வந்தவாசியில் சர்வதேச பெண்கள் தின விழா – செய்திகள்

0

வந்தவாசி. 04 மார்ச் 12. எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் பெண்கள் முன்னேற்றம் அடையாமல் அந்த நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது என்று சர்வதேச பெண்கள் தின விழாவில் பேசும்போது யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு. முருகேஷ் குறிப்பிட்டார்.

இவ்விழாவிற்கு தொழிலதிபர் இரா. சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கருத்தாளர் மா. குமரன் அனைவரையும் வரவேற்றார். சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற யுரேகா சூப்பர் கிட்ஸ் மாலை நேர வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு கடைசிகுளம் ஊராட்சிமன்றத் தலைவர் ஜெ. மகேஸ்வரன் பரிசுகளை வழங்கினார். கடைசிகுளம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் க. சந்திரா பெண்கள் தினவிழா இனிப்புகளை அனைவருக்கும் வழங்கினார்.

‘பெண்கள் நாட்டின் கண்கள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய கவிஞர் மு. முருகேஷ் பேசும்போது, இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் படிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு பெற்றோர்கள் மத்தியிலும் உண்டாகியுள்ளது.

ஆணும் பெண்ணும் சரிசமம் என்று மகாகவி பாரதி பாடியது, படித்த பெண்களால் வீடு மட்டுமல்ல, நாடும் வளம் பெறுமென்று புரட்சிகவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டதும், படித்த பெண்களால் தான் சுயமரியாதையோடும், தன்னம்பிக்கையோடும் வாழ முடியுமென தந்தை பெரியார் கூறியதும், இன்று வீட்டை விட்டு வெளியே வந்து பல்வேறு தடைகளைத் தாண்டி, கல்வி கற்ற பெண்களால் சாத்தியமாகியுள்ளது.

பெண்கள் மீதான சமூகக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் இன்னமும் தொடர்கின்றன. படித்த பெண்கள் அரசு உயர்பதவிகளில் அதிக எண்ணிக்கையில் இடம் பெற வேண்டும். இந்தியாவில் ஆணுக்கு சமமான சதவிகிதத்தில் பெண்களின் எண்ணிக்கை இருந்த போதிலும், இன்னும் 33 சதவீத இட ஒதுக்கீட்டைத் தருவதற்கு நம் ஆணாதிக்க மனோநிலை இடம் தராதது வருத்தளிக்கிறது.

ஒரு நாடு எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கு அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்தையே அளவுகோலாகக் கொள்ளுமாறு அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படிப் பார்க்கையில் பெண்கள் முன்னேற்றாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி நிச்சயமாய் முழுமை பெறாது என்பதே உண்மை என்று குறிப்பிட்டார்.

விழாவில், தெள்ளார், சேத்துப்பட்டு, வந்தவாசி ஒன்றியங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட கருத்தாளர் சு. உமாசங்கர் நன்றி கூறினார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *