மலர் சபா

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை
தலைக்கோல் அமைதி

பெரும்புகழ் வாய்ந்த மன்னரவர்
போரிட்டுப் பகைவர் வென்று,
அப்பகையரசர் புறமுதுகிட்டுத் தோற்றோட,
அவர்தம் வெண்கொற்றக் குடைக்காம்பதனை
எடுத்தாங்கு வருவர்.

அக்காம்பின் கணுக்கள் முழுதும்
நவமணிகள் இழைத்தே அலங்கரிப்பர்.
கணுக்களின் இடைப்பட்ட பகுதிகளில்
‘சாம்பூநதம்’ எனும் உயர்வகைத் தங்கத் தகட்டை
வலம்புரியாகவும் இடம்புரியாகவும்
வளைத்துக் கட்டி ஒரு கோல் என்றாக்குவர்.

உலகையே தன்
வெண்கொற்றக்குடையின் கீழ் புரந்திருக்கும்
மன்னவன் அரண்மனையதனில்
அக்கோலினை வைத்து
இந்திரன் புதல்வன் சயந்தன் என
அக்கோலினை வரித்திட்டு
மந்திரங்கள் ஓதி வந்தனைகள் செய்து
பூசித்தே வழிபடுவர்.

இதுவே தானது
‘தலைக்கோல்’ என்பது.

புண்ணிய நதிகளில்
பொற்குடங்களில் முகர்ந்து வந்த
நன்னீர் கொண்டே தலைக்கோலதனை
நீராட்டிய பின்பு
மாலைகளும் அணிவிப்பர்
முற்கூறிய ஆடலாசிரியன் முதலானோர்.

பொருந்தியதொரு நன்னாளில்
பொன்னால் செய்த ‘பூண்’ மற்றும்
‘முகபடாம்’ எனும் பட்டம்
இவ்விரண்டும் கொண்டிருக்கும்
பட்டத்து யானையின் பெரிய கையதனில்தான்
தலைக்கோலினை வாழ்த்தியே வழங்கிடுவர்.

மும்முரசுகளும் ஆர்த்து ஒலிக்க
அவற்றுடன் சேர்ந்து
இன்னும் பல வாத்தியங்களும் ஆர்ப்பரிக்க
அரசன் அவனும்
தம் ஐம்பெருங்குழுவினர் சூழ வரப்
பட்டத்து யானையது
வீதியில் நின்ற தேரினை வலம்வந்து
தலைக்கோல் அதனைக்
கவிஞனிடம் அளித்துவிடும்.

( ஐம்பெருங்குழுவினர் – அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் )

அனைவரும் ஒருமித்தே ஊர்வலம் வந்தபின்
தலைக்கோலதனை எதிர்முகமாக வைத்திடுவான்
கவிஞனவன் ஆடல் அரங்கதனில்.

மாதவியின் நாட்டியம்
அரங்கேறவிருந்த அரங்கினிலும்
செப்பிய முறைப்படி
தலைக்கோல் வைக்கப்பட்டது.

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 114 – 120
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram7.html

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 121 – 128
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram8.html

படத்துக்கு நன்றி:http://www.atlastours.net/ethnic_jewelry/p05.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.