இலக்கியம்கவிதைகள்பத்திகள்

அதிகாலைப்பல்லவன் – கவிதைப்புதினம் (பாகம்-4)

பிச்சினிக்காடு இளங்கோ

அரியலூர் நிறுத்தம்-4

ஆமாம்…
தினமும் திருமுகம்
எழுத வேண்டுமாம்

காலையில் கண்டு
களைப்பாற வேண்டுமாம்

இது
அத்தாணி மண்டபத்து
அரசக்கட்டளையல்ல
அந்தப்புரத்து
அரசியின் கட்டளையுமல்ல

கவிதை
ரசிகைக் கட்டளை
கவிதையாய் விளங்கும்
கவிதைக்கட்டளை

எதையும் தவிர்க்கலாம்
கவிஞன்
இதைத் தவிர்க்கலாமா

தவிர்ப்பதற்குரியதா
இந்தக்கட்டளை

இல்லை
இதயங்கள் ஏங்கித்
தவிப்பதற்குரியது

அன்புக்கட்டளை
ஆசைக்கட்டளை
தாகம்
தூண்டும் கட்டளை

தீராத் தாகத்தைத்
தூண்டும் தூண்டிலாய்
கடிதங்கள் ஆனது

தூண்டிலில் சிக்கவே
இதயங்கள்
துடியாய்த்துடித்தது

தவிக்காத இதயங்கள்
இருந்தென்ன லாபம்
தவிர்த்து வாழ்வதோ
காதலுக்குப் பாவம்

தூண்டித்தூண்டியே
தூக்கம் தொலைந்தது

களைப்பை நீக்கிக்
களிப்பை வழங்கும்
மூலிகையாகவே
முடங்கல் ஆனது

இருவருக்கும் அது
பொதுவாய் இருந்தது

இளமையை எனக்கும்
இன்பத்தை மறுமுனைக்கும்
வழங்கி வளர்த்தது; வளர்ந்தது.

மனதில் இருந்த
கேள்வியைக் கேட்டு
மறுமடல் ஒன்று
பறவையாய்ப் பறந்தது

காலையிலேயே
கடிதம் எழுதி
கடிதே அனுப்புவதால்
மறுநாள் காலையில்
பதில் மடல் காத்திருக்கும்

காலையில் எழுதி
மாலையில் சேர்ந்து
மாலையே எழுதி
மடலை அனுப்புவதால்
மறுநாள் காலை
திருமுகத் தரிசனம்
தினமும் கிடைக்கும்

வானொலி நிலையத்துத்
தோழி ஒருவர்
வாங்கிய என் நூல்
தோழியின் தங்கையின்
தங்கக்கைகளில் தவழ்ந்ததால்
வகுப்பறைக்குள்ளேயே
வாசித்து மகிழ்ந்ததால்

கவிதை நூல் இடம்மாறி
கைக்கு வந்ததால்
படிக்க நேர்ந்தது

படித்த கவிதைகள்
மனதுக்கும் பிடித்தது

கவிதைகள் படித்தோம்
இளமையாய் இருந்த
கவிஞரையும் படித்தோம்

பார்ப்பதோடில்லாமல்
பேச்சு வாக்கிலே
முகவரியைப்பெற்றேன்

ஆல் இந்தியா ரேடியோ
ஆருக்குத் தெரியாது
அப்பவே கடிதம்
அறையில் எழுதினேன்

கவிதை படித்ததும்
கவிதையை ரசித்ததும்
தோழிக்குத்தெரியும்

ஏனெனில்
கல்லூரி வளாகத்தில்
நானொரு கவிதாயினி
இலக்கியம் தேடும்
இனிய தேனீ

மடல் போடுவேன் என்பதும்
மடல்வழி பாராட்டை
எழுதுவேன் என்பதும்
தோழிகளுக்கு அது
தொலைதூர ரகசியம்

எனக்கு என்னவோ
எளிதான அதிசயம்.

 

படத்திற்கு நன்றி:http://www.blogymate.com/post.aspx?blogid=29351&t=Few-Tips-for-Writing-CV-and-Cover-Letter

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க