இரெட்டியப்பட்டி சுவாமிகள் – 3

சு.கோதண்டராமன்
சமுதாயப் பிணி அகற்றிய சதுரர்

சுவாமிகள் தோன்றிய காலத்தே இருந்த சமுதாயக் குறைகளை ஒழிக்க அவர் கூறிய உபதேசங்கள் அக்காலத்தில் புரட்சிகரமாகவே தோற்றம் அளித்திருக்க வேண்டும். நாள் கோளை நம்பாதே, மணி மந்திரங்களை நாடாதே, தெய்வத்துக்கு நேர்ச்சைகள் செய்து கொள்ளாதே என்று அவர் உபதேசித்தது தற்கால நாத்திக வாதிகளின் கூற்று போலத் தோன்றினாலும் அவை இறைவனின் தனிப் பெருங் கருணையில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.

“தெய்வமே. எனக்கு நீ செல்வம் தந்தால் நான் உனக்கு அபிஷேகம் செய்கிறேன். நோய் நீக்கினால் காவடி எடுக்கிறேன். மொட்டை அடித்துக் கொள்கிறேன்” என்றெல்லாம் வணிகத் தனமாகப் பேரம் பேசுவது உடையவனின் பெருங் கருணைக்கு ஊனம் கற்பிப்பது ஆகும் என்பது அவரது உபதேசம்.

வள்ளலாரைப் போல இவரும் சாதி சமயச் சழக்குகளைக் கடந்து ஒன்றேயான பரம்பொருளைப் போற்றச் செய்கிறார். இவரது வழிபடு தெய்வம் கணபதி என்றாலும் சிவனையும் முருகனையும் மீனாட்சியையும் பிற மதத் தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார். அல்லா என்பதும் ஏசு என்பதும் ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லா ஈசற்கு அமைந்த ஓராயிரம் திருநாமங்களில் சில என்பது அவரது கொள்கை.

ஏசு கிருஸ்து என்னும் நாமங்கள் சூட்டியே

எங்கும் பல அற்புதங்கள் காட்டிச் சீட

ரங்கம் பன்னிரண்டுகள் நாட்டி

சக்கரம் வந்தது பொய்யா?

முகம்மது நபி

சல்லல்லாகு அலைகியு சல்லமவர்கள் வந்து

நாட்டில் கொடி கட்டி நீதி செய்த

பாட்டினைக் கேட்டதும் பொய்யா?
என்று கேட்கிறார்.

அவரது சீடர்களில் எல்லா மதத்தினரும் இருந்தனர். இறைவனை வழிபடு என்று தான் அவர் உபதேசித்தாரே அன்றி இப்படித்தான் வழிபட வேண்டுமென்று எந்த முறையையும் அவர் குறிப்பிடவில்லை. அவரவர் வழக்கப்படி விருப்பப்படி வழிபடலாம் என்று சுதந்திரம் அளித்து ஒரு சமரச சன்மார்க்கச் சமுதாயத்தை ஏற்படுத்திய அவரை வள்ளலாரின் தென் பதிப்பு என்று கூறலாம்.

வள்ளலாரைப் போல இவரும் காவி வேட்டி முதலான புறத் தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அகத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். உள்ளத்தில் உண்மையான பக்தி இல்லாமல் வெறும் மந்திரங்களை வாயினால் உரைத்தல் பயனற்றது என்பது அவரது கருத்து.

லாயில்லா காலில்லா என்று கலிமா

நவின்றாலாகுமோ நன்று

நேயமாக ரகிமான் கட்டளைப் படி

நிலைத்தாலல்லவோ மிக நன்று என்று பாடுகிறார்.

 

படத்திற்கு நன்றி:http://www.arulsattam.com/temple.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *