மகளிர் வாரம் – உலகு தொழும் கற்புக்கரசி — மும்தாஜ் மகல்

அவ்வை மகள்

அன்புத் தோழிகளே! தோழிகளுக்குத் தோழமையாய் – துணையாய் வந்திருக்கும் என்னருமை சகோதரர்களே! தாய் தந்தையர்களே! குழந்தைகளே! இவ்வருட மகளிர் வாரத்தின் விழாவிற்கு நேரம் ஒதுக்கி நீங்கள் திரண்டு வந்திருக்கும் இந்த நல்லதொரு சாட்சி என்னுள் – மனிதம் எனும் நீரோட்டம் வற்றாது என்றும் எனும் நம்பிக்கை வெளிச்சத்தை மீண்டும் தோற்றுவிக்கிறது. உமக்கு – உமது வரவுக்கு – எனது நன்றி கலந்த வணக்கங்கள்.

இந்த மிகச் சிறந்த நாளில் இல்லத்தரசி எனும் தலைப்பில் என்னைப் பேசப் பணித்திருக்கிறீர்கள். இவ்வகையில் உலகின் தலை சிறந்த இல்லத்தரசியான – ஒரு அரசியைப் பற்றிப் பேசுவோம். குடும்பப் பெண்களை இல்லத்தரசிகள் எனும் பண்பாடு நம் இந்திய மண்ணின் பாரம்பரியம். சரி, இல்லத்தரசி என்னும் “Definition” அரசிகளுக்குப் பொருந்துமா? என்ற கேள்வியை எழுப்புவோம். அவர்கள் ஏற்கனவே அரசிகள் தாம்! இருப்பினும் அவர்களுக்கு இல்லம் எனும் ஒரு முறைப்படியான அமைப்பு உண்டா? சாதாரணப் பெண்களைப்போல அவர்கள் இல்வாழ்க்கை வாழுவதுண்டா? (வாழ்ந்ததுண்டா?) 

சிந்திக்கிறீர்கள். நன்று.

நாடாளும் மன்னனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழும் அரசிகள் -எடுக்கவும் பிடிக்கவும் ஏவலாளிகள் என்ற படி – செல்வமும், செல்வாக்கும், அதிகாரமுமாய் வாழ்பவர்கள் – உண்மைதானே!

இவர்களுக்கு அடுக்களை என்பது அறியாத ஒன்று. கேட்ட மாத்திரத்தில் எது வேண்டுமானாலும் அரசி இருக்கும் இடத்திற்கு வரும். சாதாரணக் குடும்பப் பெண்களைப் போன்று கணவனோடு இயல்பாக வாழ்வு நடத்தும் பாக்கியமும் இவர்களுக்கு இல்லை. ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் அந்தப்புரத்திற்கு அவ்வப்போது வரும் அரசனுடன் உறவாடுவது மட்டுமே முடியும் என்பதான நிர்ப்பந்தம் இவர்களுக்கு! – உண்மைதானே! இத்தகைய அரசிகளுக்கு இல்லறம் என்று ஒன்று உண்டா? என்பதே கேள்வியல்லவா!

ஆம் சாதாரண இல்லத்தரசிகளுக்கு இருக்கின்ற சுதந்திரமும், இயல்பான சுகமும் கூட இல்லாதவர்கள் அரசிகள். இத்தனைப் பற்றாக்குறைகளுக்கும். இடைஞ்சல்களுக்கும் இடையில் ஒரு அரசி இல்லற தர்மம் தவறாது வாழ்ந்து காட்டி மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறாள். அவளது சரித்திரம் இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிலும் பிரசித்தி!

அர்ஜுமான்ட் பானு பேகம் எனும் அவள் செய்து காட்டியிருக்கிறது சர்வசாதாரணமான சாதனை இல்லை! இல்லற தர்மத்தோடு நடந்துகொள்ளவேண்டியத் தேவையோ கட்டாயமோ இல்லாத ஒரு சூழலில் இருந்து வருபவள் அவள். ராமனைப்போல அவள் புருஷன், குருகுல வாழ்க்கையேகி ஆசான் போதித்த தனிமனித ஒழுக்கம் எனும் பாடம் படித்து – அந்தக் குறிக்கோளைக் கட்டாயம் – கொள்ளவேண்டிய தேவை இல்லாதவன்.

ஹாஜஹான் முகலாயப் பரம்பரையிலிருந்து வருபவன் பலதார மணம் என்பது பழக்கமாகவும் – சல்லீசான விஷயமாகவும் – இருந்துவரும் தர்மம் கொண்ட குல ஒழுக்கம் அவனுடையது. பல தாரங்கள் வைத்திருந்தும், அதையும் தாண்டி – ருசிக்காகவும் – அந்நேரப் பசிக்காகவும் அப்போதைக்கப்போது புதுப் புதுப் பெண்களைத் துய்க்கவும் சுதந்திரம் கொண்டவர்கள் மன்னர்கள். எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கச் செய்யும்படியான அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவன் மன்னன்.

புருஷன் என்றால் அவனுக்குப் பல பெண்களுடன் தொடுப்பு இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டேதான் முகலாயப் பெண்களும் – ஏன் முகலாய அரசிகளும் வாழ்வதான காலம் அது! – இதனை எதிர்க்கவும் முடியாது – தடுக்கவும் முடியாது – முதலாவதாக – இது ஒரு தவறு என்று கூட நினையாத காலம் அது.

நிச்சயதார்த்தம் முடிந்து – திருமணம் நடத்த – நல்ல ஓரைக்காக ஐந்து ஆண்டுகள் திருமணத்திற்காய்க் காத்துக் கொடிருந்தவள் பானு பேகம். அதுவும் அந்த இடைக் காலத்தில், ஷாஜஹான் இரு பெண்களுடன் தொடர்பு வைத்து அவர்களுக்குத் தலா ஒரு குழந்தைவேறு உற்பத்தி செய்து தந்து விட்டான் என்று வேறு கேள்வி. இத்தகையதொரு சூழலில், அவனைத் திருமணம் செய்து கொண்ட பானு பேகத்திற்கு நான் இனி “ஏக பத்தினி விரதனாக இருப்பேன்” என அவள் கணவன் ஒரு முகலாய மன்னன் சத்தியப் பிரமாணம் செய்கிறான் என்றால் – பானு பேகம் எனும் பெயர் கொண்ட அந்தப் பெண் – அந்த மனைவி எத்தனை அற்புதமானவளாக இருந்திருக்க வேண்டும்!

அவளது அழகு ஒப்பற்றது – அவளது அழகைப் பற்றி சரித்திரப் பதிவுகள் நிறையவே பேசுகின்றன. ஆனால் குர்ராம் எனும் ஷாஜஹான் அவளது அழகுக்குக் கட்டுப் பட்டு அவளுக்கு இந்த சத்தியத்தை வழங்க வில்லை. அவனைக் கட்டிபோட்டது அவளது அழகு இல்லை – நடத்தை ஒன்று மட்டுமே!

நன்னடத்தை பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பானு பேகத்தின் வாழ்வில் நாம் காணுகிறோம். நான் ஏற்கனவே சொன்னது போல பானு பேகம் பேரழகி! அவளது ஒவ்வொரு அசைவும் கூட அத்தனை அழகு தான்! அவள் அழகை மட்டுமே காப்பியங்களாக வடிக்க முடியும் தான்! அதுவும் அவளுக்கு இருக்கின்ற வசதி வாய்ப்புகளுக்கு – அவள் தனது பட்டுடல் மேனியைக் கட்டு போகாது – யௌவனம் குன்றாது பலப்பல ஆண்டுகள் காக்கவும் முடியும்!

ஆனால் – அவள் சிந்திக்கிறாள் – அழகு என்பது பிறக்கும் போதே எனக்கு இயற்கையாய் அமைந்து போன ஒன்றில்லையா? – இதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது? நான் எனும் இவ்வுடல் நானா? இது என் தாய் தந்தை போட்ட பிச்சையல்லவா? இவ்வாழ்வில் எந்தாய் எந்தை தந்த இந்த அழகையும் அவர்கள தந்த இன்னபிற சீதனங்களையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினால் – அந்த வாழ்க்கை என் சொந்த வாழ்க்கையாக இருக்க முடியுமா? அதை எனது வாழ்க்கை என்று நான் உரிமை கொண்டாட முடியுமா?

“நான்” என்கிறது என் தனிப்பட்ட ஜீவன் அல்லவா – அந்த ஜீவனுக்குரிய அடையாளம் யாது? அந்த ஜீவனுக்குரிய கடமை யாது?” என வினவுகிறாள் – தனது ஆன்மாவைத் தானே குடைந்தெடுக்கிறாள்.அதே நேரம் அவளது இன்னொரு உள்மனப் பரிமாணம் இன்னொன்றையும் காட்டுகிறது – “உன் குடும்பப் பாரம்பரியம் முழுவதிலும் உன் வீட்டுப் பெண்கள் – கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு – அதிகார வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு – அட்டகாசமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே – அதுபோல நீயும் போக வேண்டியதுதானே? அது சுலபமாயிற்றே! ஏன் இந்த வறட்டுப் பிடிவாதம் – தேவையற்ற சிந்தனை?” எதிர் நீச்சல்? எதிரும் புதிருமாய் எண்ண அலைகள் – எது உண்மை எனத் தேடும் வீரிய வேகம் – பானு பேகம் எண்ண அலைகளினுள்ளே புரண்டு – புரண்டு எழுகிறாள் – விழுகிறாள்.

திருமணமாகி, தனது வாழ்க்கையை எந்த நோக்கில் – எதனைக் குறித்து – வளர்க்க வேண்டும் என்கிற இந்த விசாரத்திலே ஐந்து ஆண்டுகள தன்னை முழுவதுமாக அவள் ஈடுபடுத்திக் கொள்கிறாள். இந்த விசாரம் – சுய அலசல் – இது சொந்தப் பிரக்ஞை –அரண்மனை வாசத்தில் பானு பேகம் எனும் பெண் செய்த – ஆன்ம அக்கினிப் பரிட்சை இது. வேறெவர் கேட்டோ அல்லது வேறு ஏதோ ஓர் நிகழ்வு நிர்ப்பந்தித்தோ அவள் இந்த சுய வேள்வியில் ஈடுபடவில்லை.

இந்த அரண்மனை வாழ்க்கையில் – அதிகாரம் முக்கியமா – அந்தஸ்து முக்கியமா – அல்லது இவை நழுவிப்போகாமல் பாதுகாக்க வேண்டிய கடமை முக்கியமா என்கிற ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுகிறாள். அங்கு விரிந்து நிரவிக்கிடக்கும் ஒராயிரம் செல்வங்களிலும் உயர்ந்த செல்வம் எது என அவள் தேடுகிறாள். அடுத்தடுத்து அவள் சிந்தனை விரிவடைகிறது!

அரண்மனை – அரசாட்சி – அங்குள்ள மாபெரும் பரபரப்பு – பாதுகாப்பு – பெருத்த சுற்றம் – அதிகாரம் – அந்தஸ்து – அவளுக்கு வாழ்வில் மிகப்பெரிய பலம் தான் என்பது புரிகிறது. ஒருவேளை அவளுக்கு வாழ்வில் எதிர்பாராத சோதனைகள் வந்தாலும் கூட – அவள் கவலைப் படவேண்டியதில்லை – கணவனே இறந்தாலும் கூட – அவளுக்கு எவ்விதத் துன்பமும் வந்து விடாது – நிலைத்த சொத்துக்களும் – பொன்னும் – மாணிக்கமும் – வைரமும் – பணமும் என பத்து பரம்பரை உட்கார்ந்து சாப்பிடும் செல்வச் செழிப்பு அவளுக்கு ஏற்கனவே உறுதி செய்யப் பட்டிருக்கிறது! – இதையும் அவள் காண்கிறாள்!

வேறொரு பெண்ணாய் இருந்தால் – என்னை எவராலும் அசைக்க முடியாது என்கிற நினைப்பே தோன்றியிருக்கும் ஆனால் பானு இவ்வித சந்தோஷத்திலே தன்னை நிறுத்திக்கொள்ளவில்லை.தொடர்ந்து தனது சிந்தனைப் பார்வையைச் செலுத்துகிறாள்.

தனக்கு அமைந்துள்ள வசதி வாய்ப்புகளுக்குப் பின்னால் – மெல்லிய பின்புலமாய்ப் பின்னல் வலை என அமானுஷ்யமாய்ப் பின்னப்பட்டுக் கண்ணிகள் புதைக்கப்பட்ட வகையாய் மாயங்கள் நிறைந்த – மனுஷயங்கள் மறைந்த – அந்தக் காட்சியை அவள் மனத்திரை – மனைத்திரை காட்டுகிறது!
அந்நிலையில் தனது உறவுக்காரர்கள் ஒவ்வொருவரையும் தனது மனக்கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறாள் – அந்த உறவின் தராதரத்தை எடை போட்டுப் பார்க்கிறாள். இவ்வாறு உறவுகள் அத்தனையையும் அவள் அலசி முடித்தத் தருணத்தில் அவளுக்கு ஒன்று உறுதியாய்ப் புரிகிறது: ஒரே உறவு மட்டும் தான் தனக்கு முக்கியமானது என்பது.

அதே நொடி, தான் ஒரே ஒரு உறவுக்கு மட்டுமே பரிபூரணமாய் பாத்யதைப் பட்டவள் என்பதும் பிற உறவுகள் யாவும் இரண்டாம் பட்சமே என்பதும் அவளுக்குப் புரிகிறது. அந்த உறவு எத்தனை உயர்வானதோ அத்தனைக் கத்தனை பொறுப்புகள் நிறைந்தது என்பதையும், அந்த உறவை நம்பி எத்தனை ஜீவன்கள் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன – அந்த உறவு எத்தனை – அபாயகரமான சூழல்களில் பொருந்தியிருக்கிறது என்பது.

இத்தனை ஆய்வு நிகழ்த்தியபோது அவளுக்கு எத்தனை வயது தெரியுமா? பதினாலிலிருந்து பதினெட்டு! பதினாலில் நிச்சயதார்த்தம் பதினெட்டில் திருமணம் – இந்த இடைப்பட்ட காலம் – – இவை எல்லாவற்றையும் அவள் புரிந்து கொள்ளுகிறாள். அவளது உடலில் – பருவத்தில் – முதிர்ச்சி இல்லை – ஆனால் – உள்ளத்தில் முதிர்ச்சி – ஆன்ம பலம்!

கம்பளிப் புழு கூட்டுப் புழுவாகி – கூட்டுக்குள் இருந்தபடியே எதிர் கால சிந்தனைகளோடு இயங்கும். கம்பளிப்புழுவாய் இருந்தபோது ஒரே பாதுகாப்புக் கவசமாய் இருந்த அந்தக் கம்பளி ரோமங்கள உதிர்த்து – முழுமையான நிர்வாணமாகி – எதிர்கால வாழ்வைச் சிந்தித்தபடி – சுயம்புவாய் புதுவிதமாய் பிறக்கும் – எழும்பும் அந்தப் பட்டாம்பூச்சியைப் போல அவள் அரண்மனை எனும் கூட்டில் ஐந்து ஆண்டுகள் – தனது வாழ்க்கைக்காக – தனது கணவனின் வாழ்க்கைக்காக – அவனை நம்பி வாழும் நாட்டு மக்களின் வாழ்க்கைக்காகத் தன்னைத் தயார் செய்து கொள்ளுகிறாள்.

இந்த, சுயத் தயாரிப்பை அவள் எவர் சொல்லியும் செய்யவில்லை. சொல்லப்போனால் அவளது சூழலில் அவளை தர்மத்துக்கு எதிராகச் சிந்திக்கவைக்கும் தூண்டிவிடும் உறவுகளே அதிகமாக இருந்தன. குறிப்பாக அவளது அத்தை நூர்ஜஹான் – ஷாஜஹானின் அன்னை. பிள்ளையையும் விட அவள் செல்வத்தினையும் அதிகாரத்தையுமே அதிகமாக நேசித்தாள் – இன்னமும் இன்னமும் செல்வம் வேண்டும் – இன்னமும் இன்னமும் அதிகாரம் வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டவள் நூர்ஜஹான்.

இதக் காண்கிறாள் பானு பேகம். அரண்மனையின் ஆர்ப்பரிப்புகளிலோ – சஞ்சலங்களிலோ அவள் ஆர்வம் காட்டவில்லை – அவளது அத்தை நூர்ஜஹான் அதிகாரத்தைக் கைப்பற்றும் எத்தனையோ தந்திரங்களை – சாகசங்களை நிகழ்த்துகிறாள் – இவை எதிலும் தான் மாட்டிகொள்ளதவாறு தள்ளி நிற்கிறாள் பானு பேகம்.

அரண்மனை வாசம் என்றால் – அங்கு படாடோபங்களும் – சாங்கியங்களும் – ஏராளம்! ஆனால் பானு இவற்றுள் எதை விடுப்பது, எதைத் தாண்டுவது – எதனை மட்டும் எடுத்துக் கொள்ளுவது என்பதிலே அதிகமாகச் சிந்தனையைச் செலவிடுகிறாள்.

ஆக மனக்குகையில் அவள் நிகழ்த்திய மனப்போராட்டம் முடிவுக்கு வருகிறது குகையின் இறுதியில் வெளிச்சம்!!

இவ்வாறு, பானு பேகம் ஒரு முறையான வகையில் – முழுமையான வகையில், மனைவியாகத் தான் பதவியேறத் தேவையான அத்தனைத் தார்மீககத் தேவைகளையும் சுய வேள்வியால் – அறிந்து கொண்டு அவ்வகையிலேயே இயங்குவேன் என்ற உறுதி கொண்டு உருமாறுகிறாள்.

திருமணம் நடந்தேறிய காலை அது ஒரு சடங்கே தவிர – ஏற்கனவே மொத்தமான ஒரு மனைவியாய் – சுத்தமான ஒரு மனைவியாய் – நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு மனைவியாய் – பதிவிரதையாய் – அவள் தனக்குத் தானே ஷாஜஹானுடன் சுயம் வரம் நிகழ்த்திக்கொண்டாகி விட்டது!

தெய்வம் தொழாது கொழுநன் தொழுதே அவள் எழுந்தாள். அவளது சொல் செயல் சிந்தனை யாவிலும் ஷாஜஹான் மட்டுமே! அவள் உறங்கிய நேரம் வெகு சிறிதானது. அந்தச் சிறு போதும் கூட அவள் எண்ணம் யாவும் ஷாஜஹானையே பற்றி நின்றது. இந்த ஒருமித்தநிலையை அவள் அடைந்து விட்டது மாபெரும் முதல் வெற்றி!

பானு பேகத்தின் நடத்தை – சிரத்தை – அன்பு – உண்மை – அபிமானம் – கவனிப்பு – ஆதரவு – பற்றுதல் – இவை கண்டு குர்ராம் (ஷாஜஹான்) இளகிப் போகிறான் கரைந்து போகிறான் – “மும்தாஜ் மகல்” என்று அவளுக்குப் பட்டப் பெயர் சூட்டுகிறான். “மும்தாஜ் மகல்” என்றால் “அரண்மனைக்கு என்றே பொருத்தமாய் அமைந்தவள்” (Chosen One of the Palace) என்பது அவனது விளக்கம்.ஏற்கனவே மும்தாஜ் என்றால் “பிரமாதத்தின் தொட்டில்” (Cradle of Excellence) என்பது பொருள்.

மனைவி மும்தாஜ் மகல் தந்த பலம் ஷாஜகானுக்குள்ளே மாபெரும் பலத்தை வளர்க்கிறது – அரச வாழ்க்கையின் – அலைச்சலிலே – “நான் தோற்றுப் போய்விடுவேனோ” எனும் பலவீன எண்ணம அவனை விட்டு ஒழிகிறது – வாழ்விலே முதன் முதலாகப் புதுத் தெம்பும் நம்பிக்கையும் அவன் பெறுகிறான். இளங்கோவடிகள் சொன்னது போல் கற்புக்கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது பொற்புடை தெய்வம் யாம் கண்டிலமால்” என்றே ஷாஜஹானின் உள்ளம் மும்தாஜ் மகலைத் தொழுதேத்துகிறது.மும்தாஜ் மகல் எனும் இந்த ஒப்பற்ற உண்மைக்கு – நானும் உண்மையாய் இருப்பேன் என உறுதி கொள்ளுகிறான் – அவள் அழகு செய்ய இயலாத சாதனையை அவளது நடத்தை செய்கிறது. “மும்தாஜ் மகலிடம் சத்தியம் செய்கிறான். உன்னை விட்டு வேறு பெண்களை நான் நினையேன்” என்று ராமனிருக்குமிடம் சீதை என்பார்களே அதை அப்படியே வாழ்ந்து காட்டியவள் மும்தாஜ். ஷாஜஹான் சென்ற இடமெல்லாம் அவனுடன் சென்றாள் – வனவாசம் போனாலும் பிரியாத சீதையாக – அவனை விலகாது நின்றாள். முகலாயப் பேரரசு முழுவதும் அவள் ஷாஜஹானுடன் பயணித்திருக்கிறாள் மும்தாஜ்.

கணவனுக்குப் பணிவிடைகள் செய்வதோடு அவனுக்குத் தோழியாக – ஆலோசகராக – மந்திரியாக – தாயாக என அவளது சேவைப் பரிமாணங்கள் பலப்பலவாகும். அவளது பொறுப்பும் – விவேகமும் கண்டு தனது ராஜாங்கத்து முத்திரையை மும்தாஜ் மகலின் பொறுப்பில் வைத்திருந்தான் ஷாஜஹான் என்றால் அவளிடம் அவன் எத்தனைப் பாதுகாப்பு உணர்வு கொண்டிருந்திருப்பான் என்பதைப் பாருங்கள்!

அன்றைக்கு இருந்த நாட்டுச் சூழல் – அரண்மனைச் சூழல் – பிரத்யேகமான அவளது உறவுச் சூழல், வித்தியாசமான அவளது கலாச்சாரச் சூழல் இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கிறபோது இவ்வாறு தனது கணவனை நிழல்போல் பாதுகாக்க அவள் எத்தனையோ இடர்பாடுகளைச் சந்தித்திருக்க வேண்டும் என்று தெளிவாய்த் தோன்றுகிறது. அதுவும் அவள் தொடர்ச்சியாய்க் கருத்தரிக்கிறாள் – தொடர்ந்து குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாள் – மடியில் குழந்தை – கையில் குழந்தை – நடக்கும் குழந்தை – வளரும் குழந்தை என அவள் குழந்தைகளைச் சுமந்து கொண்டு – தொடர்ப் பிரயாணம் மேற்கொண்டிருக்கிறாள் – இன்றஈகு இருப்பதைப் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லாத மின்சாரம் இல்லாத காலம் அது – பதினான்கு குழந்தைகள் பிறந்து – நான்கு குழந்தைகள் இறந்து வேறு போயிருக்கின்றன! காடு – மேடு – மலைகள் – பள்ளத் தாக்குகள் பாலவனங்கள் – ஆறு – குளம் ஏரி – எனக் கணவனுடன் அவள் எங்கும் துணைக்கு நின்றிருக்கிறாள்.

இவ்வகையில் அவள் பட்டிருக்கும் பாடு இவ்வுலகில் வேறெந்த பெண்ணும் பட்டிருப்பாளா என்பது சந்தேகமே! அதுவும் அவள் அரசி – சாதாரணப் பெண்ணல்ல – ராமனுடன் காட்டுக்குச் சென்ற சீதைக்கு இருந்த தார்மீகச் சிந்தனைகளை நிர்ப்பந்திக்காத சமயம் அவளுடையது! எல்லாப் போர் முனைகளிலும் அவள் ஷாஜஹானுடன் கூடவே இருந்தாள். பிறருடன் நடந்த போர்கள் மட்டுமா – ஷாஜஹானுக்கும் – அவனது தந்தையாகிய ஜகாங்கீருக்கும் நடந்த சண்டையின் போதும் கூட அவள் அவனுடன் இருக்கிறாள்.

1631 ல் தக்காணப் பீடத்தில் பர்ஹான்பூரில் ஷாஜஹான் ஒரு போரில் இருக்கிறான். அவனுடன் மும்தாஜ் சென்றிருக்கிறாள், நிறைமாத கர்ப்பிணி. பதினைந்தாவது குழந்தையைப் பிரசவிக்கிறாள் – இயலவில்லை – பதினான்கு குழந்தைககள் பெற்று பலவீனமான உடம்பு – கடுமையான வானிலை – முறையான மருத்துவ வசதிகள் இல்லாத சூழல் – போர் வேறு நடந்து கொண்டிருக்கிறது – பிரசவப்போரில் தோல்வி – உயிர் நீக்கிறாள் மும்தாஜ்.

பர்ஹான்பூரில், அவளது உடல், தபதி நதிக்கரையில், ஜெயின்பாத் எனும் அழகிய சோலையில் அடக்கம் செய்யப் படுகிறது. மும்தாஜின் மறைவால் ஷாஜஹான் நொறுங்கிப் போகிறான். அவனை எவராலும் தேற்ற இயலவில்லை. தன்னைத் தானே தனி அறையில் பூட்டிக் கொண்டு தனிமையிலே இருக்கிறான். எவருடனும் ஒரு வாரத்தை கூடப் பேசவில்லை!

பதினோரு மாதங்கள் கழித்து, ஷாஜஹான், தானே தனக்கு உருவாக்கிக் கொண்ட தனிமைச் சிறையிலிருந்து வெளிப்படுகிறான். அவ்வாறு வெளிப்பட்டபோது அவன் அப்படியே நேரெதிராய் உருமாற்றம் அடைந்திருந்தான். அவனது தலை முடி நரைத்துப் போயிருந்தது – முதுகு கூன் போட்டிருந்தது – முகம் பழுத்த கிழம் போல் இருந்தது!

அவனை – மூத்த மகளான – ஜகானாரா பேகம் அரவணைத்துக் கவனித்து – அவனை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குக் கொண்டு வருகிறாள். தனிமைச் சிறையில் இருந்த போது தனது மனைவியும் உலகின் ஒப்புயர்வற்ற பெண்ணுமான மும்தாஜ் மகலுக்கு –உலகின் ஒப்புயர்வற்றதான நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என விரும்பியதோடு – அது எவ்வாறு அமைய வேண்டும் என மிகமிக நுணுக்கமாக் ஆய்வு செய்திருக்கிறான் ஷாஜஹான்.
தாஜ் மகல் யமுனை நதிக்கரையில் இந்த இடத்தில் இருக்கவேண்டும் – என்பதனை அத்தனைத் துல்லியமாக தீர்மானித்திருக்கிறான். அந்த இடம் அப்போது ஜெய் சிங் மகாராஜாவுக்கு சொந்தமாய் இருந்தது. தனது விலை மதிப்பற்ற ஆக்ரா அரண்மனையை அந்த இடத்திற்குப் பிரதியாய்க் கொடுத்து அவ்விடத்தை வாங்கினான் ஷாஜஹான்.

1631 டிசம்பரில் மும்தாஜ் மகலின் சவப்பெட்டி – பர்ஹாம்பூர் தோட்டத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு – ஒரு தங்கரதத்தில் – ஏற்றப்பட்டு – ராஜ மரியாதையுடன் – சகல பாதுகாப்புக்க்களுடன் – வெகு கவனமாக ஆக்ராவிற்குக் கொண்டு வரப்பட்டது – மீண்டும் – புதைக்கப்பட்டது – தாஜ் மகல் – சிரஞ்சீவியானாள்.

தாஜ் மகலைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆயின. உலகின் உயர்தரமான பொருட்களும் – உயர்தரமான கட்டுமானர்களும் மட்டுமே இதில் பயன்படுத்தப் பட்டன – பட்டனர் . உலகின் நம்பர் ஒன் சலவைக் கற்கள் – நவரத்தினங்கள் – கட்டிட வடிவம் – நுண்ணிய வேலைப்பாடுகள் ஆகியன – குறிப்பிடத்தக்கவை. மொத்தம் இருபதாயிரம் பணியாளர்கள் தாஜ் மகல் கட்டுமான வேலையில் ஈடுபட்டனர். தாஜ் மகலின் கட்டிட நேர்த்தியைப் பற்றிப் பேசத் தனி அத்தியாயம் வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் கட்டாயம் சொல்லியாக வேண்டும். அது என்னவென்றால் – தாஜ் மகலை அனைவரும் ஒரு காதல் சின்னமெனவே நம்பிவருகின்றனர். ஆனால் தாஜ்மகால் உண்மையில் காதல் சின்னமல்ல அது கற்பின் சின்னம். உலக அதிசயங்களில் ஒன்றான இச்சின்னத்தைக் காண – உலகம் முழுவதிலுமிலிருந்து மக்கள் வருகிறார்கள் – வியக்கிறார்கள்!

கற்புக்கு நாம் வைத்திருகின்ற உயரிய ஸ்தானம் தாஜ் மகாலில் நிலை பெற்றிருக்கிறது!

தாஜ் மகல் என்பதை நாம் தாஜ்மகால் என்கிறோம் – அதனை மகால் என்பதை விடப் பத்தினிக் கோயில் என்பதே பொருத்தமானதாகும். தாஜ் மகல் நம்மிடையே தோன்றி வாழ்ந்து போயிருக்கிற அசாதாராணமான பெண்.

அவள் புவியரசி பெற்றெடுத்த பொன் மகள்! பின்பற்றும் சமயம் எதுவாயினும் அங்கே கற்பென்னும் காப்பு தரும் பாதுகாப்பை வேறந்த ஒன்றும் தர இயலாது எனத் தனது சொந்த வாழ்க்கை வாயிலாகப் பதிவு செய்து போயிருக்கிறவள் மும்தாஜ் மகல். அவள் காட்டியிருக்கிற – நிலைநாட்டிப் போயிருக்கிற – முன்னுதாரணம் உலகில் வேறெந்தப் பெண்ணும் இதுகாறும் செய்திராத சாதனை.

இலக்கியங்கள் இதுகாறும் காட்டிப் போயிருக்கிற அத்தனைப் பத்தினிப் பெண்களையும் பலவகைகளில் விஞ்சி நிற்கிறாள் மும்தாஜ் மகல். அது மட்டுமல்ல – அவள் ஒரு “ப்ரொபஷனல் உமன்” – குடும்பப், பொறுப்பு மட்டும் கொண்ட குடும்பப்பெண் அல்ல – அரசுப் பணியிலே நேரிடையாக இருந்தவள் – அதுவும் அவளது பணி கடுமையான நிர்வாகப் பணி. அந்த நிர்வாகம் பலதிறப்பட்ட நிர்வாகத் திறமைகளை உள்ளடக்கியது – தொடர் பிரயாணங்களை உள்ளடக்கியது – பல நெருக்கடியான உறவுத் தொல்லைகளை உள்ளடக்கியது. சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் தாய்மை எனும் தலையாய பொறுப்பை உள்ளடக்கியது – இருப்பினும் மும்தாஜ் மகல் எந்த ஒரு நொடியும் அலட்டிக்கொள்ளவில்லை – ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.
பெண் எனும் முதலாயக் கடைமையை அவள் முழுவதுமாக அறிந்திருந்தாள். மனைவி எனும் நுட்பமான உறவின் தாத்பர்யங்களை அவள் முற்றிலுமாக உணர்ந்திருந்தாள் – தாய்மை எனும் – தவறவொண்ணாப் பதவியை அவள் பெரிதும் போற்றினாள். அரசனின் துணைவி – நாட்டு மக்களுக்குப் பாதுகாவலாய் – பொறுப்பான தலைவியாய் இருக்க வேண்டும் என்கிற கடமையை அவள் பணிவோடு ஏற்றுக் கொண்டாள்.

“கற்பெனும் திண்மை உண்டாகப்பெறின்” பெண்ணிற் பெருந்தக்க யாவுள?
எனும் வள்ளுவர் “தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” என்று பெண்ணின் இல்லறக் கடப்பாட்டுக்கு ஒரு இலக்கணம் கற்பிக்கிறார். இந்தக் குறளுக்கு மாற்று மருவில்லாத உதாரணம் மும்தாஜ் மகல்.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை எனும்படியான சிறப்பான வாழ்க்கையை ஷாஜகானுக்கு அமைத்துக் கொடுத்தவள் அவள்.

பாரதி தொழுத கண்ணம்மாவாக கணவன் போற்றும் – தொழும் தெய்வமாக அவள் வாழ்ந்து காட்டினாள். நின்னைச் சரணடைந்தேன் என்ற பாரதிப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஷாஜஹானின் உளநிலையைத் தெற்றெனக் காட்டுவது சத்தியம்.

நீங்களே கேளுங்கள் –மனத்திரையில் பாருங்கள்!

நின்னை சரணடைந்தேன் , கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

பொன்னை , உயர்வை , புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென்று ..

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன , கொன்று அவை போக்கென்று

தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்து இங்கு..

நின் செயல் செய்து நிறைவு பெரும் வண்ணம்

துன்பம் இனி இல்லை , சோர்வில்லை
சோர்வில்லை , தோற்பில்லை

நல்லது தீயது நாம் அறியோம் நாம் அறியோம் நாம் அறியோம் ….

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட , தீயவை ஒட்டிட

இன்று பெண்களுக்கு எத்தனையோ வசதி வாய்ப்புக்கள் உள்ளன. அன்றைய காலம் போலக் கூட்டுக் குடும்ப பிரச்சினைகள் கூட இல்லை . அப்படியிருந்தும் கூட – நான்கு சுவற்றுக்குள்ளே அவர்களால் அமைதியாய்க் குடும்பம் நடத்த இயலவில்லை. ஓரே ஒரு மாமனார் – ஓரே ஒரு மாமியார் – மொத்தத்தில் இருக்கும் ஒரே ஒரு நாத்தனார் அல்லது ஒரே ஒரு மச்சினன் – அதிக பட்சம் சொந்தமாயிருக்கிற ஒரே வீடு இவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் நிர்வகிக்கத் திணறுகிறார்கள். இவர்களுக்கு இருப்பது ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே! தனக்கு வாய்த்திருக்கிறதோ ஓரே ஒரு கணவன் – ஓரே ஒரு கணவன் – அவனை அன்பு காட்டி ஆதரித்து – வழிகாட்டி – நெறி படுத்தி –ஊக்கம் தர அவர்கள் தடுமாறுவதும் – தடம் மாறுவதும் – இவற்றைக் காண சகிக்கவில்லை!

இது இல்லறமன்று – இல்லறமல்லது நல்லறமன்று!
இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றுமில்லை என்பாள் அவ்வைப் பிராட்டி .

இல்லாள் அகம் எனும் வீட்டில் இருந்தால் போதாது – கணவனின் உள்ளமெனும் அகத்திலே பொருந்தி வாழ்க்கை நடத்துதல் வேண்டும். இல்லல் களைவது இல்லாளின் பணி – இல்லலை உண்டு பண்ணுவது அல்ல. ஆடவர்கள் ஆடவர்களாக – செயல் வீரர்களாக – ஒழுக்க சீலர்களாக – வாழ சார்பும், உதவியும், .ஒத்தாசை செய்ய வேண்டியவர்கள் பெண்களே பெண்களே என்பதை இந்த உலக அரங்கிலே பதிவு செய்து போயிருக்கிறவள் மும்தாஜ் மகல்.

அவளது வரலாற்றை நாம் மீண்டும் இன்று நினைவூட்டிப் பார்த்து, நம் நிலையை சீர்தூக்கிச் செப்பனிடுவது மகளிர் வாரத்தில் நாம் நமக்குக் காட்டும் மதிப்பாகும். மகளிர் உயர்ந்தால் – ஆடவர் உயர்வர் எனும் எளிய – ஆனால் உறுதியான சிந்தனையை உங்கள் முன்னே சமர்ப்பித்து – உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.

வாழ்க மகளிர்! தரணி வாழ்க! தமிழ் வாழ்க!

படங்களுக்கு நன்றி: http://www.bharatonline.com/uttar-pradesh/taj-mahal/mumtaz-mahal.html 

http://en.wikipedia.org/wiki/Mumtaz_Mahal 

http://www.exoticindiaart.co.in/product/paintings/empress-mumtaz-mahal-MP80/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *