சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்
இராஜராஜேஸ்வரி
சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளே மகளிர் தின நாள், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் சமூக நலத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உட்பட பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்துப் பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்ணியப் போராட்டங்கள் ஆரம்பமாகி நூற்றாண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் ஆணுக்குப் பெண் நிகராகப் பல்வேறு துறைகளில் பெண் தடம் பதித்திருந்தாலும், அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சுற்றியுள்ள சக பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறைகளைப் பதிவு செய்வதன் மூலம் பெண்ணின் குரலை உரத்து ஒலிக்கச் செய்து. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்!
சமூகத்தின் சரி பாதிக்கும் அதிகமாக உள்ள பெண்கள் அவர்களின் சக்தியை உணர்ந்து வெளி உலகத்தைப் புரிந்து கொண்டு முன்னேற்றப்பாதையில் நடை போட வைப்பதோடு ஒரு வீட்டை நிர்வகிக்க வேண்டிய பெண்ணிற்கு அடிப்படை வேலைகளையும், அனுசரித்துப் போகும் பக்குவத்தையும் அன்னையே ஊட்டி வளர்க்க வேண்டும்.
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்குச் சமம். பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாயம் அறிவும் வளர்ச்சியும் பெறுகிறது. தாங்கும் பூமியையும் பூமாதேவியாக, மலரும், நதியும் மதியும் பெண்ணென்று சிறப்பித்தனர்.
“விண்ணுலகின் கவிதை மலர்கள் விண்மீன்கள்.
மண்ணுலகின் கவிதை மலர்கள் பெண்கள்”
தந்தையின் அன்பு கல்லறை வரை, தாயின் அன்பு உலகுள்ள வரை. வாஞ்சையின் சரித்திரம்தான் பெண்ணின் வாழ்க்கை.
பெண்மை வாழ்கென்றும் பெண்மை வெல்கென்றும் கூத்திடு வோமடா!
உயிரைக் காக்கும்,உயர்வினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இனிதாவது பெண்மையே!!
அன்னம் ஊட்டி அமுதூட்டி வளர்த்த தெய்வமணிக் கையின் ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
காதலியர் கடைக்கண் காட்டினால் மானுடர்க்கு மாமலையும் சிறு கடுகுதானே! நல்லதோர் வீணை செய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறியாமல் சுடர் மிகும் அறிவுடன் இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கு வல்லமையுடன் வகை செய்வோம்.
தையல் வாழ்க பல்லாண்டு பல்லாண்டிங்கே! ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்..
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்பாத திறம் உய்த்துணர்வோம்.
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேர்ந்து, ஓது பற்பல நூல்வகை கற்கவும், நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்து பாரத தேசமோங்க உழைப்பதில் பெண்கள் பங்கும் உண்டு.
சாத்தி ரங்கள் பலகற்று சவுகரியங்கள் பல பெற்று மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; செல்வம் சம்பாதித்து வையம் புதுமையுறச் செய்து மனிதர் தம்மை அமர்களாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னையாய் திகழும் புதுமைப் பெண் ஒளி விளக்காய் வழி காட்டிடுவாள்!
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி பேணி வளர்த்திடும் ஈசன்;
கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம் பேதைமை அற்றுச் சிறந்து ஓங்கி வளரும்.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை” என்று சான்று பகர்கின்றனர்.
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் சாதம் படைக்கவும் தெய்வச் சாதி படைக்கவும் வல்லமை பெற்றவள், காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து, மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்விற்கு வளம் சேர்ப்பவள் பெண்.
மண்ணில் இட்ட விதை மண்ணின் சாரத்தை எடுத்தே வளர்கிறது.அதனால் மண்ணின் வளம் குன்றும். நீரின் பெருமை எழுத்தில் அடங்கா. தன் இயல்பான தூய்மையை, தன்னை இழப்பதில் முன்னிலை. ‘தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்காதே’ என்பது பழமொழி. தாய் தன் அங்கத்தில் உடல் அளித்து உதிரத்தை உணவாக ஊட்டுகிறாள். சிசுவைத் தன்னில் ஒரு பாகமாகவே கருதி அன்பை அளிக்கின்றாள்.
காலத்தின் போக்கிலும், நாகரீகத்தின் ஏற்றத்திலும் மிகவும் மாறியவர்கள். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையே படித்துத் தகுதி பெற்ற பெண்கள்தான் என்று கூறுமளவிற்கு தகுதி பெற்றவர்கள். ஆண்களுக்கு நிகரான தகுதியுடனும், திறனுடனும் அவர்கள் உழைக்கின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கலை என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உயர்நிலைகளில் அவர்களும் உள்ளனர். இந்த யுகத்தில் வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களுக்கு உள்ளது. வீட்டிலிருந்து கொண்டே குடும்பத் தேவைகளைக் கவனித்துக் கொண்டு பணிகளைச் செய்யவும் அவளால் முடியும். இதுமட்டுமல்ல, வெளியில் இருந்து தகவல்களைப் பெற்று வீட்டிலிருந்தபடியே வணிகத்தை செய்யும் ஆற்றலும் அவளிடம் உள்ளது.
குடும்பம் முதல் சமூகம் வரை பரவியுள்ள பெண்ணைக் குறித்த சிந்தனைகள் மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமும் வழங்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் புரிந்து கொண்டு அதனைச் சரியான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெண்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பெண்கள் சுயமாகப் பலம் பெற்று அதற்குத் தேவையான பின்புலமாக ஆண்கள் மாறி ஒரு கூட்டான முயற்சியின் வாயிலாகத்தான் பெண்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்ய இயலும்.
மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும். அனைத்துச் சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்” என்று கருத்திற் கொண்டு பயனுறக் கொண்டாடுவோம். மகளிர் தினத்தை.
படத்திற்கு நன்றி: