சுஜாதாவின் தங்க முடிச்சு : புத்தக விமர்சனம்

மோகன்குமார்

புதிதாக கதை எழுதுவோருக்கு சுஜாதா சொல்வார் : “உங்கள் தெருவில், அலுவலகத்தில் உங்களைச் சுற்றி என்னென்ன உள்ளது என்பதை எந்த அளவு கவனிக்கிறீர்கள்? முதலில் இதை ஆழ்ந்து கவனியுங்கள். இந்த, கூர்மையான பார்வை இன்றி எழுதவே முடியாது !” .

ஒரு குழப்பமான முடிச்சை போட்டு விட்டு படத்தின் முக்கிய கேரக்டர் இப்படி உன்னிப்பாய் கவனித்த ஒரு சிறு விஷயம் மூலம் அந்தச் சிக்கலை விடுவிப்பது தான் தங்க முடிச்சு !

கதை

தமிழ் சினிமாவில் வசன உதவியாளனாக இருப்பவன் கரிகாலன். இவனுக்கு ஒரு படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தில் புது நாயகி சுலேகா அறிமுகம் ஆகிறாள். படத்தின் தயாரிப்பாளர் வி. ஜி.ஆர் இவளை மலையாள திரை உலகிலிருந்து அழைத்து வருகிறார். தயாரிப்பாளரின் மச்சான் முரளி அவருடனே இருந்து உதவி வருகிறான்.

கரிகாலனுக்கு சுலேகாவைப் பார்த்ததும் பிடித்துப் போய் கவிதை எழுதுகிறான். அவளுக்கு தமிழ் சொல்லித் தரும் பொறுப்பு இவனுக்குத் தரப்படுகிறது. சுலேகா அவனிடம் ஒரு பிலிம் ரோல் தந்து, அந்த போட்டாக்களை டெவலப் செய்யும்படி கேட்கிறாள் . தான் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை மணக்கப் போவதாகவும் சொல்கிறாள்.
திடீரென ஒரு நாள் சுலேகா கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலை நடந்து சில மணி நேரங்களில் கரிகாலன் அவள் வீட்டுக்குச் செல்வதால் போலீசுக்கு சந்தேகம் அவன் மீது விழுகிறது. பாண்டியன் என்கிற போலீஸ் அதிகாரி கேசை துப்பறிந்து கொன்றது யார் என கண்டுபிடிப்பதுடன் கதை முடிகிறது.
***
சினிமாத் துறை என்பது கனவுத் தொழிற்சாலை என சும்மாவா சொன்னார்கள்? ஒவ்வொருவருக்கும் அதன் உள்ளே என்ன நடக்கிறது என அறிய மிக ஆர்வம் தான் ! இக்கதை நடக்கும் தளம் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் என்பதே நிறைய சுவாரஸ்யத்தைத் தந்து விடுகிறது. அந்த கொலை நடந்த பின் கதை த்ரில்லர் வகைக்குச் சென்று விடுகிறது.

சினிமா இண்டஸ்ட்ரி குறித்து ஒரு பாத்திரம் மூலமாக இப்படி சொல்கிறார் சுஜாதா:

” தினப்படி பாண்டியன் எக்ஸ்பிரசில் இருபத்தாறு பேராவது சென்னைக்கு சினிமா ஆசையுடன் வருகிறார்கள். அவர்களுக்கு என் அறிவுரை: வேண்டாம் ! வீடு திரும்புங்கள் ! அங்கே பீன்ஸ் வியாபாரம் செய்யுங்கள் ! லாட்டரி டிக்கட் விற்பனை செய்யுங்கள். இந்த பிழைப்பு வேண்டாம். யாரும் கேட்கப் போவதில்லை. இருந்தாலும் சொல்லி விட்டேன் !”

எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் அழுத்தமாகச் சொல்கிறார் பாருங்கள் ! டிபிகல் சுஜாதா !

போட்டோ ரோலை டெவெலப் செய்ததும் அதில் படத்தின் தயாரிப்பாளர் வி. ஜி.ஆர், சுலேகாவுடன் நெருக்கமாக இருக்கும் படங்களைப் பார்த்து நமக்கும் சற்று ஆச்சரியமாக தான் உள்ளது. சுலேகா மணக்க இருந்தது வி. ஜி.ஆர் -ஐ தான் என்று தெரிய வருகிறது .

கொலையைச் செய்தது தயாரிப்பாளர் வி. ஜி.ஆர், அவர் மனைவி அல்லது அவர் மச்சான் என்று தான் நினைக்கிறோம் (கதையின் பாத்திரங்கள் அவ்வளவு தான் !) அவர்களில் ஒருவர் தான் கொலை செய்தவர் ! அதற்கான காரணம் தான் நாம் ஊகிக்க முடியாத படி இருக்கிறது.

கொலையை வேறு ஆள் வைத்து செய்யாமல் இவ்வளவு பணம் உள்ளவர்கள் தானேவா செய்வார்கள் என்பது மட்டுமே ஒரே உறுத்தல் !

தங்க முடிச்சு என்கிற தலைப்பு வெறும் அலங்காரமாக இல்லாமல் கதைக்கு செமையாக பொருந்துகிறது.

சினிமா பின்னணியில் எழுதப்பட்ட இந்த சுவாரஸ்யமான திரில்லரை அவசியம் வாசியுங்கள் !

நாவல் : தங்க முடிச்சு
பதிப்பகம்: கிழக்கு
விலை: ரூ : ௦60

 

படத்திற்கு நன்றி :

http://www.facebook.com/pages/Writer-Sujatha/215266258484029?v=info

1 thought on “சுஜாதாவின் தங்க முடிச்சு : புத்தக விமர்சனம்

  1. வழக்கமான மாத நாவலுக்கு உரிய கதைதான் என்றாலும் சுஜாதாவின் நடையால் இதற்குத் தனிக் கவனம் கிடைக்கிறது. இதையும் யாரேனும் திரைப்படமாக எடுத்தால், வியப்பதற்கு இல்லை.

Leave a Reply

Your email address will not be published.