கவியரசரின் கானவரிகளுக்குள் காணாமல் போன வேளை
சக்தி சக்திதாசன்
கவியரசரின் அனுபவச் செறிவை, தமிழ்ச் சொல்லாற்றலை, படைப்புத் திறமையை, கவிதைகளின் ஆழத்தைக் கண்டு எத்தனையோ முறை வியந்திருக்கின்றேன். வியந்து கொண்டிருக்கின்றேன். கவிதைகள் எழுதுகின்றோம், ஒருவரின் படைப்பைப் படித்துக் கருத்துச் சொல்லுகின்றோம். ஆனால் ஒரு காட்சியைக் கூறிவிட்டு அந்தச் சூழலுக்கேற்றவாறு, கதையோட்டத்தோடு இணைத்து ஒரு பாடல் அமையுங்கள் என்று தயாரிப்பாளரும், இயக்குனரும் வேண்டுகோள் விடுக்கும் போது, அத்தனைச் சொற்களையும் எந்தக் களஞ்சியத்திலிருந்து எமது கவியரசர் எடுப்பாரோ தெரியாது, ஆனால் அவர் தனது பாடலை முடித்ததும் அதன் கருத்தின் இனிமைக்கு இணையே கிடையாது.
இதோ இங்கே நான் அடுத்தொரு பாடலை எடுத்து வருகின்றேன். இது இருவர் உள்ளம் என்னும் திரைப்படத்திற்காக, சரோஜாதேவியின் நடிப்புக்கு, பி.சுசீலாவின் காந்தக்குரலின் ஒலிப்பில் கவியரசரின் தமிழ் விளையாடும் மேடையிது.
இந்தப் படத்தை அநேகம் பேர் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பெண்களோடு சல்லாபமடித்துத் திரியும் இளைஞன் சிவாஜியின் கண்களில் சரோஜாதேவி தட்டுப்படுகின்றார்.
சரோஜாதேவியின் பண்பேயுருவான அழகிற்குத் தன்னைப் பறிகொடுத்த சிவாஜி, தனது பணத்தின் பலத்தினால் அவரையே தனக்கு மனைவியாக்கிக் கொள்கின்றார். ஸ்திரி லோலனாக இருந்த தனது கணவனின் மேல் வெறுப்புக் கொள்கிறார் சரோஜாதேவி.
சரோஜாதேவியை உண்மையாக நேசிக்கும் சிவாஜி தான் திருந்தி விட்டதாகக் கூறுவதை அவர் நம்ப மறுக்கிறார். அத்தகைய சூழலிலே வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர் முன்பாக ஒரு பாட்டுப் பாடும்படி சரோஜாதேவியை வற்புறுத்துகிறார் சிவாஜி, மற்றவர் முன்னிலையில் தனது கணவனுக்குக் கெளரவக் குறைச்சலை ஏற்படுத்தக் கூடாது எனும் காரணத்திற்காகப் பாடுகின்றார் சரோஜாதேவி. எங்கே அந்தச் சூழலில் எமது கவியரசரின் கலைவண்ணத்தைப் பார்ப்போமா !
இதயவீணை தூங்கும் போது
பாடமுடியுமா ?
இரண்டு கண்கள் இரண்டு
காட்சி
காண முடியுமா ?
உதடு சிரிக்கும் நேரம்
உள்ளம்
சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம்
உண்மையாகுமா ?
காட்டுக்குயிலை வீட்டில்
வைத்தால்
பாட்டுப்பாடுமா ? (இதயவீணை)
ஆமாம், மனதுக்கு ஒவ்வாதவனை, பெற்றோரின் வற்புறுத்தலின் காரணமாக மணந்த அந்த அணங்கின் மனதிலுள்ள வீணை எவ்விதம் கானம் இசைக்கும்? ஒவ்வொரு கண்ணும் ஒவ்வொரு காட்சியைக் காண எத்தனித்தால் அதன் அழகை ரசிக்க முடியுமா? அவளின் உள்ளம் அவனை வெறுத்துக் கொண்டிருக்க, வெளியுலகத்திற்காக வாழும் அவளின் நிலையும் அதுதானே !
உதட்டில் வெறுமையான உயிரில்லாத சிரிப்பு. அதன் வடிவம் சிரிப்பாக இருந்தாலும் அது உள்ளத்தின் அழுகையைத்தானே பிரதிபலிக்கின்றது. எத்தனையோ வேஷங்களை எமது உருவம் போட்டாலும், அது எப்படி உண்மை வடிவமாகும் ? இப்போ அவள் போட்டிருப்பது கூட மனைவி எனும் வேஷம் தானே !
காட்டுக்குள்ளே சுதந்திரமாகக் குயில் வாழ்கின்றது. இந்த மூட மனிதன் என்ன செய்கின்றான், அந்தக் குயிலைப் பிடித்து வந்து, பாவம் நீ காட்டுக்குள் மிகவும் கஷ்டப்படுகின்றாய் என்று சொல்லி, தங்கக் கூட்டில் பாலும், பழமும் கொடுக்கின்றான். வாழ வேண்டும் எனும் கடமைக்காக மட்டும் உண்ணும் அந்தக்குயில், தனது ஆத்மதிருப்திக்காகப் பாட்டுப்பாடுவதை நிறுத்தி விடுகின்றது. நண்பர்களே! இங்கேதான் கவியரசரின் இந்த தமிழ் வன்மை, கருத்துச் செறிவு விஞ்சி நிற்கின்றது. அந்தப்பெண்ணின் உண்மை நிலையை இரு வரிகளில் விளக்கி விடுகின்றாரே இந்த வித்தகர் !
மனதை வைத்த இறைவன் அதில்
நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து
கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி
அழகை வைத்தானே… அந்த
அழகைக் கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே (இதயவீணை)
மனிதனாய் இறைவன் பிறக்க வைத்ததே பாவம். அத்தோடு விட்டானா? அவர்க்கு மனதை வேறு படைத்து விட்டானே ! அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? அந்த மனதில் நினைவு என்னும் ஒரு பெட்டகத்தை வைத்து விட்டான், அதற்குள் இருக்கும் தீயகுணம் என்னவென்றால், மற்றைய மனிதர்களின் செயல்களைக் கொண்டு அவர்களை எடை போடக்கூடிய திறமையாம்.
எப்படி இருக்கிறது கவியரசரின் காட்சிச் சித்தரிப்பு ?
இந்தப் பாழாய்ப்போன இறைவன் இருக்கின்றானே? அவனது விளையாட்டுக்கு எல்லையே கிடையாதாம். பெண்களின் மேனிக்கு அழகு எனும் ஆபரணத்தைக் கொடுத்து விட்டான். இந்த அழகு ஆபரணம் பாவம் அந்த ஏழைப்பெண்ணின் மீது ஒட்டிக் கொள்கிறது. அதற்கு அவள் கொடுத்த பரிசு என்ன என்கிறீர்கள்? அவளுடைய சந்தோஷத்தையே விலையாகக் கொடுத்து விட்டாள். மனிதர்களில் ஆண்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் பணம் மட்டும் வந்து விட்டதோ அப்புறம் உணர்ச்சிகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அழகிய பெண்ணைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கி அடிமையாக்கி விடுவார்கள்… அப்பப்பா, பெண்களுக்குத்தான் எத்தனை துன்பம்…
உருகி விட்ட மெழுகில்
ஒளியேது
உடைந்து விட்ட சிலையினிலே
அழகேது
பழுதுபட்ட கோவிலிலே
தெய்வமேது
பனிபடர்ந்த பாதையிலே
பயணமேது
மெழுகுத்திரி உருகிக் காய்ந்து போன பின்னாலே, சிலையை போட்டு உடைத்த பின்னாலே, பாழடைந்த கோவிலில் தெய்வதரிசனம் போலே, பனி நிரம்பிய பாதையை எத்துணை தூரம் நடந்து, எங்கே போய்ச் சேர்வது?
எப்படியாக இருந்த அந்த இளம் அழகிய மானை பணம் எனும் ஆயுதம் கொண்டு, உருகிவிட்ட மெழுகாய், உடைந்து விட்ட சிலையாய், பழுதடைந்த கோவிலிலே தெய்வமாய், பனி படர்ந்த பாதை போல இந்தப் பாழும் சமுதாயம் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையிலே சிறைப்படுத்தி விட்டது?
கவியரசரின் உன்னதமான ஒரு படைப்பு. இந்தப் படைப்பின் விசித்திரம் என்னவென்றால் ஓடும் பழமும் போல மற்றொரு கருத்தையும் பாடலில் புதைத்துள்ளார்.
என்ன என்கிறீர்களா?
தங்கக்கூட்டில் குயிலாய், பாழடைந்த கோவிலில் தெய்வமாய், தூங்க வைத்து அழகு பார்க்கும் இதயவீணையாய் யாரைச் சித்தரிக்கிறார்?
அந்த நிம்மதியில்லாத பெண்ணை, அப்படியாயின் அப்பெண்ணுக்குத் தங்கக் கூட்டைக் கொடுத்து, அவளை இனிமையான நாதம் எழுப்பும் வீணையாய், பாழடைந்த கோவிலிலே இருந்தாலும் தெய்வமாய்ப் பார்ப்பது யார்?
அவளது கணவன் ……. இப்போது பார்த்தீர்களா? தன்னைப் பிடிக்காத மணந்து கொண்ட அந்தப் பணக்காரக் கணவன் தன்னுடைய மனைவியை மிகவும் நேசிப்பதைக் கூட அழகாய் இலைமறைகாய் போலத் தன்னுடைய வரிகளுக்குள் மாற்றுக் கருத்தாய் பதித்துள்ளார் எம் தமிழ்த்தாயின் அன்புப் புதல்வன்.
படத்திற்கு நன்றி:http://www.nilacharal.com/enter/celeb/kannadasan.asp
சிறை வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை இதை விட சிறப்பாய் சொல்ல இயலுமா? காலத்தால் அழிக்கவியலாத பாடல் இது.. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை என்று இதனால் தான் சொல்லியிருப்பாரென்று எண்ணுகிறேன்.