அவ்வை மகள்
தாட்கள் கொண்டே சாதிக்க முடியும்!

புத்தக-நோட்டுப் புத்தக மூட்டைகள் சுமந்தபடி பள்ளிக் குழந்தைகள் போவதும் வருவதும் குழந்தைகளுக்கு மட்டுமா தொந்திரவு?

அவர்கள் பயணிக்கும் பேருந்துகளில் இப்பைகளால் ஏற்படும் இடைஞ்சல் எத்தனை? – நெருக்கடி எத்தனை? – சிறிதும் பெரிதுமாகப் பேருந்துக்குள் ஏற்படுகிற விபத்துக்கள் எத்தனை?

பொதுப்பேருந்தில்பயணம் செய்தாக வேண்டிய குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பிற பயணிகளிடம் வசவு வாங்காமல் பள்ளி சென்று வருவதில்லை என்றால் இதற்குக் காரணம் அவர்களது புத்தகப் பைகள் தானன்றோ!

போதாக்குறைக்கு அவர்களது ஷூக்கள்!

நெரிசலில் பேருந்துக்குள் தொற்றி ஏறிக் காலைப் பதிக்க இடம் துழாவும் வேளையில் குழந்தைகள் பிற பயணிகளின் காலை நன்றாக மிதித்து, காலையிலும் மாலையிலும் “சாவு கிராக்கி; என மிக நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்!

“ஆய்ஷ் மான் பவ” என்பது போன்ற இந்த வேத(னை) அர்ச்சனையே பள்ளியின் முடிவும் தொடக்கமுமாக ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு அமைகிறது.

இது மட்டுமா? கூடுதலான வரப்பிரசாதக் காட்சிகளும் உண்டு – இவை யாவும் இலவசம்!!

புத்தக மூட்டைகளுடன் குழந்தைகளை நிறுத்தத்தில் பார்த்த மாத்திரத்தில், பல சமயங்களில், ஓட்டுனர்கள்-நடத்துனர்கள், நிறுத்தத்தில் நிறுத்த வருவது போல் பாசாங்கு காட்டி விருட்டென்று போவர். அவர்கள் இவ்வாறு போகும் வேளைகளில் புத்தக மூட்டைகளுடன் ஓடி, பேருந்தைப் பிடித்தோ பிடிக்காமலோ கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் குழந்தைகள் எத்தனைப் பேர்!!

புத்தக மூட்டை அக்கு வேறு ஆணிவேறாக, எகிற, ஷூ பிய்ந்து – யூனிபார்ம் உடுப்பின் தையல் வெடித்து – சாப்பாட்டுக் கூடை வீசி எறியப்பட்டு – அதனால் சாப்பாட்டு டப்பா திறந்து – சாப்பாடு கொட்டி – தண்ணீர் பாட்டில் நசுங்கி என இவ்வாறான, ஒன்றிரண்டு காட்சிகளையாவாது ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொரு ஏரியாவிலும் காண்கிறோம்,
இந்நிகழ்வுகளுக்குக் குழந்தைகளா காரணம்?

பள்ளிக் கல்வி என்ற பெயரால், குழந்தைகள் எத்தனைப் பாதுகாப்பற்றதொரு தினசரி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பாருங்கள்!

இவ்வகைக் காட்சியைக் காண நம் மனது நொந்து போகிறது என்றால் இவ்வாறு விழுந்து எழும் குழந்தைகளின் மனம் எத்தனைப் பாடுபடும்?

இவ்வாறு விழுந்து எழுவதைப் பிற மாணவர்கள் எள்ளி நகையாடுவது ஒரு புறம் என்றால், குழந்தைகளின் பெற்றோர்கள் கூட பல சமயங்களில் இவ்வாறன நிகழ்வை உரிய கோணத்தில் பார்ப்பதில்லை! இவ்வாறு பஸ் ஸ்டாப்பில் விழுந்தெழுந்து ஒரு குழந்தை வீட்டுக்குத் திரும்புகிறாள்(ன்) என்றால்: “அத்தனைப் பசங்களும் பஸ்ல தான் போய்ப் படிச்சிட்டு வருதுக! ஒனக்குத் தான் துப்பு இல்ல!” என்று விழுந்து எழுந்து வந்த குழந்தையை இன்னமும் மொத்தி வசைபாடும் பெற்றோர்கள் உண்டு! உண்டு!! உண்டு!!!

இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது தவறு தான். ஆனால் இது அவர்களது இயலாமையின் வெளிப்பாடு!
புதிதாகப் புத்தகப் பையை வாங்க வேண்டும் – புதிதாக புத்தகங்கள் – நோட்டுப் புத்தகங்கள் வாங்க வேண்டும் – சாப்பாட்டுக்கூடை வாங்க வேண்டும் – இத்யாதிகள் வாங்க வேண்டும் என்கிற அவர்களது வேதனையின் அலறல் இது!

போதாக்குறைக்கு – இவற்றை எல்லாம் ரெடி பண்ணுவதற்குள் ரவுசு பண்ணி குழந்தையைப் பாடாய்ப் படுத்தப் போகிற டீச்சர்களை எவ்வாறு சமாளிப்பது என்கிற எண்ணம் எழுப்பும் அதிர்ச்சியின் எதிரொளிப்பு இது!!

இந்த இயலாமை வெடித்து அடங்கிய பின்பு தான் உயிரோடு குழந்தை பத்திரமாகத் திரும்பி வந்திருக்கிறதே என்கிற நினைப்பு அவர்களுக்கு வருகிறது – குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் சென்று அடிபட்டுக்கொண்டு வந்திருக்கிற காயங்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்கிற பிரக்ஞை நிலைக்கு அவர்கள் தாமதமாகத் தான் வருகிறார்கள்.
இவ்வாறான தருணங்களில் அப்பெற்றோர்களின் உள்ளம் எப்படித் துடித்துச் சித்ரவதை அனுபவிக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இரு சக்கர வாகனங்களில், ஆட்டோக்களில் கொண்டு சென்று விடப்படும் குழந்தைகளும், இவ்வாறேதான் பாதுகாப்பு இல்லாமலேயே பயணிக்கின்றன – பள்ளிக் குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இந்தப் புத்தக மூட்டையும் சாப்பாட்டுக் கூடையும் மிகப்பெரிய சவால்.

இங்கு ஒரு கேள்வி-

ஒரு மூட்டை அளவிற்குப் புத்தக-நோட்டுப் புத்தகங்களைக் குழந்தைகள் தினந்தோறும் சுமந்து போய்வர வேண்டிய தேவை தான் என்ன?

இது வேண்டாத தேவையே!

சொல்லப்போனால், பள்ளிகள் தமது செயல்பாட்டைச் சரிவரத் திட்டமிடாது நடந்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைதான் இந்தப் புத்தகப் பிரச்சனை.

நம் நாட்டில், நமது மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை, போக்குவரத்து நெரிசலை நன்கு அறிந்திருந்தும் கூட – பள்ளிகள் பொறுப்பற்ற போக்கில் செயல்படுவதால் தான் இந்தப் புத்தகப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது!

சிந்தித்துப் பாருங்கள் – குழந்தைகள் புத்தகங்களை, தாம் கொண்டு வந்து ஆசிரியர்களிடம் பாடம் சொல்லிக்கொள்ளும் ஏற்பாடு அடிப்படையிலேயே நியாயம் அற்ற செயல் என்பது கல்வியில் ஒரு முறையான எதிர்பார்ப்பாய் இருக்க வேண்டுமல்லவா?

கல்வி நிறுவனங்கள் தாமே புத்தகங்களைப் பரிந்துரைக்கின்றன. எனவே அவர்கள் போதிக்கும் இடத்தில், மாணாக்கரின் கற்றலுக்காக அவர்களே புத்தகங்களை, வகுப்பில் வழங்க வேண்டும் என்பது அடிப்படையான பொறுப்புணர்வல்லவா?

ஒவ்வொரு கிளாசுக்கும் தேவையான பாடப் புத்தகங்கள் போதுமான எண்ணிக்கையில் ஒரு வகுப்பறையிலே இருக்க வேண்டும். ஒரு வகுப்பில் நாற்பது குழந்தைகள் என்றால் அந்த வகுப்பறையிலே நாற்பது எண்ணிக்கையில் ஒவ்வொரு சப்ஜெக்டுக்கான புத்தகங்களும் இருக்க வேண்டும். இதனை அடிப்படைத் தேவையாகக் கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டு – அத்தேவையை நிறைவு செய்ய வேண்டும்.

வீட்டில் படிக்கப் புத்தகம் வேண்டுமென்றால், ஒரு எக்ஸ்ட்ரா காப்பியைக் கடனாக வழங்க வேண்டும்.

வீட்டுப் படிப்புக்கென வழங்கப்பட்டப் புத்தகம், வீட்டிலேயே இருக்கும் – கல்வி ஆண்டு முழுவதும்!

அப்புத்தகம் பழுதுற்றது அல்லது தொலைந்து போனது என்றால் – அப்புத்தகத்தின் விலையின் முழுத்தொகையும், பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும்.

இந்த அடிப்படையிலே தான் அமெரிக்கப் பள்ளிகள் இயங்குகின்றன.

இவ்வாறான ஏற்பாட்டால், குழந்தைகள் புத்தகங்கள் சுமக்க வேண்டிய தேவை முற்றிலும் தவிர்க்கப் படுகிறது.
அடுத்து நோட்டுப் புத்தகங்களுக்கு வருவோம்:

நோட்டுப் புத்தகங்கள் பழக்கம் நம்மூரில் எவ்வாறு இருக்கிறது என்றால்:

ஒவ்வொரு பாடத்திற்கும் கிளாஸ் ஒர்க்கிற்கு ஒரு நோட்டுப் புத்தகம்,

ஹோம் ஒர்க்கிற்கு ஒரு நோட்டுப் புத்தகம்,

மொழிகள், கணிதம், ஆகியவற்றிற்குக் கூடுதல் நோட்டுப் புத்தகங்கள் (கட்டுரை, ஜியோமெட்ரி, ஆய்வகம் ஆகியனவற்றுக்கான), இவற்றைத் தாண்டி, பொதுவாக ஒரு ரப் (rough) நோட்டுப் புத்தகம், ஸ்கூல் டையரி, லாக் புக், அட்லஸ், டிஷ்னரி, கிராப் நோட்புக், ட்ராயிங் நோட்புக் ரெகார்ட் நோட்புக், ஆகியன கொசுறுகள்

இந்நிலையில் நோட்டுப் புத்தகங்கள் மடமடவெனத் தீர்ந்து போக, அடுத்தடுத்துப் புதுப் புது நோட்டுப் புத்தகங்களைக் குழந்தைகள் எடுத்துப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஒரு சப்ஜெக்டிற்குக் குறைந்த பட்சம் இரண்டு நோட்டுப் புத்தகங்கள் சேர்ந்து விடும்.

கூடுதலாக- பென்சில்-பேனா பாக்ஸ், கலர் பென்சில் (ஸ்கெட்ச் பேனா) செட், ஜியாமெட்ரி பாக்ஸ் ஆகியன வேறு!!

எண்ணிப்பாருங்கள் எத்தனை உருப்படிகள் அந்தப் பைக்குள்!

ஒரு நாள் ஒரு குழந்தை எதேச்சையாக ஒரு நோட்டுப் புத்தகத்தையோ அல்லது புத்த்கத்தையோ வீட்டில் மறந்து விட்டுப் பள்ளிக்குச் சென்று விட்டான்(ள்) எனில் அன்று அக்குழந்தை படாத பாடு பட்டு நொந்து வெந்து விட வேண்டியதுதான்.

இவ்வாறு புத்தகம், நோட்டுப்புத்தகம், ஐடி கார்ட் போன்ற எதையாவது மறந்து வரும் தருணங்களில் – கூசாது வகுப்பை விட்டு வெளியே நிற்க வைத்துக் குழந்தையை அவமானப் படுத்தும் நல்லாசிரியர்கள் நம்மிடையே நிறையவே உண்டு.

கொஞ்சம் – கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

கொஞ்சம் மாற்றி யோசித்தால் – குழந்தைகளிடமிருந்து நோட்டுப் புத்தகங்களை அறவே நாம் ஒதுக்க முடியும்.

நோட்டுப் புத்தகத்திற்குப் பதிலாக, நம் நாட்டு சூழலுக்கு உகந்ததான ஒரு நல்ல மாற்று ஏற்பாடு வேண்டும் –
லேப் டாப் – ஐபாட் எல்லாம் தேவையில்லை –

தாட்கள் கொண்டே இதனை நாம் சாதிக்க முடியும்.

யோசிப்பீர்களா?

(மேலும் பேசுவோம்)

 

படத்திற்கு நன்றி:http://www.usatoday.com/news/education/story/2011-11-14/schools-lockers-safety/51205848/1

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *