தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 26

0

 

இன்னம்பூரான்

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -25

 

இன்றைய கட்டுரைக்கும், தணிக்கைத் துறைக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும், அத்துறை மட்டுமே அரசு நிதி நிலையை, இடைவிடாமல் ஆராய்வதால், இன்றைய செல்வ நிலை தீர்மானங்களின் திசையைப் பற்றி (RBI’s Monetary policy), இங்கு தொடர்கிறேன். தற்காலம், பல விஷயங்களில், இந்தியா முன் நிலையில் உள்ளது. உலகின் மேலாவாக மேய்ந்து வரும் நாடுகளும் உன்னிப்பாக நம் நாட்டு நடப்புகளை – செல்வ நிலை தீர்மானங்களிலிருந்து, தணிக்கை அறிவிப்புகள் வரை, 2ஜி, எண்ணை, நிலக்கரி மர்மங்கள் வரை, கவனித்து வருகின்றன.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட செல்வ நிலை திருப்புமுனை அறிவிப்பு பற்றி சில வரிகள். அதற்கு முன் ஒரு கதை; சில விளக்கங்கள். இங்கிலாந்தில் பொருளாதாரம் சரிந்து கிடந்த காலகட்டம். ஒருவர் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆர்டர் செய்கிறார், எல்லாரும் சைக்கிள் வாங்கக்கூட யோசிக்கும் வேளையில். கார் விற்பனை ஏஜெண்ட் வீட்டில் அன்று கோலாகலம். கோழிமுட்டையை ஆளுக்கு பாதி உண்ணும் அளவுக்கு தரித்திரம், ஒரு கார் கூட மாதக்கணக்காக விற்காததால். அன்றோ, அவர் மனைவிக்கு விலை உயர்ந்த கவுன் வாங்கிச்சென்றார். ஒரே குதூகலம். துணிக்கடை வியாபாரி, அதீத மகிழ்ச்சியில் பையனுக்கு கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுத்தார். இந்த சங்கிலித்தொடரில், ஊரின் செல்வநிலை உயர்ந்ததாம், அந்த கிழம் ரோல்ஸ்ராய்ஸ் ஆர்டரை ரத்து செய்த போதிலும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்றாலும் வர்ச்சுவல் சட்டி வேலைக்கு ஆகும் என்ற பொருளியல் கூற்றுப்படி, வட்டி விகிதத்தை சுழற்றி, பணப்புழக்கத்தை கையாளமுடியும் என்பார்கள். அது, மற்ற பொருளியல் தந்திர மந்திரங்கள் போல, ஓரளவு தான் வேலை செய்யும். மனிதனின் மனத்தின் ஆழம் காண இயலுமோ? என்னுடைய ஹேஷ்யம்: தற்காலம் உலக பொருளாதாரம் திருவாரூர் தேர் போல ஆடி அசைகிறது. இந்திய ரூபாய் அதலபாதாளத்தில். டாலரின் கிராக்கி ஏறிய வண்ணம். சைனாவின் நடவடிக்கைகள் பொருளியல் ஆருடங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த நிலையிலும், இந்தியாவின் செல்வநிலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், சென்னை அண்ணா சாலை போக்குவரத்து போல, நமது வணிக/தொழில் துறைகள், பல ஷரத்துக்கள் தடுத்தாட்கொள்ள முயன்றாலும், குழம்பிய குளத்தில் மீன் பிடிக்கின்றன. இதற்கு நுணுக்கமான பின்னணி, லஞ்சலாவண்யம் உட்பட, உண்டு. யாராவது கேட்டால், பார்க்கலாம்.

சரி. ரிசர்வ் வங்கி கவர்னர் மார்ச் 2010த்திலிருந்து, பண வீக்கத்துக்கு கட்டுபிடி வைத்தியம் செய்கிறேன் பேர்வழி என்று 13 தடவை வட்டி விகிதத்தை ஏற்றி வந்தார். பணமும் வீங்கிய வண்ணம்! 6.89% ஜாஸ்தி தான். இருந்தாலும், பணப்புழக்கம் அதிகரித்தால் தான், செல்வம் வளரும், வணிகம்/ தொழில்/ ஏற்றுமதி/ கட்டுமானம் எல்லாம் அதிகரிக்கும்; மேலும், செல்வம் வளரும் என்ற நப்பாசை, ரோல்ஸ்ராய்ஸ் கார் ஆர்டரின் தொடர் சங்கிலி நிகழ்வுகளை போல. அது தவிர, புள்ளி விவரங்கள் துள்ளி விளையாடலாம்! இது சலிப்பு தரும் பொருளியல் விழிப்புணர்ச்சிக்கு செய்யும் முயற்சி. வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், தொடரலாம்.
*

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *