முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

 

புதுவை எழில்

முனைவர் மு.வ – அக்கால இளைஞர் அனைவர் நெஞ்சிலும் இடம் பெற்ற மூத்த தமிழ் அறிஞர்.அவர்தம் நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் கொண்டாடி வருகிறார்கள், தாய்த் தமிழகத்தில். ஐரோப்பாவில் அதனை முதலில் கொண்டாடிய பெருமை பிரான்சு கம்பன் கழகத்தையே சாரும். தமிழறிஞர்கள், தமிழுக்கு உழைத்தவர்கள், விடுதலை வீரர்கள் எனப் பலருக்கும் நூற்றாண்டு விழா எடுக்கும் நல்ல வழக்கம் இக் கம்பன் கழகத்துக்கு உண்டு. அந்த வரிசையில், 19.02.2012 ஞாயிறு அன்று பிரான்சு கம்பன் கழகம், முனைவர் மு;வ அவர்களுக்கு விழா எடுத்தது. அத்துடன் தைப் பொங்கல், தமிழர் புத்தாண்டு விழாக்களும் சேர்ந்து கொண்டன. முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற்றது. விழா தொடங்கவதற்கு முன் மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும் மாதர்களுக்குக் கோலப் போட்டியும் நடைபெற்றன.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட நேரப்படியே விழா தொடங்கியது. மரபுப்படி மங்கல விளக்கை ஏற்றியவர்கள் திருமிகு செல்வா, உமா இணையர்.ஐரோப்பிய பராளுமன்றம் இருக்கும் Strasbourg நகரில் இருந்து விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் சிறப்பு விருந்தினர் திருமதி முனைவர் இராச இராசேசுவரி பரிசோ. முனைவர் மு.வ அவர்களின் நெருங்கிய நண்பரும் புதுவைக்குப் புகழ் சேர்த்தவர்களுள் ஒருவரும் புதுச்சேரியின் முனனாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர், அமரர் கு.சிவபிரகாசம் அவர்களின் தவப் புதல்வி. ஆடல் பாடல் என்று பல கலைகளில் வல்லுநராக விளங்கும் சகலகலா வல்லி. இவர்கள் தம் இனிய குரலில் இறைவணக்கம் பாடினார்கள். நூற்றாண்டு விழாத் தலைவர் மு;வ அவர்களுக்காக, கவிஞர் கி.பாரதிதாசன் இயற்றிய பாடலுக்கு அவையிலேயே இசை அமைத்துப் பாடி அனைவரையும் கவர்ந்தார். பின் கம்பன் கழக இளையோர் அணியினர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

கம்பன் கழகத்தின் பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் அனைவரையும் வரவேற்றார் ; கழகத்தின் துணைத் தலைவர் திருமிகு கி அசோகன் விழாவுக்குத் தலைமை தாங்கி முனைவர் மு.வ பற்றி நல்லதோர் உரை ஆற்றினார். கம்பன் இலக்கண இலக்கியத் திங்கள் இதழ் சார்பாக ‘மு;வ நூற்றாண்டு விழா’ மலர், ‘அன்னை தெரெசா மலர்’, ‘கவிஞர் தமிழ்ஒளி மலர்’ ஆகிய மூன்று மலர்களை வெளியிட்டவர் திருமிகு அ. நாகராசன். இவர் பல்லாண்டுகளாகத் தனி ஒருவராக உழைத்துப் பிரஞ்சு-தமிழ் அகராதி உருவாக்கியவர். கழகத்தின் இளங்கவிஞர் திருமதி அருணா செல்வம் எழுதிய ‘நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்’ என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் கவிமணி விசயரத்தினம்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மேடை ஏறினார் மூன்று வயது செல்வன் யுவராசன் என்னும் ஆதவன் செங்குட்டுவன். ஔவையாரின் ஆத்திசூடியை ஒரு வரி பிசகாமல் ஒன்றல்ல இரண்டல்ல 108 வரிகளையும் தன் மழலை மொழியில் தடங்கல் இல்லாமல் உரைக்கக் கேட்ட அவையோர் அசந்து போயினர். ஒளவையின் படைப்பை அந்த ஔவை வணங்கும் முருகப் பெருமானே வந்து ‘உபதேசம்’ செய்தது போலவே இருந்தது.

சிறப்புரை ஆற்றும் பொறுப்புடன் எழுந்து வந்தார் பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. தனக்கே உரிய எடுப்பான குரலில் மிடுக்கான நடையில் அடுக்கு மொழியில் நகையைக் கலந்து சுவையைக் குழைத்து முனைவர் மு;வ அவர்களைப் பற்றிய தம் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார். அருவி எனப் பெருகி வந்த அவரழகுத் தமிழிப் பேச்சில் அவையினர் உருகிப் போய் ஆழ்ந்து இருந்து சுவைத்தனர். ‘தன் தலை சிறந்த மாணாக்கருள் ஒருவர் என மு;வ அவர்கள் பாராட்டியதைத் தம் வாழ் நாளின் பெரும் பேறாகக் கருதுவதை எடுத்துச் சொன்ன அவர், தம் பேராசிரியர் மு;வ பற்றியும் அவர் பணியாற்றிய சென்னைப் பலகலைக்கழகம் பற்றியும் இதுவரை பிறர் அறியாத பல செய்திகளைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

தொடர்ந்து கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தலைமையில் பொங்கல் கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. தலைமைக் கவிதையில் அவர், இல்லாக் கடவுளை அழைத்துப் பாடியது – இறைவன் எங்கெல்லாம் இருக்க மாட்டான் என்று வரிசையாகச் சொல்லி அங்கெலாம் இல்லாக் கடவுள் – எனக் கவிதையில் சொன்னது புதுமையாக இருந்தது. தொடர்ந்து கவிஞர்கள் அருணா செல்வம், பாரீசு பார்த்தசாரதி , பாமல்லன், மருத்துவர் சிவப்பிரகாசம், லிங்கம் மாமல்லன், சிவ அரி முதலானோர் பொங்கல் கவிதைகள் படைத்தனர்.

இறுதி நிகழ்ச்சியாகப் பட்டி மன்றம். தலைப்பு சிக்கலானது.

“ஊழ் பற்றித் திருவள்ளுவர் கூறும் கருத்துகள் இக்காலத்தில்
கொள்ளத்தக்கனவே – தள்ளத்தக்கனவே”.

நடுவராக அமர்ந்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, “ஊழ் – வினை இவ்விரண்டுக்கும் வள்ளுவர் முடிச்சு போடவில்லை. முடிச்சு போட்டு, ‘ஊழ்வினை’ என உரைத்தவர் இளங்கோவடிகள். எனவே நீங்களும் முடிச்சு போட வேண்டா ” என்று வேண்டுகோள் விடுத்தார். ஊழ் என்பதற்குப் பொதுவாக ‘விதி’ என்று கொள்வோம் என முதல் பேச்சாளர் கூறியதை நடுவர் ஏற்றுக் கொண்டார். கொள்ளத்த்தக்கனவே என்று திருமதிகள் எலிசபெத் அமல்ராசு, சுகுணா சமரசம், கவிஞர் பாரதிதாசன் பேசினார்கள். தள்ளத்தக்கனவே எனத் திருமதிகள் லூசியா லெபோ, ஆதிலட்சுமி வேணுகோபால், அருணா செல்வம் பேசினர்.அவரவர்களும் தத்தம் கோணத்தில் தம் கருத்துகளை வலியுறுத்தினர். நடுவர் தன் முடிவை அறிவித்தார் :

ஊழ் அதிகாரத்தின் குறள் ஒவ்வொன்றையும் படித்து அதன் பொருளைச் சொல்லி அதற்கும் ‘ஊழ்’ என்னும் விதிக்கும் தொடர்பு இல்லை எனத் தெளிவாக விளக்கி ஆகவே, ‘ஊழ்’ பற்றி வள்ளுவர் சொல்லும் கருத்துகள் இக்காலத்துக்கும் அறிவுக்கும் பொருத்தமாக இல்லை ; ஊழ் என்ற அதிகாரமே வள்ளுவர் இயற்றியதாக இருக்க முடியாது ; கடைசிக் குறள் மட்டுமே ஊழ் பற்றிக் குறிப்பிடுகிறது. அதனை மட்டும் வேண்டுமானால் ஊழ் பற்றிய வள்ளுவர் கருத்தாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதனையும் விஞ்சும் மாற்றுக் கருத்தை – antidote- ஆள்வினை உடைமை அதிகாரக் கடைசிக் குறளில் வள்ளுவர் கூறிச் செல்கிறார். எனவே திருவள்ளுவர் ‘விதி’யை ஏற்றுக் கொள்ளவில்லை, மனிதனின் மதியையும் முயற்சியையுமே வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்காட்டுகள் பல காட்டி ‘ஊழ்’ அதிகாரத்தில் வள்ளுவர் கூறியதாகச் சொல்லபடும் கருத்துகள் தள்ளத்தக்கனவே’ என்று தன் தீர்ப்பை ஆணித்தரமாக நிலை நாட்டினார்.

 

ஓவியப் போட்டி கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நூல், குறுந்தகடு எனப் பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கு கொண்ட இளைய மகளிர்க்கு அழகிய பட்டு மேலாடையும் (shawl) இளைஞர்களுக்குத் துண்டுகளும் பெரியவர்களுக்கு நூல்களும் பரிசாகக் கடைத்தன. இறுதியில் திருமிகு பழ.சிவஅரி, கழகத்தின் துணைப் பொருளாளர், நன்றி கூறினார். திருமதிகள் சுகுணா சமரசம் சிவகாமி சிவகுமார் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். .

நிறைவாக, இனிக்கும் பொங்கல், மணக்கும் கிச்சடி எனச் சுவை மிகும் உணவை மக்கள் வயிற்றில் வாங்கினர் ; முனைவர் மு.வ அவர்களை நெஞ்சில் தாங்கினர். விழா இனிதே நிறைவுபெற்றது.

வழக்கம்போல் சுவையான உணவு வழங்கிய திருமதி குணசுந்தரி பாரதிதாசன் அவர்களுக்கும் தமிழுக்கென விழாக்களைச் சலியாது எடுக்கும் கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களுக்கும் பாராட்டுகள்.

நேரடி வருணனை : புதுவை எழில்
படங்கள் : திருமதி லூசியா லெபோ.

1 thought on “முனைவர் மு.வ நூற்றாண்டு விழா

 1. ஊழ் என்னும் நம்பிக்கை இந்நாட்டில் வள்ளுவர் காலத்திற்கும்
  முன்பே உள்ளது. அந்த ஊழால் மனித குலம் இன்ப துன்பங்களில்
  உழன்றுகொண்டிருக்கிறது. எனவே ஊழின் இயல்பைச் சொல்லி
  அதிலிருந்து விடுபட்டு மேன்மை அடையும் வழியைச் சொல்லுகிறது
  திருக்குறள். ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி உலகில் பெரிய
  சாதனை படைத்தார். ஆனால், அவரால் பேசமுடியாது, கேட்க முடியாது,
  பார்க்க முடியாது. அவருடைய சாதனைக்குப் பின்னால் ஒரு ஆசிரியை
  இருந்தார் என்பதை எண்ணும் பொது பெருமிதமாக உள்ளது.
  “பொறியின்மை யார்க்கும் பழி அன்று அறிவறிந்து
  ஆள்வினை இன்மை பழி” என்ற குறளில் ஊழை எப்படி வெல்லலாம்
  என்ற வள்ளுவர் வாசகத்தை மெய்ப்பித்தவர் ஹெலன் கெல்லர்.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க