உலகத்தின் மிகப்பெரும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும்’ – விஞ்ஞானி ஆ.சிவதாணுப்பிள்ளை

0

 

 

 

சிறப்பு நேர்காணல்

சந்திப்பு: விஞ்ஞானி வி.டில்லிபாபு

நண்பரை சந்திக்கும் போது ‘வணக்கம்’ சொல்கிறீர்கள். ‘வணக்கம்’ என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து நண்பரின் காதுகளுக்கு எவ்வளவு வேகமாக சென்றடைகிறதோ அதை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கக்கூடியது பிரமோஸ் ஏவுகணை.

பிரம்மபுத்திரா, மாஸ்கோவா நதிகளின் பெயர்களின் முற்பகுதிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பிரமோஸ் விண்வெளி என்ற இந்திய-இரஷ்ய கூட்டு நிறுவனத்தின் தயாரிப்பே இந்த ஏவுகணை.

கப்பலிலிருந்தோ, விமானத்திலிருந்தோ, தரைவழி வாகனத்திலிருந்தோ இதை ஏவி, விரையும் கப்பல்களையும் நிலையான கட்டிடங்களையும் துல்லியமாகத் தாக்க முடியும். பல கப்பல்கள் இருந்தாலும் குறிப்பிட்ட இலக்கைத் தேடி தாக்க வல்லது பிரமோஸ். இதுவரை கடந்த 25 சோதனைகளில் 24 முறை துல்லியமாய் இலக்குகளை தாக்கியுள்ளது பிரமோஸ். ஒரே ஒரு முறை தவறியது கூட செயற்கை கோள்களின் தொடர்பு கிடைக்காததால் தான். இந்திய-இரஷ்ய பிரமோஸ் இன்றைய தேதியில் உலகத்தின் தலைசிறந்த சூப்பர்சானிக் ஏவுகணை.

பிரமோஸ் நிறுவனத்தின் தலைவர் ஒரு இந்தியர் மட்டுமல்ல தமிழர். ஆம். டாக்டர்.ஆபத்துகாத்தான் சிவதாணுப்பிள்ளை. இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) மதிப்புறு விஞ்ஞானி ( Distinguished Scientist ).

முனைவர்.ஆ.சிவதாணுப்பிள்ளை, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டமும், ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டமும், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

இந்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம், ஏழு கெளரவ டாக்டர் பட்டங்கள், மாஸ்கோ பல்கலையின் உயர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர்.

டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நெருங்கிய சகா, அவருடைய நம்பிக்கைக்குரிய தோழர். அவருடன் இஸ்ரோ நிறுவனத்திலும், டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திலும் பணியாற்றியவர். கலாம் அவர்களுடன் இணைந்து ‘உதயமாகிறது வலிமை படைத்த பாரதம்’ என்ற நூலை எழுதியவர். மேலும் ஆராய்ச்சி மேலாண்மை, நானோ தொழிற்நுட்பம், கடற்போர் போன்ற துறைகளில் 6 நூல்களை எழுதியுள்ளார்.

உலகத்தால் உற்று கவனிக்கப்படும் இத்தமிழர் தமிழ் வழியில் கல்வி பயின்றவர். தொழிற்நுட்ப மேலாண்மை வல்லுனராக உலக ஊடகங்களில் நன்கறியப்பட்ட இவர், தனது மறுபக்கத்தை தமிழ் வாசகர்களுக்கு திறக்கிறார்.

பெங்களூரூ, இந்திய அறிவியல் நிறுவனத்தில், ஒரு பொறியியல் சொற்பொழிவுக்குப் பிறகு நிகழ்ந்த ஒரு மணி நேர உரையாடலிலிருந்து….


உலகின் முதல் நிலை ஏவுகணை நிறுவனத்தின் தலைவராவீர்கள் என சிறு வயதில் நினைத்ததுண்டா?

இல்லை (சிரிக்கிறார்)

வேறு யாராக ஆசைப்பட்டீர்கள்?

துறவியாக ஆசைப்பட்டேன் (சிரிக்கிறார்)

துறவியாகவா? ஏன்?

என் தந்தை ஆபத்துகாத்தான் ஒரு நீதிமான். தவசீலர். கைம்மாறு கருதாமல் உதவிகள் புரிந்தவர். சித்த, ஆயுர்வேத மருத்துவராகவும் விளங்கியவர்.

ஒரு முறை ஒரு செல்வந்தர் காரில் எங்கள் வீட்டிற்கு வந்து என் தந்தையின் கால்களைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டார். அவருடைய மகள் சென்னையில் மரணப் படுக்கையிலிருந்தாள், என் தந்தை அவருடன் சென்னை சென்று ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சையளித்து திரும்பினார். அவருடைய மகள் உயிர் பிழைத்தாள். பின்னர், சில நாட்கள் கழித்து அச்செல்வந்தர் என் தந்தையை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். பிறகு அவர் ஒரு பெட்டியை கொடுத்தார். பெட்டி முழுக்க ரூபாய் கட்டுகள். என் தந்தை பெட்டியை தொடவேயில்லை. பணத்தை வாங்கினால் தன்னிடமிருக்கும் மருத்துவ வல்லமை நீங்கி விடுமென்று பெட்டியை திருப்பியனுப்பினார். வீட்டின் ஏழ்மை நிலை தெரிந்திருந்த என்னை தந்தையின் இச்செயல் மனதைத் தொட்டது. எனவே, தந்தையைப் போலவே ஒரு தவச்சீலனாய் மாறவே ஆசைப்பட்டேன்.

பிறகு எப்படி?

எனது தாய் அக்கம்பக்கத்திலிருக்கிற மற்ற சிறுவர்களைப் போல நானும் படிக்க வேண்டுமென்று என் மனதை திசைதிருப்பினார். படிப்பில் கவனம் செலுத்தினேன். ஒரு குத்து விளக்கு தான் இரவில் வீட்டிற்கு சூரியன். நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது தான் மின் வசதி என் வீட்டிற்கு வந்தது. எனினும் பள்ளியில் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்றேன்.

ஏன் பொறியியல் படிப்பிற்கு?

எனது அக்கம்பக்க நண்பர்கள் பொறியியல் சேர்ந்து படிக்கவே, நானும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். அக்காலத்தில், பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மின் பொறியியலையும், பிற மாணவர்கள் இயந்திரப் பொறியியலையும், கடை நிலை மாணவர்கள் கட்டிடப் பொறியியலையும் தேர்ந்தெடுப்பார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், மின் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.

உங்கள் வாழ்வின் திருப்புமுனை எது?

மதுரை, தியாகராசர் பொறியியற் கல்லூரியில் படிக்கும் போது ஒரு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அறிவியல் கண்டுபிடுப்புகளைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். நான் ‘டைமிங் சுவிட்ச்’ என்ற குறிப்பிட்ட நேரத்தில் ரேடியோ உள்ளிட்ட கருவிகளை இயக்கவல்ல ஒரு உபகரணத்தை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தேன். நோபல் விஞ்ஞானி சர். சி.வி.ராமனும், இஸ்ரோ தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாயும் தலைமை விருந்தினர்களாக பங்கேற்றனர். எனது கண்டுபிடிப்பை பார்த்து சி.வி.ராமன் பாராட்டினார். நான் எதிர்பாராத தருணத்தில் விக்ரம் சாரபாய் என்னை கட்டியணைத்து ‘நீ மிகவும் புத்திசாலி’ எனப் பாராட்டினார். நான் திக்குமுக்காடிப் போனேன். அக்கணத்தில் ஒரு இனம் புரியாத பரவசம் என்னுள் பரவியது. பின்னாளில் இஸ்ரோவில் சேர்வதற்கும் இது உந்து சக்தியாகயிருந்தது. 1969-ல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்த முதல் நாளிலும் விக்ரம் சாராபாய் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

டாக்டர்.அப்துல் கலாம் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றி?

நான் இஸ்ரோவில் டி.பி 1 திட்டத்திலிருந்தேன். கலாம், டி,பி 4 திட்டத்தின் தலைவராக இருந்தார். திரு.சதிஷ் தவன், கலாமை திட்ட மேலாளராக நியமித்து, எல்லா உருவாக்கத் திட்டப் பணிகளையும் அவருடைய மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்தார். அப்படி நான் கலாம் அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ நிறுவனத்திலும் அவருடன் பணியாற்றினேன். கலாம் அவர்கள் எப்போதும் சொல்வார், ‘உபயோகமில்லாதவர்கள் யாருமில்லை. ஓவ்வொருவரையும் ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும்’.

உங்களை மிகவும் பாதித்தவர்கள்?

என் தந்தை- நீதியை போதித்தவர்.
தாய்-தெய்வ பக்தியூட்டியவர்.
விக்ரம் சாரபாய்-மிகப் பிரமாண்டமாய் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர்.
சதிஷ் தவன்-எதையும் நுணுக்கமாக ஆராயச் சொல்லித்தந்தவர்.
கலாம்-பணிகளை ஒருங்கிணைக்கும் உத்தியைக் கற்றுத்தந்தவர்.

உங்கள் வாழ்வின் மிக மோசமான நாள்?

1979 ல் SLV-3 E1 தோல்வியடைந்த நாள். அதற்குப் பிறகு நிறைய தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன். முதல் தோல்வியைப் போல மனமுடைத்தது ஒன்றுமில்லை. அப்போது SLV-3 சோதனை இயக்குனராக இருந்தவர் டாக்டர்.அப்துல் கலாம்.

மிக மகிழ்ச்சியான நாள்?

தோல்வியை நாங்கள் வெற்றியாக மாற்றிய நாள். 18 ஜூலை 1980, SLV-3 E2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நாள். பிறகு நிறைய வெற்றிகளை சந்தித்தாலும், முதல் வெற்றியின் ருசியே தனி தான். அதுவும் தோல்விக்குப் பிந்தைய வெற்றிக்கு இணையேயில்லை.

உலகின் முன்னணி ஏவுகணை நிறுவனத்தின் தலைவராக, டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் மதிப்புறு விஞ்ஞானியாக அதிக வேலை பளுவிற்கிடையில், உங்கள் சொந்த வாழ்க்கைக்கு நேரம்?

சொந்த வாழ்க்கையென்று எனக்கு எதுவுமில்லை. ‘பசி நோக்கார், கண் துஞ்சார், செவ்வி அருமையும் பாரார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார், கருமமே கண்ணாயினார்’

பிடித்த பொழுதுபோக்கு?

பிடித்த பொழுதுபோக்கென்று எதுவுமில்லை. பணியின் நிமித்தமாக எல்லா கண்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். எல்லாப் பெருங்கடல்களையும் கடந்திருக்கிறேன். யாரும் வழக்கமாக செல்லாத இடங்களுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது அண்டார்டிக்கா பயணம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது.

பிடித்த விளையாட்டு?

பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கைப்பந்து விளையாடியிருக்கிறேன். தற்போது நேரம் கிடைக்கும் போது கோல்ஃப் விளையாடுகிறேன்.

தமிழ் வாசிப்புப் பற்றி?

சிறுவயதில் நிறைய தமிழ் நூல்களைப் படித்திருக்கிறேன். தமிழ்வாணனும், சாண்டில்யனும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள். சங்கர்லால் துப்பறியும் ஏராளமான கதைகளைப் படித்திருக்கிறேன்.

பொதுவாழ்வில் ஊழல் மலிந்து எங்கும் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை விரவிக்கிடக்கிற இக்காலக்கட்டத்தில், உங்கள் பார்வையில் எதிர்கால இந்தியா எப்படி?

நம்பிக்கையின்மை விரைவில் மாறும். இந்தியா ஒரு மாற்றத்திற்குள் கடந்து செல்கிறது. படிப்பறிவுள்ள இளைய தலைமுறை அதிகமாகி, அறிவை மையமாகக் கொண்ட ஒரு மாற்றம் ஆரம்பமாகிவிட்டது. புதிய தொழிற்நுட்பங்களைக் கொண்ட மின் ஆளுமையும், பொறுப்பான ஊடகங்களும், படித்த தலைமுறையும் ஒளிவுமறைவற்ற ஜனநாயகத்தை நிச்சயம் உருவாக்கும். இன்னும் இருபது ஆண்டுகளில், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே பொலிவோடும், பலத்தோடும் இந்தியா புத்துருவாக்கம் பெறும். அதில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பங்கள் பெரும்பங்கு வகிக்கும். இந்தியர்கள் உலகம் முழுவதும் வரவேற்கப் படுவார்கள். உலகத்தின் மிகப்பெரும் சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.

பிரமோஸ் வெற்றி- ஒரு கடைக்கோடி இந்தியனுக்கு என்ன அர்த்தம்?

குடிமக்களின் நல்வாழ்விற்கு அடிப்படை தேச பாதுகாப்பும் சமாதானமும். இதைச் செய்யும் கருவிகளில் ஒன்று சூப்பர்சானிக் துல்லிய தாக்கு ஏவுகணை பிரமோஸ். நாம் தாக்குதல் நடத்தாவிட்டாலும் அடுத்தவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவாவது பிரமோஸ் இருக்கும். அமைதி தவழும் பாதுகாப்பான தேசம் வளர்ச்சியடையும் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கலாம் அவர்களது இல்லத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் காட்சிக்கூடம் உருவாக்கிய உங்கள் முயற்சி பற்றி?

நீண்ட நாள் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தோம். இராமேஸ்வரத்திலுள்ள அவரது வீட்டில் புகைப்படங்களைத் தொகுத்து காட்சிக்கூடமாக மாற்றினோம். ஒரு நாளைக்கு ஏறக்குறைய ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள். நான் சமீபத்தில் குடும்பத்தோடு சென்று வந்தேன்.

உங்களை நெகிழ வைத்த நிகழ்ச்சி?

அக்னி ஏவுகணைக்காக தயாரிக்கப்பட்ட எடை குறைந்த, இழைநார்களால் வலுவேற்றப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஊனமுற்றவர்கள் பயன்படுத்த செயற்கைக் கால்களை உருவாக்கினோம். டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின் படி இம்முயற்சியில் இறங்கினோம். வழக்கமான செயற்கைக் கால் 3 கிலோ எடையிருக்கும், நாங்கள் தயாரித்த வலுவேற்றப்பட்ட பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட செயற்கைக் காலின் எடை வெறும் 300 கிராம் தான்.

ஏறக்குறைய 40,000 செயற்கைக் கால்களை தயாரித்து பல்வேறு அரசுசாரா நிறுவனங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்கு வழங்கியிருக்கிறோம்.

2006 ல் கோயம்புத்தூரில், இந்த செயற்கைக் கால் பொருத்தப் பட்ட 29 வயது தாய் சொன்னார், “இதுவரை என்னால் நிற்க முடியாததால் எனது குழந்தையை தொட்டுத் தூக்கி கொஞ்ச முடியவில்லை. இனி அந்தக் குறையில்லை”. இதைக் கேட்டு, அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவரும் கண்கலங்கினோம்.

இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்திருக்கும் எளிமையான இத்தமிழரை, பிரமோஸ் பிதாமகரை வாழ்த்தி விடைபெற்றோம். ஏவுகணைக்காக இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய பொருள், மாற்றுத்திறனாளிகளின் குறை களைந்து அவர்களின் வாழ்வில் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறது. ஏவுகணைகள் ஆக்கவும் செய்கின்றன.

நன்றி : அமுத சுரபி பிரசுரம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *