செல்ல சண்டை !
பாகம்பிரியாள்
கனிவுதான் நம் காதலை வளர்க்கும் 
என்றெண்ணிய எனக்கு , நீதான்
செல்ல சண்டையும் அதில் சேரும்
என்று சொல்லாமல் சொன்னாய்.
சின்ன விஷயங்களுக்கு மோதுகையில்,
வார்த்தைகள் சூடு பிடித்து, இறுதியில்.
மௌனமே பெரிய சுவராய் நிற்கும்.
உனை வம்புக்கு இழுக்க, பழைய
கதையை நான் சொல்ல,வேகமாய்
அருகில் வரும் உன் கோபம், என்
வெப்பக் காற்று பட்டதும் உருகி,
ஒளிந்திருந்த காதல், தலை காட்ட,
மௌனச் சுவரை உடைத்துக் கொண்டு
பாயும் அன்பில், இருவரும் கரைந்து,பின்
மெல்ல கரையேறுவோம் மீண்டும் காதலர்களாய்!
கவலைப்படாதே , அடுத்த சண்டைக்கான
காரணத்தை நான் இன்றிலிருந்தே,
சல்லடை போட்டு , சலிக்க ஆரம்பித்துவிட்டேன்!
படத்திற்கு நன்றி :
http://42concepts.com/design/lovers-chair

ஊடுதல்
உரமாகிக் காதலுக்கின்பம்..
வரவேற்போம் சண்டைகளை…!
-செண்பக ஜெகதீசன்…