சீதாம்மா

நடுநிசியல்லவா, கொஞ்சம் அயர்ந்துவிட்டேன்

அழைக்கும் மணியோசையுடன் வாயில் கதவும் வேகமாகத் தட்டப்படும் ஓசையும் என்னை எழுப்பிவிட்டது. எரிச்ச்சல், கோபம் இவைகளுடன் வாயில் பக்கம் சென்றேன்

வெளியே என் செல்லப்பிள்ளை ரவி நின்று கொண்டிருந்தான். அரட்டை பிள்ளைகளில் அவன்தான் செல்லம் சின்னவனும் கூட. பொறியியல் கல்லூரியில் நான்காம் வருடம். உடன் வேறு யாரோ ஒருவன். இதுவரை அறிமுகம் இல்லாதவன். இந்தக் கதவில் கம்பிகள் இருக்கும். கதவைத் திறக்காமல் திட்ட ஆரம்பித்தேன்

ஏண்டா, கேட் பூட்டியிருக்கே, எப்படி வந்தே

சுவர் ஏறிக் குதிதுவந்தோம்

அடப்பாவி, யாரவது பார்த்தா என்ன நினைப்பாங்க.

நீங்க கிழவிதானே. எல்லாருக்கும் தெரியும் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க

நான் கிழவின்னு தெரியும் அதனால்தான் திட்டினேன். கிழவியைக் கொன்னு திருட வந்தவன்னு நினைச்சு உங்கள் மேல் கல்வீசி அடிச்சிருப்பாங்க.

அப்புறம் பேசலாம்மா. . கொஞ்சம் அவசரம் உடனே கதவைத்திறங்க

கதவைத் திறந்து அவர்கள் உள்ளே நுழையவும் மீண்டும் கதவைச் சாத்தி பூட்டிவிட்டேன்

உட்காருவதற்குள் ரவி அருவியாய்ச் செய்திகளைக் கொட்டினான். அதனைக் கேட்கும் பொழுதே நானும் அச்சத்தால் ஆடிப்போனேன். அதனைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகின்றேன்

உடன் வந்திருப்பவன் பெயர் பாபு. அவனும் ரவியுடன் கல்லூரியில் படிக்கின்றான். பாபுவின் அப்பா மதுரையில் ரியல் எஸ்டேட் சொந்தக்காரர். செல்வந்தர். தாய் கிடையாது. ஒரே ஒரு அக்கா. இங்கே கல்லூரியில் உடன் படிக்கும் வாணியைக் காதலித்திருக்கின்றான். வாணியின் அப்பா சாதி வெறியர். சேலத்தில் ஓர் ஆஸ்பத்தியில் வேலை இவர்களின் காதல் அச்சத்துடன் தொடர்ந்த்திருக்கின்றது. ஒரு முறை இருவரும் திருப்பதி போயிருக்கின்றார்கள். தங்கும் விடுதியில் தனிமை. இருவரும் தங்களை மறந்து உடலுறவில் ஐக்கியமாயினர். பலன் வாணி கர்ப்பமாகிவிட்டாள். இப்பொழுது ஏழு மாதம். கருவை அழிக்க டாக்டரிடம் கூட்டிச் சென்றிருக்கின்றான். எதற்கும் பொறுப்பேற்க சம்மதம் என்று எழுதித் தர கேட்டிருக்கின்றார் டாக்டர். இவர்கள் மறுநாள் வருவதாக்க் கூறி வந்து விட்டனர். யாருக்குக் கஷ்டம் என்றாலும் ஓடி உதவி செய்யும் குணம் படைத்தவன் ரவி. எனவே பாபு ரவியிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றான். உடனே ரவி அவனையும் அழைத்துக் கொண்டு என்னிடம் ஓடி வந்துவிட்டான்.

அடப் பாவிங்களா? இது சின்ன விஷயமா? பெண் வயிற்றில் ஏழுமாதக் குழந்தை. இப்பொழுது நிலைமை சிக்கலாகிவிட்டது. இத்தனை காலம் கருவை வளரவிட்டது தவறு. அறுவை சிகிச்சையின் பொழுது ஏதாவது விபரீதம் நடக்க வாய்ப்புண்டு. அதனால்தான் டாக்டர் ஓர் உத்திரவாதம் கடிதம் கேட்டிட்ருக்கின்றார். இன்னும் பத்து நாட்களில் நான் அமெரிக்கா புறப்பட வேண்டும். ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் என்னை ஊருக்குப் புறப்பட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நானும் விசாரிக்கப்படுவேன். இந்த ரவி என்னையும் இப்பொழுது சிக்கலில் மாட்ட வைத்துவிட்டான். ஒதுங்கவும் முடியாது. உதவவும் முடியாது. அப்படிப்பட்ட தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டேன்

என் நண்பர் ரத்னம் ஓர் போலீஸ் அதிகாரி. அவர் அப்பொழுதே சொன்னார். “இந்தச் சின்னப்பசங்க சகவாசம் வேண்டாம். ஏதாவது சிக்கல் வரும். உங்கள் சமூக சேவை புத்தியை இதில் செலுத்தாதீர்கள் ‘ என்று அறிவுரை சொல்லியிருந்தார். இப்பொழுது நான் இந்த பிரச்சனையைக் கையாளவேண்டும். ஒதுங்க முடியாது.

இருவரிடமும் இதன் விபரீதத்தை விளக்கினேன். பாபுவைத் திட்டினேன். “இப்போ எங்கே பாத்தாலும் குடும்பக் கட்டுப்பாடு விளம்பரம் இருக்கே. பார்த்து பழகி இருக்கக் கூடாதா” எனறு திட்டினேன். “நாங்கள் தவறாக நினைத்து தங்கவில்லை. இப்படி நடக்கும் என்றே நினைக்கவில்லை. ஆனால் தப்பு செய்துவிட்டோம். எப்படியாவது எங்களைக் காப்பாத்துங்க” என்று கூறி அழுதான். எனக்கு வாணியின் மேல் சந்தேகம் எழுந்தது. அதனை வெளியில் கூறாமல் விடிந்தவுடன் வாணியை அழைத்து வரச் சொன்னேன்.

மறு நாள் காலையில் வாணியுடன் இந்த இருவரும் வந்தனர். ஆண்பிள்ளைகளை வெளியில் அனுப்பிவிட்டு அவளிடம் தனியாகப் பேசினேன்

ஒரு பெண் கர்ப்பமானால் தீட்டு நிக்குமே அப்படி தீட்டு நிக்கவும் சந்தேகம் வல்லியா

சந்தேகம் தோணல்லே. உடம்புலே ஏதோ கோளாறுன்னு நினைச்சேன்.

மூணு மாசத்திலே உடம்புலே மாற்றம் வரும். மாதம் ஆக ஆக மார்புகளில் பால் கட்டும். வயிறும் பெரிசாக ஆரம்பிக்கும். உனக்கு அப்பொவும் புரியல்லியா

இல்லை. புரியல்லே. ஆனால் ஏதோ பயம் மட்டும் வந்தது

உன் அப்பா ஆஸ்பத்தியில் வேலை பார்க்கிறார்னு சொன்னாங்க. பாபுவின் அப்பா பணக்காரர்னு தெரியுமா

தெரியும்

ஒரு பெண்ணால் ஏழுமாதம் வரை உடல் மாறுதலைப் புரிஞ்சுக்கல்லேன்னு சொல்றது நம்ப முடியாது. ஒரு பணக்காரப் பையனைச் சிக்கலில் மாட்டி கல்யாணம் செய்துக்க திட்டம் போட்டு மறைச்சியா

அவ்வளவுதான் வாணி சத்தம் போட்டு கத்தி அழுது கொண்டே வெளியில் ஓடினாள். பாபு உள்ளே வந்து என்னைத் திட்டினான். ரவிதான் எல்லோரையும் சமாதானம் செய்தான்

“ இப்பொழுது என்ன செய்யலாம்” என்று ஆலோசனை கேட்டான் ரவி

“இப்பொழுது குழந்தையை எடுப்பது பெண்ணின் உயிர்க்கு ஆபத்து. பாபு அவளை உடனே ஓர் கோயிலில் கல்யாணம் செய்து கொள்ளச் சொல். கல்யாணம் செய்யாமல் இருந்தால் பெண்ணின் தகப்பன் தன் மகளைக் கெடுத்துவிட்டதாக போலிசிடம் கேஸ் கொடுக்கலாம்.. ரிஜிஸ்தர் ஆபீஸ் கல்யாணம்னா பதிஞ்சுட்டு மூணுமாசம் காத்திருக்கணும். அவள் அப்பாவுக்குத் தெரிஞ்சா எதுவும் நடக்கலாம். கோயிலுக்குப் போய் கல்யாணம் செய்து கொள்ளட்டும் இரண்டு சாட்சிகள் மட்டும் கூட்டிப் போங்க”

“அம்மா, சாட்சிக்கு வந்து கல்யாணத்தையும் நடத்தி வைய்யுங்க “

“ரவி, எதுக்கும் எல்லை உண்டு. இதுக்கு மேல் பேசினா நானே போலீஸைக் கூப்பிடுவேன். முதலில் கோயிலில் கல்யாணம் நடக்க ஏற்பாடு செய்யுங்க”

அவர்களை வெளியேற்றினேன். இரண்டு நாட்கள் தகவல் எதுவும் கிடையாது. நானும் என் தங்கையும் காஞ்சிபுரம் சென்று கோயில்களுக்குச் சென்றுவிட்டு அவள் வீடு இருக்கும் குரோம்பேட்ட்டைகுத் திரும்பினோம் எப்பொழுதும் அமெரிக்கா புறப்படும் முன்னர் காஞ்சி காமாட்சியிடமும் வடபழனி முருகனிடமும் சொல்லிக் கொள்ளப் போவேன். அப்படி சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது மீண்டும் அதிர்ச்சிதரும் காட்சி

ரவியும் பாபுவும் அங்கே உடகார்ந்திருந்தார்கள். அப்பொழுது இரவு 9 மணி.

வாணியை அவள் அப்பா கடத்திக் கூட்டிச் சென்றுவிட்டார். அவளை மீட்டுத் தர வேண்டுமாம். போலீசிடம் புகார் செய்ய வேண்டுமாம். அவள் கிடைக்கவில்லையென்றால் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகின்றானாம் பாபு.

போதுமா? என் சமூக சேவையின் எல்லை என்னை எங்கோ கொண்டு வைத்துவிட்டது. சமுதாயத்தில் பணி செய்யும் பொழுது எதிர் கொண்ட பிரச்சனைகளை எளிதில் சமாளித்தேன்.., வயதானவர்களுக்கு முட்டாள் பட்டம் கொடுத்து விட்டு, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று மார்தட்டும் காளை வயசுப் பையன்கள் மாட்டிக் கொள்ளும் பொழுது எப்படியெல்லாம் முடிவு எடுக்கின்றார்கள் ! எல்லாம் அவசரம். காதலும் அவசரம். உடலை ஆய்வதிலும் அவசரம். சாவதிலும் அவசரம்

இப்பொழுது பிரச்சனையைக் கோபமாக்க் கையாளக் கூடாது. இது என் அனுபவம் கற்றுக் கொடுத்த பாடம்

உன்னால் போலிசுக்குப் போக முடியாது. நீ காதலன்தான் .கணவன் அல்ல. காதலனுக்கு உரிமை கிடையாது. அவள் தன் அப்பாவைப்பற்றி புகார் கொடுக்கலாம். நடந்திருப்பதைப் பார்த்தால் அவளால் புகார் கொடுக்க முடியாது

அப்போ நான் சாகப் போறேன். அவள் இல்லாமல் நான் வாழ்மாட்டேன்

என் நிலையைப் பாருங்கள். எவனோ ஒருத்தன் என்னிடம் வந்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதைக் கூறுகின்றான். அப்படி நடந்தால் நான் கோர்ட், சிறை, செல்ல வேண்டி வரலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

“பாபு அவசரப்படாதே. உன் அப்பா நல்லவர். சொன்னால் கல்யாணாம் செய்து வைப்பார்னு சொன்னே. இப்போ எங்கிட்டே சொன்ன மாதிரி உன் அப்பாகிட்டே சொல்லு. முதல்லே மதுரைக்குப் போ. ஒண்ணும் மறைக்காமல் அப்பா கிட்டே சொல்லு. நீ ஒரே ஒரு மகன் உன்னைச் சாக விடமாட்டார். அவர் பண பலத்தைக் கொண்டு உன் காதலியைக் காப்பாற்றி விடுவார். கல்யாணமும் செய்து வைப்பார். மதுரைக்குப் போனாலும் எனக்கு போன் செய். தகவல் கொடு. இப்பொழுது அவசரத்தில் சாகாதே ‘

அவனை சமாதானப் படுத்தினேன். நான் பேசியது அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது. அவன் அப்பாவிற்கு அவன் மேல் பிரியம் அதிகம். ரவியை அவனை உடன் இருந்து பஸ் ஏற்றி அனுப்பச் சொன்னேன். பஸ் ஏற்றிவிட்டு எனக்கு உடனே போனில் தகவல் சொல்லச் சொன்னேன். . எப்படியோ சமாளித்து அவர்களை அனுப்பினேன். பாபுவை பஸ் ஏற்றிவிட்ட பின் உடனே எனக்குத் தகவல் கொடுத்தான் ரவி. இத்துடன் பிரச்சனை முடியவில்லை என்று எனக்குத் தெரியும்

மறுநாள் மதுரையிலிருந்து போன் வந்தது. பாபு பேசவில்லை. அவனுடைய அக்காதான் பேசினாள். அவர்கள் அப்பா பாபுவின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டராம். ஆனால் அந்தப் பெண்ணின் கர்ப்பத்தை அவளுடைய பெற்றோர்கள் கலைத்துவிடாமல் இருக்க வேண்டும். அது அவர் வாரிசாம். அப்படி நடந்தால் திருமணம் செய்து வைக்க மாட்டாராம்/. பாபு அறையில் அழுது கொண்டு இருக்கின்றான். மீண்டும் தற்கொலை பய முறுத்தல். என்ன செய்வது என்று இப்பொழுது அந்தப் பெண்ணும் என்னிடம் ஆலோசனை கேட்டாள்

பாபுவிற்குத் தைரியம் சொல்லிக் கொண்டு பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். என்ன நடந்தாலும் அப்பாவிடம் பேசி திருமணத்தை முடித்துத் தருவதாகக் கூறிக் கொண்டே இருக்கச் சொன்னேன். இந்த அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பாபு வெளிவருவான் என்றும் அதுவரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன்

எனக்கு அதன் பிறகு எந்த செய்தியும் வரவில்லை. விமானம் ஏறும் வரை போலிசை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இது என் தலைவிதி. பணி செய்யும் காலத்தில் எனக்கு வந்த சோதனைகள் கொஞ்சமா? இது என் ராசி

இரண்டு மாதங்கள் கழித்து ரவியிடமிருந்து தகவல் வந்தது. அதுவரை செய்தியைக் கேட்கக்கூட தயக்கமாக இருந்தது.

பாபு கல்லூரிக்கு வந்துவிட்டான். வாணியும் படிக்க வந்துவிட்டாள். வயிற்றில் குழந்தை இல்லை. காவல் அதிகம்

காதலுக்கு இதெல்லாம் பெரிதா? எப்படியோ பாபுவும் வாணியும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். கல்லூரிப்படிப்பு முடியும் வரை யாருக்கும் தெரியாது. திடீரென்று இருவரும் காணவில்லை. விசாரித்ததில் மதுரைக்கு தன் மனைவியை அழைத்துச் சென்று விட்டான். இனி பெண்ணின் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியாது. இப்பொழுது சட்டப்படி பாபுவிற்குச் சொந்தமானவள் வாணி

இது கதையல்ல .நிஜம்.

என் அனுபவ ஏட்டைப் புரட்டினால் இது போன்ற கதைகள் ஏராளம் !

குழந்தைப் பருவம் முதல் கல்லறை வரை நடந்த உண்மைச் சம்பவங்கள்.

உளவியல் கற்க சான்றுகளுக்காகத் தேடி அலைய வேண்டியதில்லை

அடுத்து இன்னொரு எடுத்துக்காட்டுச் சம்பவம் கூறிவிட்டு வாழ்வியலில் காதலும் காமமும் எப்படி விளையாடுகின்றது என்பதை அலசலாம். எல்லோருக்கும் தெரிய வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள். சேர்ந்து தெரிந்து கொள்வோம்

தொடரும்

படத்திற்கு நன்றி :

http://amazingpicturesofthebirds.blogspot.in/2011/12/love-birds.html

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *