அதிகாலைப்பல்லவன் – கவிதைப்புதினம் (பாகம்-1)

2

பிச்சினிக்காடு இளங்கோ

முன்னுரை

என் முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்”படித்து விட்டு மறைந்தும் மறையாத டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்றார். இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய வைரமுத்து” உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றார்.

இவர்களின் முடிவைச் சாதகமாக்கிக்கொண்டு ஒரு மின்னலைப்போல் வந்து போன ஓர் உண்மைச்சம்பவத்தை எழுதியிருக்கிறேன்.

சம்பவம் நிகழ்ந்த காலத்திற்கும்
சம்பவத்தை எழுதும் காலத்திற்கும்
இடைவெளி இருபது ஆண்டுகள்.

அதே வேகம்,
துடிப்பு,
வெப்பம்,
ஆர்வம்,
கொதிப்பு,
பதற்றம் அனைத்தையும் மனதுக்குள் வரவழைத்து எழுதியிருக்கிறேன்.

யாப்பும் இல்லை
புதுக்கவிதையும் இல்லை
இரண்டும் முறையாக இல்லாத
ஒரு கலவையில்;
ஒரு கதியில்;
ஒரு சுதியில் சொல்லுதல் ஓடி நின்றிருக்கிறது

காதலிக்காதவன் வாழ்க்கையில்
இதுதானே காதல்;
இதுதானே இனிக்கும் சம்பவம்.

எனவே அதை எழுத்தில்
நிலைநிறுத்தியிருக்கிறேன்.

பயணம் செய்யுங்கள்.
பகிர்ந்துகொள்ளுங்கள்.

திருச்சி சந்திப்பு-1

திருமுகம் ஒன்று
மேசையில் இருந்தது.
பார்த்தது என்னை!

யார் அது?
பெயர் என்ன?
மனதுக்குள் துள்ளல்

அவசர அவசரமாய்
இருக்கையில் அமர்ந்தேன்

திருமுக உறையை
முன்னும் பின்னும்
திருப்பிப்பார்த்தேன்

அனுப்பியது யார்?
ஆணா?
பெண்ணா?

ஓர் அழுத்தத்தில்
அமிழ்ந்தேன்

வேகவேகமாய்த்
திருமுகத்தின் வாயை
ஒழுங்காய்ப் பார்க்காமல்
இதழைக் கிழித்தேன்

நானும் ஒருவகையில்
வன்முறையாளனே

உள்ளே அதிசயம்!
உள்ளுக்குள் பரவசம்…
மின்னல்…
மின்சாரம்…

பிரித்தேன்…படித்தேன்
பேசாமல் மகிழ்ந்தேன்
அருகில் யாருமில்லை
அக்கம் பக்கம் பார்த்தேன்
மனசு மகிழ்ந்ததை;
மகிழ்ந்து சிரித்ததை;
மனசு மட்டுமே
அறிந்து உணர்ந்ததை;
என்முகம்
என்னையே காட்டிக்கொடுப்பதாய்க்
கவலைப்பட்டேன்

திருமுகம் கண்டு
என்முகம் மாறும்
நிலையினை எண்ணி
நிலைதடுமாறினேன்

எதிரே பார்த்தேன்
பக்கம் பார்த்தேன்
எங்கும் பார்த்தேன்
யாருமே இல்லை

திருடன் முழிப்பதுபோல்
திருமுகம் சிவந்தேன்

திருமுகம்
பையில் கனக்கிறது
திருடனாய் ஆக்கிப்பார்க்கிறது.

யாரும் அங்கே
இல்லைதான்—எனினும்
அறை முழுவதும்
ஆட்கள் இருப்பதாய்க் கற்பனை

அனைவரும் என்னையே
பார்ப்பதாய்ப் பயம்

அறைக்குள் யாரும்
வருவதற்கு முன்பே
உறையைப் பிரித்து
உள்ளதை எல்லாம்
மீண்டும்
முறையாய்ப் படிக்க
முயல்கிறேன்

படிக்கிறேன்
துடிக்கிறேன்
பக்கத்து நாற்காலியைப்
பார்த்தும் கொள்கிறேன்

எந்தச்சத்தமும்
இடைஞ்சலாய் உணர்கிறேன்
எவரின் வருகையும்
இடையூறாய் அறிகிறேன்

வேகவேகமாய்ப்
மீண்டும் படிக்கிறேன்

இப்படியொரு திருமுகம்
எனக்கு வந்ததில்லை
இப்படியொரு நிலையை
எனக்குத் தந்ததில்லை

யாருடைய
திருமுகம்?

யார்
அனுப்பிய திருமுகம்?

வியர்வையின் ஈரங்கள்
நெற்றியில் பூத்தன
இதயத்துத் துடிப்பின்
துடிப்புகள் கூடின

கை
கால்
உடல்
முகம்
ஒரு மாற்றத்திற்குள்ளாகி
மாறினேன்

ஆள் அரவம்
இல்லாததால் தேறினேன்

தாகூரின்
கீதாஞ்சலியைப் படித்த
மேலைநாட்டுக்கவி
டபுள்யு பி.யேட்ஸ்-ன்
அனுபவம்
எனக்கும் நேர்ந்தது

பையத் திருமுகத்தைப்
பைக்குள்ளே வைத்து விட்டுத்
தேநீர் அருந்துமிடம்
தேடினேன் சென்றேன்

சுவாசத்தைக் கொஞ்சம்
சுதி குறைத்து வாசித்தேன்

ஆசுவாசப்படுத்தி
அமைதிக்குத் திரும்பினேன்
மனதுக்குள் ஆனந்தம்
மழை பொழிய
அந்தரங்கமாய் நனைந்தேன்

காலம் தவறி வரும்
கடிதம் கண்டு
காலத்தை நொந்து கொண்டேன்

கைமாறு ஏது செய்வேன்
கவலையில் ஏங்கினென்;
கலங்கினேன்

தும்பைப்பூ
மார்கழியில் பூத்தால்தான்
அதிகாலைக் கோலத்தில்
அதற்கு இடமுண்டு

பூக்காத பருவத்தில்
பூத்த பூவாய்க்
காய்க்காத காலத்தில்
காய்த்த காயாய்க்
கனிந்து வந்த கடிதம்கண்டு
கனியாது நாணினேன்

பருவத்தில்
வரும் மழைதான்
பயன்தரும்

எழுத்துக்குப் பாராட்டு
வருமென்று காத்திருந்த
வயதில்லை இப்போது

பக்குவத்தின் விளிம்பிற்கு
பயணித்து வந்தபின்பு
திக்குமுக்காடித்
திசைமாற வழியில்லை

எல்லாம் பெற்றுக்கொள்ளும்
திருப்பதி உண்டியலாய்
மனதை மாற்றித்
திருமுகத்தைப் பெற்றுக்கொண்டேன்

கவிமுகம் கண்டு
திருமுகம் வரைந்த
திருமுகம் எப்படியோ!

ஆவலும் ஆசையும்
பின்னிப் பின்னி
என்னைச்
சின்னாபின்னமாக்கியது;
சிந்திக்கவைத்தது

சரி சரி
ம்……
இதையும் சந்திக்கச்
சாதூர்யம் வளர்த்துக்கொள்வோம்

முடிவு செய்து
ஒரு
முடிவுக்கு வந்தேன்

கவிதையில் இதயம்
கரைந்ததைக்கண்டேன்
கரைந்து கரைந்து
கடிதம்
வரைந்ததைக்கண்டேன்

வரைந்ததில்
வார்த்தை வெல்லங்கள்
நிறைந்ததைக்கண்டேன்

சர்க்கரையில்
எறும்புகள்
அக்கறையோடுதான்
அமர்கிறது;
மொய்க்கிறது

மலர்களில் வண்டு
தேனுக்கே அமர்கிறது

கவிதையில் நாட்டம்
இருப்பதை அறிந்தும்
கருத்துள்ள கவிதையை
வியந்தது தெரிந்தும்
லேசான தூறலைப்போல்
மனசுக்குள் சாரல்

(தொடரும் )

 நன்றி : கிழக்கு வாசல் உதயம் வெளியீடு

படத்திற்கு நன்றி:http://www.tradeindia.com/fp472214/Decorative-Envelopes.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அதிகாலைப்பல்லவன் – கவிதைப்புதினம் (பாகம்-1)

  1. //எல்லாம் பெற்றுக்கொள்ளும்
    திருப்பதி உண்டியலாய்//

    இதைப் போல வார்த்தைப் பிரயோகங்கள் உணர்வுகளோடு பின்னிப் பிணைகின்ற அழகை ரசித்தேன்.

  2. நன்றி.நன்கு படித்து உணர்ந்து எழுதியதற்கு மீண்டும் நன்றி. தொடர்ந்து படித்து உணர்வைப்பரிமாற கேட்டுக்கொள்கிறேன்.

    அன்புடன்
    பிச்சினிக்காடு இளங்கோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *