மற்றுமொரு புத்தாண்டு
வையவன்
மைசூரிலே மானசகங்கோத்ரியில் மலையாளம் படிக்கப்போன ஒரு வருஷம். எந்த வருஷம் என்பது முக்கியமல்ல . நாம் என்ன வரலாற்றுக் குறிப்பா எழுதப் போகிறோம்? அப்போது நான் சந்தித்தது ஒரு தமிழ்ப் புத்தாண்டு . இல்லை. வேறு விதமாகச் சொல்லவேண்டும்.
வெள்ளக்குட்டை என்ற என் சொந்த கிராமத்தில் வேப்பிலை மாங்காய் நறுக்கிய துண்டுகள் வெல்லம் என்று சுவாமிக்குப் படைத்துக் கொண்டு வந்து பிரசாதம் நீட்டும்போது நான் கை தொட்டு வணங்கிய புத்தாண்டு அது. என்னை இங்கே இப்படி அந்தப் புத்தாண்டு மைசூரில் சந்தித்தபோது .
‘என்னடா பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை விட்டு விட்டு இந்த வயசில் மாணவனாக வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறாய்?’ கேட்டது. நான் மௌனம். என்னைப் போல் பலர் குடும்பத்தை குழந்தை குட்டிகளை தன் பள்ளியை மாணவர்களைப் பிரிந்து அங்கே இருந்தனர். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று நான்கு தென்இந்திய மொழிகளைக் கற்க இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் இருந்து வந்து ஓர் ஆண்டு மைசூரில் உள்ள தென் மொழிகள் பயிற்சி நிறுவனத்தில் தங்கி தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு மொழியைக் கற்க வேண்டும். ஒரே நிபந்தனை அந்த மொழியை அவர் அறிந்திருக்கக் கூடாது . தேர்ந்தெடுக்கப்பட்டவர் அனைவரும் ஆசிரியர்கள். கற்ற மொழியைத் தம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அழைக்கப்பட்டவர்கள்
தென் இநதிய மக்களுக்கு புத்தாண்டு ஒரு புது மலர்ச்சி. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிப்பகுதிகளில் இருந்து வந்த எல்லோருக்கும் ஓரிரு நாள் முன்பின் வித்தியாசத்தில் புத்தாண்டு. தெலுங்கருக்கும் கன்னடியருக்கும் யுகாதி, மலையாளிக்கு விஷு. தமிழருக்கு புது வருஷம்.
குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்திருந்த எங்கள் யார் முகத்திலும் ஒரு போலி மகிழ்ச்சி தான். எந்த பண்டிகையாய் இருந்தாலும் மனைவி அருகில் இருக்க குழந்தைகளைக் கொஞ்ச வாயப்பு இல்லாத போது அது பேருக்கு ஓர் நாள் ஆகிறது. திருநெல்வேலி அருகில் ஒரு கிராமத்திலிருந்து வந்த முப்பத்து ஐந்து வயது ராம கிருஷ்ணன் திடீர் என்று கண் கலங்கினார். அவர் தோளைத் தொட்டேன், என் மேல் விழுந்து விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டார்.” என்ன ராமகிருஷ்ணன் ? என்ன ? என்ன?” நான் திடுக்கிட்டேன் அவர் அழுகை அனைவரிடமும் ஒரு சலனத்தை ஏறப்படுத்தி விட்டது
“மனைவி ஞாபகம். போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு.” பக்கத்தில் ஓர் கன்னட நண்பர் விளக்கினார்.
“வையவன் சார், போன வருஷம் புத்தாண்டுக்கு போளி செஞ்சா. இன்னும் நெஞ்சிலே இருக்கு சார்.”
புது மனைவியைப் பிரிந்து குழந்தை போல் அழுகிற கணவன் வாழ்க்கையின் பந்தச்சங்கிலி பிணைந்திருக்கிற மென்மையை எனக்கு எடுத்துக்காட்டியது. போளியை எங்கள் ஊரில் ஒப்பட்டை என்பார்கள். மைதா மாவை பரோட்டாவுக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் பருப்பும் வெல்லமும் ஏலக்காயோடு சேர்த்து ருப்பி {ஆட்டி என்பதன் வட்டார வழக்கு}பரோட்டா பகுதியில் வைத்துத் தட்டி தோசைக்கடாயில் நெய் ஊற்றிப் புரட்டி எடுப்பார்கள். கும்மென்று வாசனை வரும்.
எனக்கு அங்கே வந்தது. ராமகிருஷ்ணன் வீட்டுப் போளியும் புது மனைவியின் கை மணமும் என் கற்பனையை வளர்த்தன. என் வீட்டின் எதிரே செம்மண் பூசிய அழகான கோலங்கள் வரைந்திருக்கும் .வீதி எல்லாம் கோலங்கள் மனசிலே விளக்கெரிய மனைவியின் சிரித்த முகம். ராமகிருஷ்ணன் மட்டுமா?
எல்லாருமே மனசுக்குள் வீட்டிலே. அது மொபைல் இல்லாத காலம்.
எஸ் டீடீ போட்டுவிட்டு மணிக்கணக்காக அஞ்சல் நிலையத்தில் காத்திருக்க வேண்டும் . திருநெல்வேலி போக வேண்டும் என்றால் முன் நாளே கிளம்பியிருக்க வேண்டும்.
ஐயோ பாவம் ராம கிருஷ்ணன்! மலையாளம் வந்து அவரை இங்கே இப்படி மாட்டிவிட்டதே என்று நான் வருந்தினேன். மைசூர் வாசியான கன்னட நண்பர் மெளனமாக பார்த்துக்கொனடே இருந்தார்.
” இன்னிக்கு ஒங்களுக்கு புது வருஷம் . சாயங்காலம் நாம்ப சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் போவோம்”
சொல்லிவிட்டு அகன்றார் சட்டென்று நின்று “நீங்க கட்டாயம் வர்றீங்க ராமகிருஷ்ணன்” என்று ஒரு ஸ்பெஷல் அழைப்பு கொடுத்து விட்டுப் போனார்.
மாலையில் சாமுண்டீஸ்வரி மலை ஏறி அம்மன் தரிசனம் முடித்து விட்டு வந்ததும் கோயிலுக்கு வெளியே வட்டமாக உட்கார்ந்தோம். கன்னட நண்பர் தன் கையில் இருந்த பையைத்திறந்து ஒரு டிபன் பாக்சை எடுத்தார். காகிதத்தட்டில் உள்ளே இருந்த பலகாரத்தை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். போளிகள். போளிகள் அவர் வீட்டில் செய்தது
அன்று ராமகிருஷ்ணனின் நெஞ்சு நெகிழ்ந்ததை விட என் மனம் நெகிழ்ந்தது ,பிர்வாற்றாமையின் கொடுமையை அகப்பாடல் அல்லது குறுந்தொகையில் சந்திப்பது போல் சந்தித்து அதற்கு ஒரு மாற்றும் தரத்தோன்றியதே அந்த கன்னட நண்பருக்கு. அதன் பின் ஒவ்வொரு புத்தாண்டும் எனக்கு எங்குமே நெஞ்சங்கள் நெகிழ் நிலையில் உள்ளவைதான் என்று நினைக்க வைக்கும் .இனிய புத்தாண்டு போளி வாழ்த்துக்கள்
படத்திற்கு நன்றி :
http://indiantraveljourney.com/temples-of-india-the-chamundeswari-temple-in-mysore/
போளி செய்யும் விதத்தை நீங்கள் சொன்ன முறையில் இங்கேயும் கும்மென்று வாசனை வந்துவிட்டது. இனிய புத்தாண்டு போளி வாழ்த்துகள்.