மாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அன்னை ஆனந்தவல்லி

0

ராஜராஜேஸ்வரி

கஜப்பிருஷ்ட விமானம் அமைந்த 108 கோவில்களில் நூம்பல் அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்மனுடன் அருளும் பழமையான சிவாலயம் .சர்வதோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது.

காசியில் அருள்புரியும் விஸ்வநாதருக்கு மிகவும் பிரியமான மலரே நூம்பல். ஒரு மகரிஷி அந்த மலரைக் கொண்டு வந்து இந்த சிவபெருமானைப் பூஜை செய்தார்.

அதன் காரணமாகவே இத்தலம் நூம்பல் என்று பெயர் பெற்றது. அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அதனால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் விளங்குகிறது.

காசி நகர மலரால் தன் நாதனை பயபக்தி யோடு ஒரு மகரிஷி பூஜை செய்கிறாரே என்று வியந்து ஆனந்தமடைந்தாள் தேவி. அதனால் இங்குள்ள அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர் வந்தது.

அம்பிகை ஆனந்தவல்லி, அரிய வகை சதுராமலக (நெல்லிக்கனி வகை) விமானத்துடன் கூடிய கருவறையில் தெற்கு நோக்கி அருளும் ஆனந்தவல்லித் தாயாருக்கு வெள்ளிக்கிழமையன்று வளையல் அணிவித்து, திரிசதீ அர்ச்சனை செய்து, அந்த வளையலை அணிந்து கொள்ளும் பெண்களுக்கு மகப்பேறு உறுதி என்கின்றனர்.

கிழக்கே வானகரச் சிவமூர்த்தியும், மேற்கே பூவிருந்தவல்லித் தாயாரும், வடக்கே திருவேற்காடு வேதபுரீஸ்வர சிவனும், தெற்கே மாங்காடு காமாட்சி தேவியும் புகழ் பெற்ற மூர்த்தங்களாகக் கோவில் கொண்டிருக்கும்போது, ஒரு புதருக்குள் அழுந்திவிட்ட மாணிக்கமாக இந்த சிவசக்தி தலம் பன்னெடுங் காலமாக பெரும்பாலோருக்குத் தெரியாமல் மறைந்துள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், சதுரக் கற்களை மட்டுமே பயன்படுத்தி இரண்டாம் குலோத்துங்க மன்னன் கட்டியதாகக் கல்வெட்டுத் தகவல் சொல்கிறது. குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த ஆலயத்தில் அழகாக அமைந்துள்ள கஜப்பிருஷ்ட (யானை முதுகு) விமானம். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் ஆகிய ஈசனின் ஐந்து முகங்களைக் குறிக்கும் வண்ணம் ஐந்து கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் ஈசன் சுயம்புலிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கித் தரிசனம் தருகிறார்.

வேதவான் என்ற சிவபக்தன் பல தலங்க ளுக்குச் சென்று லிங்கத் திரு மேனிகளைத் தரிசனம் செய்து, ஒருநாள் உச்சிக் காலத்தில் நூம்பல் சிவாலயப் பகுதிக்கு வந்தான். பசி அதிகரிக்கவே, அருகிலுள்ள ஆனந்த புஷ்கரணிக்குச் சென்று பார்த்தான். அதில் கொஞ்சம்கூட தண்ணீர் இல்லை. அகத்திய முனி வழிபட்டுச் சென்ற சிவ தலத்தில் நீர் இல்லையே என்று மேலே பார்த்தபோது, அருகிலிருந்த மாமரம் சில கனிகளைக் காட்டியது. அவற்றைப் பறித்துக் கொண்டு அருகிலிருந்த விநாயகர் கோவிலுக்குச் சென்று உண்ண முற்பட்டான். பழம் புளிப்பாக இருந்தது. மனம் சோர்வுற்ற அவன் பழங்களை அருகே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்தான். ஆனால் பசி அவனை வருத்தியது.

வேறு வழியின்றி புளிமாங்கனியையே எடுத்து உண்ணத் தொடங்கிய அவனுக்குப் பேராச்சரியம்! ஆம்; இப்போது மாங்கனிகள் மிகச் சுவையாக இருந்தன. பெரும் மகிழ்வோடு அவன் விநாயகரின் திருப்பெயரை உச்சரித்தான். திக்குவாயாக இருந்த அவனுக்கு உச்சரிப்பு சரியாக வந்தது. (அன்று முதல் அந்த விநாயகரை மாங்கனிப் பிள்ளையார் என்று அவன் அழைக்க, அப்பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.)

ஆலயத்தைச் சுத்தம் செய்துவிட்டு அங்கேயே தங்கிய வேதவானுக்கு ஒரு நாள் காய்ச்சல் உண்டானது. கோவில் பணிகளைச் செய்யாமலும் ருத்ர ஜபம் செய்யாமலும் படுத்துக் கிடந்தான். மூன்று நாட்கள் சென்றபின் ஒரு பகல் பொழுதில் ஐந்து வேத பண்டிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ருத்ரபாராயணம் செய்து, பஞ்சாட்சர யாகமும் செய்து அவனுக்கு உணவும் உடையும் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதற்கு மறுநாளும் அவனுக்கு உடல் நலம் குறையவே, ஒரு சிவபக்தர் வந்து தண்ணீரைத் தெளித்து எழுந்திருக்கும்படி கூற, அவன் புத்துணர்வோடு எழுந்தான். இறைவனின் திருவருளை உணர்ந்து மெய்சிலிர்த்தான்.

ஆலயத்தின் திருச்சுற்றிலுள்ள மாங்கனிப் பிள்ளையாருக்கு சங்கட ஹர சதுர்த்தி நாளில் மாம்பழம் வைத்துப் படைத்து, அபிஷேகம் செய்து ஆராதித்தால், குழந்தைகளின் திக்குவாய் குணமாவதாகச் சொல்லப் படுகிறது.

 

ஒரு முறை தரிசித்தால் மறுமுறை காணத் தூண்டும் அமைதியான சிவன் கோவில் இது எனலாம். அழகிய புல்வெளிப் பரப்பில் சந்நிதிகள் அமைந்துள்ளன. நந்திதேவர் தனி மண்டபத்திலிருக்க, எதிரில் பஞ்சாக்கர தியான மண்டபம் அமைந்துள்ளது. இங்கேதான் பக்தர்கள் சிவநாம ஜபம் செய்கிறார்கள். எதிரே அகத்தீஸ்வரர் அருள, தனிச்சந்நிதியில் ஆனந்த வல்லிதேவியும் காட்சி தருகிறாள். திருச்சுற்றில் ஸ்ரீமாங்கனி விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகன், சுயம்புலிங்கம், ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகியோர் உள்ளனர். கோஷ்டங்களில் ஸ்ரீகுரு பகவான், மகாவிஷ்ணு அமைந்திருக்கின்றனர். யானை முதுகு விமானத்தின்கீழ் கல்வெட்டு எழுத்துகள் நிறைய காணப்படுகின்றன.

முற்காலத்தில் அரசர்களின் கட்டுப்பாட்டிலிருந்த சிவாலய வழிபாடு சில சிவனருட் செல்வர்களால் நடத்தப் பட்டதை- ஆலயத்திலுள்ள சந்தனம் அரைக்கும் கல், மணி மண்டபம், பூஜைப் பொருட்களை வைக்கும் மாடப்பிறைகள், உருளிகள், கற்குழிகளால் தெரிந்து கொள்ளலாம்.

இங்குள்ள வலம்புரிச் சங்கிற்கும் ஒரு கதை உண்டு. காசி மாநகரத்தில் வாழ்ந்த சித்தர் ஒருவர், தமிழ் மண்ணில் நூம்பல் மலரை ஏற்கும் ஈசன் கோவில் கொண்டிருப்பதாகக் கனவு கண்டு, அதன்படியே இவ்வாலயத்தைத் தேடிவந்து இறை தரிசனம் செய்திருக்கிறார். அப்போது இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பெரிய சங்கு ஒன்றைக் கொடுத்து, இறைவனே கனவில் வந்து சங்கு கேட்டதாகவும் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தச் சங்கு விசேட காலங்களில் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தலவிருட்சம்- பஞ்சவில்வம்; தீர்த்தம்- சிவதடாகம்; ரட்சகர்- காசி பைரவர்.

சிறப்புகள்:

சித்திரை மாதம் 7, 8, 9 தேதிகளில் மட்டும் சூரியன் உதயம் ஆகும்போது, கோவிலின் உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அமைப்புடன் இக்கோவிலின் வடக்குபுற வாசல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் சூரியனே, இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக ஐதீகம்.

ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை நவக்கிரக பரிகாரத் தலங்களில் சனிபகவானுக்குரிய பரிகாரத் தலங்களுள் ஒன்றாக இந்த கோவிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆலயத்தில் சனிபகவானுக்கு நைவேத்தியம் செய்யும்போது, அவருடைய வாகனமான காக்கைகள் கூட்டமாக வந்து அர்ச்சகர் போடும் அன்னங்களை சாப்பிட்டுச் செல்லும். இந்த நேரத்தில் தோஷ நிவர்த்தி செய்பவர்களும் இந்த ஆலயத்தில் உள்ள காக்கை, மாடு, நாய் – இவற்றிக்கு அன்னம் போடுவர்.

அப்படிச் செய்தால் தோஷங்கள் நீங்கி தங்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். சனிபகவான், சிவபெருமானை வழிபட்டு, பாவ விமோசனத்தைப் பெற்றதால், திருநள்ளாருக்கு அடுத்தபடியாக இங்கு தான் அவர் சின் முத்திரையுடன் காட்சி தருகிறார்.சென்னை அனைத்து பகுதியில் இருந்தும் இந்த கோவிலுக்குச் செல்ல பேருந்து மற்றும் ரெயில் வசதி உள்ளது.சென்னை விமான நிலையத்தின் பின்புறம் 2 கிலோமீட்டர் தொலைவிலும், பல்லாவரம் ரெயில் நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது இந்த கோவில்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *