திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும்
அன்பு நண்பர்களே,
மதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.
பாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.
Malar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி. மகளிர் வாரத்தில் மலர் சபாவை வாழ்த்தி வரவேற்பதில் நம் வல்லமை பெருமை கொள்கிறது.
அன்புடன்
ஆசிரியர்.
வல்லமையின் இவருடைய முதல் படைப்பாக இதோ A Strong Woman Versus A Woman Of Strength என்ற ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்.
மலர் சபா
திடமான பெண்
கட்டுடலை வடிவமைக்க
வளைந்து நெளிந்து
உடற்பயிற்சிகள் செய்வாள்;
பலமான பெண்
ஆழமான தன் உள்நோக்குடன்
ஆன்மாவை வடிவமைப்பாள்.
திடமான பெண்
எந்தவொன்றுக்கும்
அஞ்சுவதேயில்லை.
வலிமையான பெண்
பயம் சூழும் தருணங்களில்
மனவுறுதியில் நிலைத்திருக்கத்
தவறுவதேயில்லை.
திடமான பெண்
தன்னுள் சிறந்த
எந்தவொன்றையும்
பிறர் கொள்ள விடுவதில்லை;
வலிமையான பெண்
தன்னுள் சிறந்தவற்றை
அனைவருக்கும்
கொடுக்காமல் இருப்பதில்லை.
திடமான பெண்
தவறுகள் செய்வாள்;
வருங்காலத்தில்
அத்தவறுகள் தவிர்ப்பாள்.
வலிமையான பெண்
நேரும் தவறுகளையும்
வரங்களாய் உணர்ந்து
அவற்றின் பலங்களைச் சுவீகரிப்பாள்.
திடமான பெண்
உறுதியான
தன் கால்களால்
தானே அடியெடுத்து வைப்பாள்;
வலிமையான பெண்
உதவி கோரும் தருணங்களை
நன்கு உணர்ந்திருப்பாள்.
திடமான பெண்
தன் முகத்தில்
நம்பிக்கையின் சாயல்
அணிந்திருப்பாள்.
வலிமையான பெண்
தன் முகத்தில்
கருணையருளின் சாயல்
அணிந்திருப்பாள்:
திடமான பெண்
தன் பயணத்துக்கான பலம்
தன்னில் உள்ளதென
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.
வலிமையான பெண்
தன் பயணத்தில்தான்
தனக்கான பலம் கிடைக்கிறதென்று
நன்னம்பிக்கை கொண்டிருப்பாள்.
படத்திற்கு நன்றி : http://chipstreet.com/2009/07/10/on-strong-women-characters/