வார்த்தை தவறி விட்டாள் கண்ணம்மா

பைசால்

நிலாவில் நடந்தன விரலின் கோடுகள்
மண் நொந்தும்
விரலின் கோடுகள் நடந்தன
வட்டங்களாகவும், புள்ளிகளாகவும்
மண்ணின் இடுக்கு வீங்கிட

உயிரோடிருந்த உணர்விலும்
மற்றும் எல்லாவற்றிலும்
நான் எழுதிய கவிதை பிந்தியது

இன்னும்
பனிப்புழுதி உதட்டில் படிய
ஒரு முள்ளின் ஓவியத்தை ரசிப்பதுவாய்
உயிரோடு இந்த உணர்வு வருமே
அதுவரைக்கும் என்ன செய்வது

தேடி நடந்திட்ட காட்டுவழி
மரம் முறிந்த ஓசை எல்லாவற்றையும்
பயத்துடன் தூக்கிக் கொண்டுபோகும் உணர்வு வருமே
அதில்
உள்ளம் குழைந்து போகும் போது
அங்கு யாரோ அழைப்பர்

இந்த இரவினில்
அந்தப் பாடலுடன்
அவளை வல்லுறவு கொண்டு சுட்டுப்போட்டாலும்
அள்ளிப் பூசிய நிலா முகக்காரி மறந்துபோவாளா?

மரக் கொப்பிலிருந்து வரட்டும்
தாவணியும், பாவாடையும்
இனி
அவளின் நிர்வாணத்தை மூடியே ஆகவேண்டும்

அந்த மண்போல் இடைவெளி தந்து
காற்று நுழைந்திட வழியிருக்கவில்லை
மரங்களே முந்திக்கொண்டன
பின்
நத்தைக்குழி என்னிலேறிவிடும்
காக்கைகளும் கூவும் என்றாகிப்போனது வாழ்வு
 
படத்துக்கு நன்றி:http://hdw.eweb4.com/out/357945.html

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க