வெங்கட் நாகராஜின் அறிமுகத்துடன் ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 1)

அன்பு நண்பர்களே,

நமது சிந்தனைகளை வளப்படுத்துவதிலும், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றிய நமது கண்ணோட்டங்களைத் தெளிவடையச் செய்வதிலும் பயணங்கள் தரும் அனுபவங்களும் முன்னிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. பயணம் செய்வதால் வாழ்க்கையைப் பற்றிய நமது புரிதல்களும் மேம்படுகின்றன. வருடத்தில் ஒரு முறையாவது ஒவ்வொருவரும் தம்முடைய அன்றாடக் கவலைகளைத் தள்ளி வைத்து விட்டு, சுற்றுலாச் சென்று வந்தால் நமது மன அழுத்தங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவது என்பது பலருடைய அனுபவங்களால் அறியப்பட்ட உண்மையாகும். பயணம் செய்வதோடு நின்று விடாமல், அப்பயண அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதென்பது பிறருக்கும் பயனளிக்கும். அத்தகு பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் தில்லியைச் சேர்ந்த வெங்கட் நாகராஜ்.

சுமார் இரண்டரை வருடங்களாக வலைப்பூ எழுதி வரும் வெங்கட், தன்னுடைய பெயரையே தன்னுடைய வலைப்பூவுக்கும் வைத்திருக்கிறார். வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வந்த பயண அனுபவங்களை அதில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மற்றும் பாந்தவ்கர் காடுகளுக்கு ஒரு பயணம் செய்து வந்த அனுபவத்தைப் பற்றி நம் வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இசைந்திருக்கிறார். சுற்றுலா விரும்பிகளுக்கு இந்தத் தொடர் மிகப் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம். இனி, இந்த இதழிலிலிருந்து தொடர் ஆரம்பிக்கிறது. நாமும் ஜபல்பூர், பாந்தவ்கர் காடுகளுக்குப் பயணிப்போம்.. வாருங்கள் நட்புகளே.

அன்புடன்,

(அமைதிச்சாரல்)சாந்தி மாரியப்பன்.

துணையாசிரியர்.

 

ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 1)

அடர் பனியும் அதன் விளைவுகளும்

சில மாதங்களுக்கு முன் ”மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில் நான் அங்கு உள்ள குவாலியர், ஷிவ்புரி, ஓர்ச்சா மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ஜான்சி போன்ற இடங்களுக்குச் சென்று வந்ததைப் பற்றிய பயணக் குறிப்புகளை 27 பகுதிகளாக எழுதியது எனது வலைப்பூவினைத் தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அதை முடிக்கும் போது சீக்கிரமே இன்னுமொரு பயணத் தொடரினை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தத் தொடரிலிருந்து உங்களை மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். கூடவே வருவீர்கள் தானே?

இம் முறை நான் சென்றது ஜபல்பூர் மற்றும் பா[B]ந்தவ்கர் என்ற இரண்டு இடங்களுக்கு. அலுவலகப் பணிகளுக்கென ஒரு மாதம் பயிற்சி வகுப்புகள் இருந்தது. அதன் நடுவில் நான்கு நாட்கள் நேரடியாக சில கிராமங்களுக்குச் சென்று நலத்திட்டங்கள் எப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவும், இந்திய தேசத்தின் இயற்கை மற்றும் வனங்களின் வளத்தைப் பார்க்கவும் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

11-ஆம் தேதி [ஜனவரி] அன்று மாலை 04.00 மணிக்கு தில்லியின் ‘ஹஸ்ரத் நிசாமுதீன்” ரயில் நிலையத்திலிருந்து ஜபல்பூர் வரை செல்லும் ‘மஹா கௌஷல்’ விரைவு வண்டியில் நாங்கள் அனைவரும் [மொத்தம் 35 பேர்] செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ரயில் நிலையம் செல்வதற்கு முன் மதியம் சுமார் 02.30 மணிக்குத் தொலைபேசியில் ரயில் சரியான நேரத்திற்குக் கிளம்புகிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள அழைத்த போது இரவு 09.00 மணிக்குத் தான் கிளம்பும் என்றார்கள். [கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னைப் பயணத்தின் போதும் இப்படித்தான் நீண்ட நேரம் கழித்தே கிளம்பியது… நமக்கு அப்படி ஒரு ராசி!] அதன் பிறகு அப்படியே தள்ளிப் போடப்பட்டு 11.00 மணிக்குத்தான் கிளம்பும் எனத் தெரிந்தது.

தில்லி மற்றும் வட இந்திய நகரங்களில் பெரும்பாலும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இருக்கும் அடர்பனியும், பனிமூட்டமும் விமான, ரயில் போக்குவரத்தினை ரொம்பவே பாதிக்கும். எத்தனை விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டாலும் இயற்கையின் முன் நாம் எல்லோரும் தோற்றே விடுகிறோமோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். அது உண்மைதான் என்று நினைக்கும்படிச் செய்தது அன்றைய நிகழ்வு.

மாற்றப்பட்ட பயண நேரம் நிறைய விஷயங்களை மாற்றியது. வகுப்பிலிருந்தே நேராக ரயில் நிலையம் செல்ல வேண்டுமெனக் காலையிலேயே பெட்டியுடன் எல்லோரும் வகுப்புக்குச் சென்றோம். நேரம் மாறியதால் திரும்பவும் வீட்டிற்கு வந்து இரவு மீண்டும் கிளம்பி ரயில் நிலையம் சென்றேன். சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதால் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு நல்ல விஷயமும் இருந்தது.

அது என்ன நல்ல விஷயம் என்று கடைசியில் சொல்கிறேன்… 🙂 இந்தப் பயணத்தின் போது நான் எடுத்த சில புகைப்படங்களைக் கொடுத்துள்ளேன் ஒரு முன்னோட்டமாக…

என்ன புகைப்படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? நன்றி. அதெல்லாம் சரி அந்த நல்ல விஷயம் என்ன என்பதை மேலும் காலம் தாழ்த்தாது சொல்லி விடுகிறேன். எங்கள் அனைவருக்குமே 3-AC-இல் தான் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். நேரம் கடந்து வண்டி புறப்பட்டதாலோ என்னவோ, முன்பதிவு செய்த நிறைய பேர் தங்களது பயணத்தினை இரத்து செய்துவிட்டதால் என்னுடைய பயணச்சீட்டினைச் சேர்த்து 8 பேர்களுடைய பயணச்சீட்டு 2-AC – க்கு மேம்படுத்தப்பட்டது.

பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது “Do you want to be upgraded?” என்று கேட்டு ஒரு வரி இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை TICK செய்தாலும் இதுவரை நடந்ததே இல்லை… 🙁

ஆனால் இம் முறை மேம்படுத்தப்பட்டதால், 2-AC-இல் நானும் மற்ற 7 நபர்களும் பயணம் செய்தோம். சுகமான பயணம். மத்தியப் பிரதேச சுற்றுலா துறையினர் தான் இந்தப் பயணத்தினை ஏற்பாடு செய்தார்கள். சென்ற பயணத்தின் போது எங்களுடன் வந்த திரு ரோஹித் பட்நாகர் அவர்களே இந்த முறையும் வந்தார். பயணத்தின் போது வேளாவேளைக்குத் தேவையான உணவு, தண்ணீர், தேநீர் என எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடு செய்திருந்தார். நல்ல படியாகப் பயணம் முடிந்து 12-ஆம் தேதி மாலை 07.00 மணி அளவில் ஜபல்பூர் சென்றடைந்தோம். 2-AC-இல் பயணம் செய்தாலும் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது! அது…

அடுத்த பகுதியில்…

2 thoughts on “வெங்கட் நாகராஜின் அறிமுகத்துடன் ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 1)

  1. இவருகிட்டே உள்ள கெட்ட பழக்கமே இதான். முடிக்கும் போது சஸ்பென்ஸ் வச்சிடுவார். :))

    அசத்துங்க வெங்கட். நாங்களும் சேர்ந்து பயணிக்கிறோம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க