இரெட்டியப்பட்டி சுவாமிகள்-4
சு.கோதண்டராமன்
ஏழுபிறவிக் கடலை ஏற விடு நற்கருணை ஓடக்காரர்
சுவாமிகள் தம் தவ வலிமையால் பல அற்புதங்கள் செய்தார். நூறு பேருக்குச் சமைத்த உணவைக் கொண்டு இருநூறு பேர் வயிறார உண்ணும்படிச் செய்தார். நோய்களையும் பேய்களையும் தம் கரத்தால் தொட்டே ஓடச் செய்தார். இறந்து போனவரைப் பிழைக்க வைத்தார். தன் சீடர்களும் திருநீறு கொடுத்து நோய் நீக்கும் வலிமை பெறச் செய்தார்.
இத்தகைய சித்து விளையாட்டுகளே தம் தவத்தின் முடிந்த முடிவாகக் கொள்ளவில்லை அவர். தம் சீடர்களும் அத்தகைய மயக்கம் கொள்ள இடம் தரவில்லை.
அம்புவி போற்றிடப் பெரும் சித்துகளைக் காட்டி
அனேக தேவர்களுக்கு இடுக்கண்கள் செய்தது
போதும் போதுமையே எடுத்த சென்மம்
போதும் போதுமையே.
என்று அவர் பாடுகிறார். சித்துகள் கைவரப் பெற்றபின் அத்துடன் நிறைவு பெற்றதாகக் கருதாமல் தொடர்ந்து இறைவனைத் தியானித்து வந்தால் நிஷ்டை கை கூடும். பிறவிப் பிணி ஒழித்துப் பேரின்ப நிலை எய்தலாம் என்கிறார் அவர். சித்துகளால் மட்டும் பெருமை பெற்றோர் மறைந்தால் அவர் தம் புகழும் மறைந்து விடும். நிலை முத்திக்கான வழியைக் காட்டியதால் தான் சுவாமிகளின் புகழும் நிலைத்துள்ளது.
சுவாமிகளின் போதனைகள் சட்டம் என்ற பெயரால் வழங்கப்பட்டாலும் அவை கடுமையானவையாக இல்லை. அவர் தம்மைப் பின்பற்றி எவரும் துறவு கொள்ள அனுமதிக்கவில்லை.
சுவாமிகள் மரக்கறி உணவுக் கொள்கையை வலியுறுத்தினார். அது அளவு கடந்த அன்பின் அடிப்படையில் அமைந்தது. உணவுக்காக உயிர்களைக் கொல்லுவதை மட்டும் அவர் தடுக்கவில்லை. நமக்குத் துன்பம் தரும் விலங்குகளுக்கும் பூச்சிகளுக்கும் கூடத் தீங்கிழைக்கக் கூடாது என்று அவர் போதித்தார். கொடிய தேளையும் விஷப்பாம்புகளையும் சுவாமிகளின் பெயரைச் சொல்லிக் கையால் பிடித்துப் புறத்தே கொண்டுவிடுவோர் பலர் அவருடைய சீடர்களில் இருந்தனர். சுவாமிகளின் அருள் வெள்ளமும், அவரது உபதேசங்களில் அடங்கி இருந்த உண்மையின் வலிவும் அடியவர்களுக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையும் புலனாகின்றன.
சுவாமிகள் வலியுறுத்தியது ஒன்று தான் – உடையவன் பால் பற்றுறுதி. மற்ற விஷயங்களில் அவர் அடியார்களுக்கு எல்லையற்ற சுதந்திரம் அளித்தார். சட்டத்தை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லையா, கவலை வேண்டாம், முடிந்த வரை செய்யுங்கள். வேலைக்கு ஏற்ற கூலி உண்டு. உடையவனிடம் முறையிடுங்கள். அவனே உங்களுக்கு வழிகாட்டி சட்டத்தைப் பின்பற்றத் தேவையான மன வலிமையை அளிப்பான். உடையவனை எப்பெயரிட்டாவது அழையுங்கள், எந்த மதம் சாதி வழிபாட்டு முறையைச் சேர்ந்தவரானாலும் அவரவர் முறைப்படி உடையவனைச் சேவியுங்கள். நன்மையோ தீமையோ எதுவானாலும் அதை அவனது அருட்கொடையாக ஏற்று மகிழுங்கள். அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு சோதிடம் மணி மந்திரம் ஔடதம் அறமன்றம் முதலான குறுக்கு வழிகளை நாடாதீர்கள் என்று உபதேசித்தார்.
படத்திற்கு நன்றி:http://www.arulsattam.com