நாகேஸ்வரி அண்ணாமலை

“மாதராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்று பாடிவிட்டுப் போய்விட்டார் ஒரு தமிழ்க் கவி. நான் கவியாக இருந்தால் மாதராய்ப் பிறப்பதை விட பிறவாமல் இருப்பதே மேல் என்று பாடியிருப்பேன். ஏனெனில் மாதராய்ப் பிறந்தவர்கள் பட்ட பாடு, படும் பாடு சொல்லி மாளாது. எனக்கு விபரம் தெரிந்த நாட்களிலிருந்து எத்தனையோ பெண்கள் படும் பாட்டைப் பார்த்து அதிர்ந்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன்; அங்கலாய்த்திருக்கிறேன்; என்ன இந்தக் கவி இப்படிப் பாடிவிட்டார் என்று காரணத்தை அறிய முயன்று பதில் கிடைக்காமல் அல்லலுற்றிருக்கிறேன். ‘இறைவா, ஏன் இந்தப் பெண்களைப் படைத்தாய்’ என்று இறைவனிடம் முறையிட்டிருக்கிறேன். என்ன செய்து என்ன? என் கேள்விகளுக்கோ என் புலம்பலுக்கோ செவிசாய்ப்பவர் யாருமில்லை. பாதிக்கப்பட்ட பெண்களிடமே தங்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்ளும்படி மன்றாடியிருக்கிறேன். எந்த வித பலனும் கிடைக்கவில்லை. இந்தியப் பெண்கள் வெகுவாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களை எப்படி மாற்றுவது? எப்படி இவர்களுடைய வாழ்க்கையை கொஞ்சமாவது உன்னதப்படுத்துவது என்று பல வருடங்களாக, பலவாறாக யோசித்திருக்கிறேன். பெண்கள் பற்றி எழுதக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள்தான் என்னுடைய இந்த உளைச்சலுக்கு ஒரு சிறிய வடிகாலாக அமைகிறது.

என் தலைமுறை உட்பட, என் தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி என்று நான்கு தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறேன். 0.1 சதவிகிதப் பெண்களைத் தவிர மற்ற எல்லாப் பெண்களும் வாழ்க்கைச் சக்கரத்தில் அகப்பட்டுக்கொண்டு வாழ்க்கையை எப்படியோ கழித்திருக்கிறார்களே தவிர யாரும் தங்கள் நலனுக்காக போராடியதாகத் தெரியவில்லை. போன தலைமுறை வரை பெண்களால் போராட முடிந்திருக்குமா என்பது வேறு விஷயம்.

இந்தியக் கலாச்சாரம் தொன்மையானது, அதை மாற்ற நினைப்பதுவே பாவம் என்ற போதனையை, கொள்கையை, தத்துவத்தை இந்தப் பெண்களின் மனதில் நன்றாகவே சமூகம் பதிய வைத்திருக்கிறது. ‘என் தாய் செய்தார், அதனால் நானும் அதையே தான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தும், ‘நம் தலைவிதி இப்படி அமைந்துவிட்டது அதை யாரால் மாற்ற முடியும்’ என்று நினைத்தும் இந்தப் பெண்கள் தங்கள் நிலையை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்கார, உயர் ஜாதிக் குடும்பங்களில் பிறந்தவர்களில் ஒரு சிலர்தான் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்றனர். அடுத்த தலைமுறையில் அடுத்த இடத்தில் இருந்த ஜாதிகளில் சிலர் பள்ளிக்குச் சென்றனர். அடுத்த தலைமுறையில் பள்ளிக் கல்வியாவது பெண்களுக்கு வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தனர். அரசு, ஜாதி என்ற ஏணிப்படியில் மிகக் கீழே இருப்பவர்களுக்கும் சில சலுகைகள் கொடுக்க ஆரம்பித்ததும் அங்கிருந்தும் பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்தனர். ஆனாலும் ‘தொன்மை’ வாய்ந்த இந்தியக் கலாசாரத்தை ஒரு சில பெண்கள் தவிர யாரும் எதிர்க்கத் துணியவில்லை.

பெண்ணாகப் பிறந்துவிட்டால் சிறு வயதிலிருந்தே சமையல், வீட்டைப் பராமரிப்பது போன்ற கலைகளைத் தாயிடமிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ பயிலுவது, பின் திருமணம் செய்துகொண்டு கணவன் வீட்டிலும் பயின்ற இந்தக் கலைகளை மேலும் வளர்த்துக்கொண்டு அவற்றை நடைமுறையில் பின்பற்றுவது போன்றவைதான் பெண்களின் வாழ்க்கையாக இருந்திருக்கிறது.

சரி, இப்போது பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், சில குடும்பங்களில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் சமைப்பதும் வீட்டு நிர்வாகமும் மட்டுமே இப்போதும் பெண்கள் கையில் இருக்கிறது. மற்ற எல்லா அதிகாரங்களும் அவர்களுடைய கணவன்மார்கள் கையில்தான். இதைப் பெண்களே கூட உணருவதில்லை. ஏனெனில் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, ‘கல்லானாலும் கணவன்’, ‘புல்லானாலும் புருஷன்’ என்ற பழைய யுகத்தில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கணவனின் செய்கைகளிலோ நடத்தையிலோ இவர்கள் எந்தக் குறையையும் காண்பதில்லை; காண விரும்புவதும் இல்லை.

சமீபத்தில் ஒரு பெண்ணிடம் “உன் தந்தை உன் திருமணத்தின் போது உனக்குக் கொடுத்த ஒரு சொத்தைத் தவிர மற்ற எல்லாச் சொத்துக்களையும் உன் புருஷன் தொலைத்துவிட்டான். நீ இப்போது ஒன்றும் இல்லாமல் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறாய். உன் புருஷனை விட்டு இப்போதாவது விலகி வந்துவிட முடியாதா? இருக்கிற சொத்தையாவது உன் எதிர்காலத்திற்காகப் பாதுகாத்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்ட போது “நான் கிறிஸ்தவள். எங்கள் வேதமாகிய பைபிளில் ‘பிற பெண்களோடு தொடர்பு கொண்டு உனக்குத் துரோகம் புரிந்தாலொழிய உன் கணவனை விட்டு நீ பிரியக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறது. அதனால் அவரை நான் பிரிய மாட்டேன். அப்போதுதான் என்னால் இறந்த பிறகு இறைவனுடைய மன்றத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கணக்குக் கொடுக்க முடியும். அவர் எனக்குத் தீங்கு இழைத்ததாக நீங்கள் கருதினால் அதற்குரிய தண்டனையை இறைவன் அவருக்கு அளிப்பார்” என்று அவள் கொடுத்த பதில் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. இது என்ன பேதமை! இதற்கு நான் என்ன பதில் சொல்வது?

இந்தியாவில் இப்படியென்றால் அமெரிக்காவில் பெண் சுதந்திரம் என்ற பெயரில் சில பெண்ணீயவாதிகள் பேசிப் பேசி அவர்களை வேறு மாதிரிக் குழப்பியிருக்கிறார்கள். பாலுறவைப் பொருத்தவரை ஆண்கள் செய்கிற தவறுகளையெல்லாம் பெண்களும் செய்யலாம் என்ற கருத்தை பெண்கள் மனத்தில் பதிய வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி போதனைகளும் கருத்தடை மாத்திரைகள் சந்தையில் தாராளமாகக் கிடைத்ததும் திருமணத்திற்கு முன்பே பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்து, இப்போது அமெரிக்காவில் பிறக்கும் பத்துக் குழந்தைகளில் நான்கு குழந்தைகளுக்கும் மேல் திருமணமாகாதவர்களுக்குப் பிறக்கின்றன. இதனால் தனித்தாய்மார்களின் எண்ணிக்கை பெருகி, இவர்கள் குழந்தைகளை வளர்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். பல குழந்தைகள் தகப்பன் இல்லாமல் வளர்கின்றன. அதில் பலர் சமூக விரோதிகள் ஆகிறார்கள். சமூகத்தின் தூண்களில் ஒன்றாகிய குடும்பம் என்ற அமைப்பு இப்போது சிதறுண்டு கிடப்பதற்கு இந்தப் பெண்ணீயவாதிகளின் கைங்கரியமும் ஒரு காரணம். ஆண்களுக்குரிய உரிமைகள் எல்லாம் பெண்களுக்கும் வேண்டும் என்பது ஆண்கள் செய்து வரும் தவறுகளை பெண்களும் செய்யலாம் என்று அர்த்தமல்ல. அந்தத் தவறுகளை ஆண்களும் செய்யக் கூடாது என்பது மட்டுமே.

அமெரிக்காவில் பெண்கள் முன்னேற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் அதற்கு மேலேயே போய்விட்டார்கள். அவர்களை, எப்படி அவர்கள் தாண்டிப் போய்விட்ட எல்லையிலிருந்து திரும்பக் கொண்டுவருவது என்றுதான் ஆலோசிக்க வேண்டும்.

இந்தியாவில்தான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது கல்வியைப் பொறுத்த வரை ஆண்களோடு பெண்களும் சமமாக – ஒரு சில குடும்பங்களில் தவிர – பங்கேற்கிறார்கள். பெண்ணிற்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்பதற்காக இல்லாவிட்டாலும் குடும்பத்தின் நிதி நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காகவாவது இது நடந்து வருகிறது. ஆனால் மற்ற உரிமைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். ஆண்டாண்டு காலமாக மூளைச்சலவை செய்யப்பட்ட இந்தப் பெண்களை எப்படி இந்த மூளைச்சலவையிலிருந்து காப்பாற்றுவது?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் தேதி உலகப் பெண்கள் தினம். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெண்களின் உரிமைகள் பற்றியும் அவற்றை அவர்கள் எப்படித் தக்கவைத்துக்கொள்வது பற்றியும் சொற்பொழிவுகள், விவாதங்கள் மூலம் அவர்களுக்கு அறிவுறுத்தலாம். சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் எல்லா மாணவர்களுக்கும் ஆண்கள் எப்படிப் பெண்களை நடத்தவேண்டும் என்பதற்கும் பெண்கள் எப்படித் தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் பாடங்களை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வைக்கலாமே. ‘இளமையில் கல்’ என்று நம் பெரியவர்கள் சொல்லியிருப்பது கணிதத்தையும் விஞ்ஞானத்தையும் படிப்பதற்கு மட்டுமே என்று ஏன் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்? காலத்துக்கேற்ற நல்ல படிப்பினைகளையும் படிப்பதற்கு இளமைக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்வோமே. அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள். இப்படி அறிவுரைகளை மறுபடி மறுபடி சொல்லித்தான் ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் மாற்ற வேண்டும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மகளிர் வாரம் – பெண்கள் முன்னேற்றம்

  1. கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் கிடைத்த பெண்கள், பெரும்பாலும் தங்கள் முடிவைத் தாங்களே எடுக்கத் துணிகிறார்கள். இவை கிடைத்த பின்னும் பெண்கள் பலர், ஆண்களின் எல்லைக்குள்ளேயே இருக்கக் காரணம், அவர்களின் பிள்ளைகளே. என் குழந்தையின் எதிர்காலத்துக்காக நான் என் வாழ்வைத் தியாகம் செய்கிறேன் எனச் சொல்லும் பலரைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவு உயரத்தில் பட்டமெனப் பறந்தாலும் பாசம் என்ற நூல்தான் பெண்களை இயக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *