பூனைகள் தேடுகின்றன
பிச்சினிக்காடு இளங்கோ
பாவனை காட்டுதலையே
பூனைகள் செய்கின்றன;
‘பரவாயில்லையே இந்தப்பூனை!’
எனப்பெயரெடுக்க
நடத்துகிற நாடகமே எல்லாம்.
எலிகள் என்றதும்
பூனைகளின் முகத்தில்
எத்துணைக் கரிசனம்!
எலிகளைத் தேடாத
பூனைகளைத்தேடி
விரயம் செய்யாதீர்கள் காலத்தை.
முடிந்தால்
நீங்கள் எலிகளைத் தேடாமல் இருங்கள்,
இருந்து பாருங்கள்.
முன்னுதாரணம் இல்லாத
தடயத்தில்
முடிந்தால் நீங்கள்
பயணம் செய்யுங்கள்
முன்மாதிரியாய் வாழுங்கள்.
தயவு செய்து
முன்னோடிகளைத் தேடாதீர்கள்
எல்லாப் பூனைகளும்
எலிகளைத்தான் தேடுகின்றன
எலிகளைத் தேடாத
பூனைகள் என்றெண்ணி
ஏமாந்து விடாதீர்கள்.
மனதில் நிறுத்துங்கள்
சில
அலைந்து தேடுகின்றன,
சில
அலையாமல் தேடுகின்றன,
தேடுதல் மட்டுமே
நிரந்தரம்.
படத்திற்கு நன்றி:http://superiorplatform.com/animals/cats/hunting/chasing_cats.htm