முகில் தினகரன்

வாலிப வயதில்
உன் மேனியில் முளைக்கும்
இன்னுமொரு வெளியுறுப்பு….மனைவி!
வெளியுறுப்புத்தான்
ஆனாலும்
உள்ளுறுப்புக்கள் மொத்தத்தையும்
உற்சாகமாய் இயக்கி வைக்கும்
புடவை கட்டிய ரிமோட்…..மனைவி!
உன் இளமைக் கொசுக்களின்
தனிமைக் கடிகளை
இன்பப் படிகளாய் மாற்றும்
சுக வர்த்திச் சுருள்…..மனைவி!

பொறுப்பற்ற பயலென்னும்
போலிப் பட்டத்தை அழித்துப்
பொறுப்பான கணவனென்னும்
புதுப் பட்டத்தை உனக்கு வழங்கும்
உயிருள்ள யுனிவர்ஸிட்டி….மனைவி!

தாம்பத்ய சுகத்தை
உன்னோடு பகிர்ந்து கொண்டு
பிரசவ வேதனையைத்
தான் மட்டும் ஏற்பதால்
அருள்மிகு மனைவியேஸ்வரி அம்மன்!

உன் சந்ததிச் சங்கிலி அறுபடாதிருக்க….
உன் வம்ச வாழை வீழாதிருக்க….உன்னிடம் கரு வாங்கி
உன் அப்பன் பாட்டனிடம் உரு வாங்கி
உனக்கொரு வாரிசுச் சிற்பம் செதுக்கித்தரும்
காப்புக்கலை நிபுணி…..மனைவி!

உன் கோபத்தைக் கம்மலாக்கி
உன் மூர்க்கத்தை மூக்குத்தியாக்கி
உன் வசைகளை வளையல்களாக்கி
உன் வறுமையை விலாசம் மாற்றி
நல் பொறுமையை உனக்குள் நாட்டும்
போதி மரமப்பா ….மனைவி!

உன் சோகங்களைச் சுட வந்த
வெல்வெட் தோட்டா…
உன் துயரங்களைத் துடைக்க வந்த
அனிச்ச மலர்த் தூரிகை…
உன் கவலைகளைக் களைய வந்த
கந்த சஷ்டிக்கவசம்!

புள்ளி முதல் பருவம் வரை
துள்ளித் திரிந்த வீட்டை விட்டு
உருண்டு புரண்ட மண்ணை விட்டு
வேறொரு நிழலில் வாழ்க்கை தேடும்
வேடந்தாங்கல் பறவை….மனைவி!

உன் ஆயுளுக்காய் விரதமிருக்கும்
அபலையின் ஆயுள் குறித்து
ஒரு நாளேனும் நினைத்ததுண்டா நீ?

உன் வயிற்றுப் பசிக்காய் அடுப்படியில்
வறுவலாகும் அவளின்
அன்புப் பசி குறித்து
அறிந்ததுண்டா நீ?

உன் உணர்வு வேட்கைக்காய்
உடல் தேயும் உத்தமியின்
உள் வலி குறித்து ஒரு நாளேனும்
உணர்ந்ததுண்டா நீ?

மணமுறிவிற்காய் மனுப் போடும்
முட்டாள் கணவர்களே!
நீதி மன்றம் உமக்களிக்கும்
விவாகரத்துத் தீர்ப்பு
வெற்றி மாலையென மார் தட்டாதீர;..
அது
சடடம் வழங்கிய தற்கொலை அனுமதி!

படத்திற்கு நன்றி:http://simone-preuss.suite101.com/what-to-wear-at-indian-weddings-a87381 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *