இப்படியும் மாணவர்கள் உண்டு

0

சு.கோதண்டராமன் 

அண்மையில் ஒரு மாணவன் தன் இந்தி ஆசிரியையைக் குத்திக் கொன்றான் என்ற துயரமான செய்தி என் வாழ்க்கையில் 1966ஆம் வருடம் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டியது.

கும்பகோணத்தில் உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வழக்கமான வேலையோடு பத்தாம் வகுப்பில் (அப்போதைய ஐந்தாவது பாரம்) இந்தி நடத்தும் வேலையும் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்திய கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது போன்ற வன்முறைகள் நடந்தன. தமிழ்நாடு முழுவதும் எல்லாப் பள்ளிகளும் 2 மாத காலம் மூடப்பட்டு இருந்தன. மாணவர்களுக்கு இந்தி மீதும் இந்தி ஆசிரியர்கள் மீதும் ஒரு வகையான பகைமை உணர்ச்சி இருந்தது.

அன்று வகுப்புக்குள் நுழைந்தவுடன் மாணவர்களுக்கு ஏதோ எழுத்து வேலை கொடுத்தேன். பெரும்பாலான மாணவர்கள் எழுதத் தொடங்கினர். ஒரு மாணவன் மட்டும் எழுந்து, “நாங்கள் எதற்காக சார் இந்தி படிக்க வேண்டும்?” என்று உரக்கக் கேட்டான். அத்துடன் நில்லாது மற்ற மாணவர்களை நோக்கி “எழுதாதீங்கடா” என்று அறைகூவல் விடுத்தான். கண்டிப்பான ஆசிரியர் என்று பெயர் வாங்கிய என்னால் இதைப் பொறுக்க முடியவில்லை. இந்த ஒழுங்கீனத்தை முளையிலேயே கிள்ளா விட்டால் அது பெரு மரமாக வளர்ந்து இன்னல் தரும் என்று உணர்ந்தேன். அவனருகில் சென்று ஓங்கி ஒரு அறை கொடுத்தேன். அடி நான் எதிர்பார்த்ததை விடச் சற்றுப் பலமாகவே விழுந்து விட்டது. அவனுடைய சிவந்த கன்னத்தில் என் விரல்கள் பதிந்து ரத்தச் சிவப்பான வரிகள் தெரிந்தன. வகுப்பு பிரமிப்பில் அமைதியானது.

எங்கேனும் எடிசன் போலக் காது செவிடாக ஆகிவிடுமோ என்று எனக்கு உள்ளூர உதைப்பு. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அடித்ததை நியாயப்படுத்துவதற்காகப் பேச ஆரம்பித்தேன். “இங்கு நீ கற்பது ஒரு மொழி. அது ஆட்சி மொழியாக வர வேண்டுமா, வேண்டாமா என்பது பாலிடிக்ஸ். பள்ளியில் பாலிடிக்ஸுக்கு இடமில்லை. உனக்குப் படிக்க இஷ்டமிருந்தால் படி. இல்லை என்றால் டீ.சி. வாங்கிக் கொண்டு போ” என்று கத்தினேன். கனத்த அமைதியுடன் அந்தப் பாடவேளை நகர்ந்தது.

வழக்கமாகச் சைக்கிளில் வருபவன், சைக்கிள் பழுது பட்டதால் அன்று காலையில் வீட்டிலிருந்து பள்ளிக்குப் பஸ்ஸில் வந்திருந்தேன். மாலையில் பஸ்ஸுக்கு நின்று பார்த்தேன். இரண்டு பஸ்களில் இடமில்லை என்று சொன்னார்கள். அப்பொழுதெல்லாம் பஸ்ஸில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலே அரை டிக்கெட் கூட அதிகமாக ஏற்ற மாட்டார்கள். நேரம் ஆக ஆகச் சுவாமிமலை செல்லும் பஸ்ஸில், பேருந்து நிலையத்திலேயே ஏறி விடும் பக்தர்கள் கூட்டம் காரணமாகச் சக்கரப் படித்துறை நிறுத்தத்தில் நின்ற எனக்கு இடம் கிடைக்கும் வாய்ப்புக் குறைவு என்று உணர்ந்ததால் நடக்கத் தொடங்கினேன். சற்று நேரம் கழித்துப் பின்னாலிருந்து “சார்” என்று அழைப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் – காலையில் என்னிடம் அடி வாங்கிய குத்புதீன். ‘சரிதான், பழி தீர்க்க வந்திருக்கிறான்’ என்று நினைத்தேன்.

என் விறுவிறுப்பை விட்டுக் கொடுக்காமல் ‘என்ன?’ என்று அதட்டினேன். “ஏன் சார் நடந்து போறீங்க? சைக்கிளில் போங்க சார்,” என்று தன் சைக்கிளை எனக்கு முன் நிறுத்தினான். ஒரு சைக்கிளில் இருவர் போவது தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. இல்லாவிட்டால் அவன் என்னைப் பின்னால் உட்கார்த்தி வைத்து அழைத்துச் சென்றிருப்பான். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இதில் ஏதேனும் தந்திரம் இருக்குமோ? “வேண்டாம்பா. நான் நடந்து போறேன். நீ போ” என்றேன். அவன் பிடிவாதமாக நான் சைக்கிளில் தான் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கூடவே நடந்து வந்தான். அவன் பிடிவாதம் வென்றது. அவனுடைய சைக்கிளை வாங்கிக் கொண்டேன். “வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நான் வந்து எடுத்துக் கொள்கிறேன்” என்று எனக்கு விடை கொடுத்து அவன் நடக்கத் தொடங்கினான்.

4 கி.மீ. தூரம் நடந்து சைக்கிளை எடுத்துச் செல்வதற்காக என் வீட்டிற்கு வந்தான். “இன்னா செய்த நான் நாணும்படியாக நன்னயம் செய்து ஒறுத்து விட்டாயடா, என்னை மன்னித்து விடடா, குத்புதீன்” என்று மனம் புலம்பியது. என் வாய் “நன்றிப்பா” என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் உதிர்த்தது. மீதியை என் பனித்த கண்கள் பேசின.

 

படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-5122813/stock-photo-casual-student-or-teacher-in-a-classroom-full-of-students.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *