சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-7)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

மாமியும், ப்ரியாவும் கூடிக்கூடிப் பேசினர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த முறை சிவநேசன் ஃபோன் செய்யும் போது சொல்லி விடலாம் என்று யோசித்தனர். அப்படி அவர்கள் விஷயத்தைச் சொல்லி அவன் தன் டூரை பாதியிலேயே முடித்துக் கொண்டு வந்து அதனால் மங்கையின் நிலை மேலும் மோசமாகி விடக் கூடாது அல்லவா? ஏனென்றால் அவளுக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் என்ற விவரத்தையே இன்னும் தெரியப் படுத்தவில்லையே. அதைத் தெரிந்து கொண்டால் மங்கை உணர்ச்சி வசப்படுவாள் அது அவள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம் என்று அவளிடமிருந்து விஷயத்தை மறைத்து விட்டனர்.

குழந்தைகளிடமும் அம்மாவுக்கு ஏதோ ஒரு சிறிய ஆபரேஷன் சில மாதங்களில் சரியாகி விடும் என்று தான் சொல்லியிருந்தனர். நித்திலா சிறு குழந்தை என்பதால் சமாதானமாகி விட்டாள். ஆனால் நிகில் தான் கேள்விகள் பல கேட்டு அவர்களைத் துளைத்தெடுத்தான் அவனைச் சமாதானப் படுத்த முடியாமல் ஒரு கட்டத்தில் மாமியும் ப்ரியாவும் அவனிடம் மங்கையின் மேஜர் ஆபரேஷனைப் பற்றிச் சொல்லி விட்டனர்.

அமைதியாக எதிர் கொண்டான் அந்தச் செய்தியை. “ஆபரேஷன் செஞ்சா சரியாய்டும் இல்லையா” என்று கண்கள் கலங்க அவன் கேட்டபோது அவனை வாரி அணைத்துக் கொண்டாள் மாமி. மிகவும் பெரிய மனிதன் போல் “பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்” என்று கவலைப் பட்டான். “டேய் நிகில் கண்ணா! அது பத்தியெல்லாம் நீ கவலைப் படாதேடா! நாங்க பெரியவா பத்துக்கறோம். நீ எதப் பத்தியும் கவலைப் படாமே படி. உங்கம்மா பக்கத்துல இருந்து பாத்துக்கோ அது போறும், பகவான் அருளாலே எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றாள் மாமி. அவளுடைய ஆதங்கத்தில் இளம்பெண்ணான ப்ரியாவையும் பெரியவர்கள் லிஸ்டில் சேர்த்து விட்டாள்.

மறு நாள் சிவநேசன் ஃபோன் செய்தான். மிகவும் உற்சாகமாக இருந்தான். லண்டனில் அவன் வேலை முடிந்து விட்டதாகவும் நாளை மறு நாள் அங்கிருந்து சீனா கிளம்புவதாகவும், சீனாவில் வேலையைச் சீக்கிரம் முடித்துக் கொண்டு எப்படியும் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வந்து விடுவதாகவும் கூறினான். முன்பே பேசி வைத்திருந்தபடி இவர்கள் யாரும் மங்கையின் உடல் நிலையைப் பற்றி வாயே திறக்கவில்லை. எப்படியும் பதினைந்து நாளில் வந்து விடுவான் என்ற செய்தியே அவர்களுக்குத் தெம்பளித்தது.

நாளை மங்கையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இன்னும் பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ப்ரியா ஒரு யோசனை சொன்னாள். “மாமி அண்ணி எனக்குன்னு கல்யாணத்துக்கு நகை சேர்த்து வெச்சிருக்கு. எனக்குக் கல்யாணம் முடிய எப்படியும் இன்னும் இரண்டு மூணு வருஷம் ஆகும். அது வரை அந்த நகையெல்லாம் வெறுமே பீரோவுல தான் இருக்கப் போகுது. நாம அதை வித்துக் கொஞ்சம் பணம் புரட்டினா என்ன?” என்றாள்.

மாமிக்கு மளுக்கென்று கண்களில் நீர். “அம்மா! ப்ரியா! அண்ணிய விஷமா வெறுக்கற நாத்தனாரையும், நாத்தனார்னாலே எப்போடா வீட்டை விட்டுப் போவான்னு எதிர் பாக்கற அண்ணியையும் தான் நான் பாத்துருக்கேன். உங்காத்துல தான் வித்தியாசமா இருக்கு. இவ்ளோ நல்ல மனசுள்ள உங்களைப் பகவான் ஏன் தான் இப்படி சோதிக்கறானோ? நீ சொல்ற யோசனை எனக்குப் பிடிக்கல்லேன்னாலும் இப்போ அதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியே செய்துடுவோம்” என்றாள் மாமி.

“ஆனா மாமி! அந்த நகைங்களை வித்தா ரெண்டு லட்சம் அல்லது ரெண்டரை லட்சம் தான் வரும். மேற்கொண்டு ஒரு மூணு வேணுமே அதுக்கு என்ன செய்ய? என்றாள் ப்ரியா. குரலில் அவள் வயதுக்கு மீறிய கவலை. “நீ கவலைப் படாதே ப்ரியா, பாக்கிக்கு நான் ஒரு யோசனை வெச்சுருக்கேன்” என்றாள் மாமி.

“என்ன யோசனை மாமி?”

“நான் அனாதைன்னு தான் உனக்குத் தெரியும். ஆனா என் சொந்த ஊரான கல்லிடைக்குறிச்சியிலே எங்கம்மா அப்பா எம்பேர்ல விட்டுட்டுப் போன மஞ்சக்காணிச் சொத்து ஒரு அஞ்சு ஏக்கர் இருக்கு. என்னைக் கடைசி வரைக்கும் வெச்சுக் காப்பாத்தறவாளுக்கு அதைக் குடுக்கணும்னு நெனச்சுண்டு இருந்தேன். ஆனா இப்போ எனக்கு அடைக்கலம் குடுத்த மங்கையோட உசிர் ரொம்ப முக்கியம். அதனால நான் அந்த மஞ்சக் காணிய வித்துடலாம்னு பாக்கறேன். அந்த நெலத்தைக் குத்தகைக்கு எடுத்துருக்கற பலவேசத் தேவர் ரொம்ப நாளா எங்கிட்ட அதை வெலைக்குக் கேட்டுண்டு இருக்கார். அவருக்கே அதை வித்துடறேன். அதுல எப்படியும் மூணுக்கு குறைவில்லாமல் கிடைக்கும். அதனால் நீ எதுக்கும் கவலைப் படாமே மங்கையை ஆஸ்பத்திரியில சேக்கற வழியப் பாரு” என்றாள்.

மாமியைக் கட்டிக் கொண்டு கதறி விட்டாள் ப்ரியா. “மாமி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்லே. இந்த வீட்டு தெய்வத்தைக் காப்பாத்த வந்த குலதெய்வம் மாமி நீங்க!. எங்க அண்ணியோட அம்மா இருந்திருந்தாக் கூட அவங்க இப்படி செஞ்சிருப்பாங்களாங்கறது சந்தேகம் தான். உங்க நல்ல மனசுக்கு ஒரு கொறையும் வராது மாமி” என்று அழுது விட்டாள்.

“ஸ்ஸ்ஸ்! எதுக்கு இப்போ இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டுக் கத்தறே? மங்கை கேட்டா என்ன ஆகும்? கண்ணைத் தொடச்சிக்கோ! நான் இன்னிக்கே ஊருக்குப் பொறப்படறேன். ஏற்கனவே பலவேசத் தேவருக்கு விஷயத்தைச் சொல்லி லெட்டர் எழுதிப் போட்டுட்டேன். அவர் பணம் ரெடி பண்ணிட்டேன்னு ஃபோன்ல சொன்னார். நான் நேரே போய் கையெழுத்துப் போட்டுட்டுப் பணத்தை வாங்கிண்டு வந்துடறேன். நாளன்னிக்கு வந்துடுவேன். மங்கையை இன்னிக்கே ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிடுவோம்” என்றாள் மாமி.

“நீங்க எங்கேன்னு கேட்டா என்ன பதில் சொல்ல மாமி?”

“ஆத்துல ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கேன், ஒடம்பு சரியில்லைன்னு எதையாவது சொல்லி சமாளிச்சுத்தானே ஆகணும்? இந்த ஆத்தைக் கட்டிக் காப்பாத்தற பொறுப்பு இப்போ உனக்கும் எனக்கும் தானே இருக்கு? நீ கவலைப் படாதே ப்ரியா. நான் போனேன் வந்தேன்னு வந்துடறேன். அது வரை குழந்தைகளையும் பாத்துக்க வேண்டிய பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சுட்டுப் போறேன். குருவி தலையிலே பனங்காய் தான். இருந்தாலும் வேற வழியில்லையே என்ன செய்ய?” என்று புலம்பிய மாமியைச் சமாதானம் செய்தாள் ப்ரியா.

ஏற்கனவே தீர்மானித்தபடி ப்ரியாவின் நகைகளை விற்றதில் இரண்டு லட்சத்திற்குப் பத்தாயிரம் குறைவாகக் கிடைத்தது. இதில் அவளுக்குப் பெருத்த ஏமாற்றம். இருந்தாலும் மறைத்துக் கொண்டு அண்ணியை ஆஸ்பத்திரியில் சேர்த்தாள். கணிசமான பணம் அதற்கே செலவாகி விட்டது. மாமி புறப்பட்டுப் போய் விட்டாள். ப்ரியாவுக்கு திக் திகென்று இருந்தது.

“மாமி எப்போது திரும்பி வருவாள்? உண்மையில் வருவாளா? மாமி என்ன தான் நல்லவளா இருந்தாலும் இத்தனைப் பெரிய தொகையை இந்தக் குடும்பத்திற்கென்று செலவழிப்பாளா? ஒரு வேளை இது தான் சமயம் என்று ஓடி விட்டாளோ? மாமி திரும்பி வராவிட்டால் தன் நிலை என்ன? மீதித் தொகையை எப்படிப் புரட்ட? பேசாமல் அண்ணனுக்கு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொல்லி விட வேண்டியது தான்” இப்படிப் பலவாறாகக் குழம்பிக் கொண்டிருந்தாள் ப்ரியா. டாக்டரின் அழைப்புக் கேட்டு விரைந்தாள்.

“ஒண்ணும் கவலைப் படாதீங்கம்மா! ஆபரேஷனை ரெண்டு நாள் கழிச்சு தான் வெச்சிருக்கோம். இந்த ரெண்டு நாள்ள உங்க அண்ணி உடம்பை ஆபரேஷனைத் தாங்கற அளவுக்குச் செய்திடுவோம். இந்த சிட்டியிலயே பெரிய டாக்டர் வந்து ஆபரேஷன் பண்ணப் போறார். ரெண்டு நாள்ல நீங்க பாக்கிப் பணமான ரெண்டு லட்சத்தைக் கட்டிடுங்க! இன்னும் ஒரே மாசத்துல ஒங்க அண்ணி வீட்டுக்கு வந்து எல்லாரையும் போல வாழ்க்கை நடத்தலாம்” என்றார்.

அவர் சொன்னது என்னவோ உற்சாகமான செய்தி தான். ஆனால் பணம் குறித்த பயம் ப்ரியாவின் நெஞ்சில் கட்டி கட்டியாகத் தங்கியது. மாமியின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் கூடவே நிறையப் பிரார்த்தனைகள் வேறு.

 

படத்திற்கு நன்றி:http://www.marketplace.org/topics/world/gold-fever-global-should-we-trust-it

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *