதல் என்றால் என்ன ? என்பதை நம் வருங்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம்
வாழ்க காதலர் தினம்
படத்திற்கு நன்றி:
http://valentines.getit.in/index.php/ecards/odudecardshow/3/21
அருமையான பகிர்வு.