வழக்கு எண் 18/9 : திரைப்பட விமர்சனம்
மோகன் குமார்
பாலாஜி சக்திவேல், தமிழில் சமூகப் பொறுப்புள்ள ஒரு சில இயக்குனர்களில் ஒருவர். “காதல்” என்கிற படம் பள்ளி மாணவர்கள் காதலைச் சொல்கிறதே எனச் சிறு வருத்தம் இருந்த போதும், ஒரே பாடலில் அவர்கள் பணக்காரர்கள் ஆகி விடவில்லை. மாறாக அந்த வயதில் காதலித்து, வீட்டை விட்டு ஓடினால் என்ன விளைவுகள் வரும் என்று வலியுடன் சொன்னது. காதலிக்கும் பள்ளி மாணவிகளைச் சற்றேனும் யோசிக்க வைக்கும் அளவில் தான் இருந்தது அப்படம்.
வழக்கு எண் 18 /9கூட பள்ளிக் காதல் பற்றிப் பேசுகிறது. ஆனால் இம்முறை பள்ளி மாணவர்கள் செய்யும் அக்கிரமங்களைத் தோலுரிக்கிறது. இந்த விதத்தில் பள்ளி மாணவிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம் தான்!
அது என்ன வழக்கு எண் 18 /9? வழக்கு எண்ணைச் சொல்லும் போது முதலில் வருவது வழக்கின் சீரியல் எண். அடுத்து வருவது அந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட வருடம். இந்தப் படப் பெயரான வழக்கு எண் 18 /9 ஐ எடுத்துக் கொண்டால், வழக்கின் வரிசை எண்:18; வழக்கு பதிவு செய்யப்பட்ட வருடம் 2009 என்பது புரியும் ! (ஓ.. ஓ.. இது தான் வழக்கறிஞர் டச்சா?)
கதை
ஜோதி என்கிற இளம் பெண் முகத்தில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்வதில் துவங்குகிறது படம். இதற்காக வழக்குப் பதிவாகி, இன்ஸ்பெக்டர் குமரவேல் விசாரிக்கத் துவங்குகிறார். அந்தப் பெண்ணை ஒரு தலையாய்க் காதலித்த பிளாட்பார டீக்கடைப் பையன் வேலு மீது சந்தேகம் வருகிறது. போலீஸ் அவனை விசாரிக்க, அவனது கதை விரிகிறது.
அடுத்த பகுதியில் ஜோதி வேலை பார்த்த வீட்டில் உள்ள பணக்காரப் பள்ளி மாணவி ஆர்த்தி தன் கதையைப் பகிர்கிறாள். அவளோடு நட்பாகப் பழகி, ஏமாற்றி அவளை வீடியோவில் படமெடுக்கிறான் பணக்காரச் சிறுவன் தினேஷ். அவனது நிஜக்குணம் தெரிந்து ஆர்த்தி விலக, அவளைப் பல விதத்திலும் கொல்ல முயல்கிறான் தினேஷ். ஆர்த்தி மீது ஊற்றுவதாய் நினைத்துத் தவறுதலாய் வேலைக்காரப் பெண் மீது ஆசிட் ஊற்றி விடுகிறான் தினேஷ்.
போலிஸ் பணம் இருக்கும் பக்கம் சாய்ந்து ஏழைப்பையன் வேலுவைக் குற்றவாளியாக்க முயல்கிறது. முடிவு என்ன? என இங்கு சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும். வெண் திரையிலோ சில மாதங்களில் சின்னத் திரையிலோ பாருங்கள் !
படத்தின் முதல் பாதியில் பிளாட்பாரக் கடையில் வேலை பார்க்கும் வேலுவின் கதையே பெரிதும் சொல்லப்படுகிறது. இப்பகுதி ரொம்ப சுமார் தான்! ஐம்பது நிமிடத்தில் முதல் பாதி முடிந்து விடுகிறது. “புதுசாய் ஒண்ணும் இல்லையே.. வழக்கமான காதல் கதை போல தானே இருக்கு” என நினைத்தவாறு மீண்டும் வந்து அமரும் போது தான், பிற்பாதியில் நம்மைத் திடுக்கிடவும், நெகிழவும், கோபப்படவும், அழவும் வைக்கிறார் இயக்குனர்.
எத்தனையோ முறை “இளம் பெண் மீது ஆசிட் வீச்சு” என செய்தித்தாளில் வாசித்து விட்டுப் பின் மறக்கிறோம். ஆனால் அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதையும் அவர்கள் உலகை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதையும் முதல் முறை திரையில் இப்படம் மூலம் காண்கிறோம்.
அனைவரும் புதுமுகங்கள் என்பதால் பாத்திரங்களுடன் நம்மால் எளிதாக ஒன்ற முடிகிறது.
படம் முடியும் போது நம் மனதில் பெரிதும் நிறைபவர் ஆசிட் வீசப்பட்ட பெண்ணான ஜோதி (ஊர்மிளா) தான். வட நாட்டில் பிறந்த வசதியான இந்தப் பெண்ணை ஒரு நிஜ வேலைக்காரப் பெண் போல ஆக்கிய இயக்குனருக்கு ஷொட்டு! அதிகம் பேசாத, அமைதியான இந்தப் பெண் கண்களாலும், உணர்வுகளாலும் அசத்தி விடுகிறாள். படம் முடியும் அந்தக் கடைசித் தருணத்தில் விழியோரம் நீர் துளிர்க்காதவர் கல் நெஞ்சக்காரர்களாய் தான் இருக்க முடியும்!
வேலுவாக நடித்த ஸ்ரீ, “கனாக் காணும் காலங்கள்” சீரியலில் நடித்தவர். மிக ஒல்லியாக அந்தப் பாத்திரத்துக்கு நன்கு பொருந்துகிறார். முதல் பகுதியில் இவர் கதை ரொம்ப மெலோ டிராமா. குறிப்பாய் அவர் தந்தையாய் வருபவருக்குச் சுத்தமாய் நடிக்கத் தெரியலை. ஸ்ரீ கடைசி காட்சியில் ஜோதியை நோக்கி “உனக்கு நான் இருக்கேன் ஜோதி” எனக் கத்தும் போது தியேட்டரில் செமையாய்க் கை தட்டல் எழுகிறது.
தினேஷ் மற்றும் ஆர்த்தியாக வரும் இருவரும் கூட தங்கள் பங்கைச் செவ்வனே செய்துள்ளனர். ஆர்த்தி பாத்திரம் தவறுதலாய்ச் சித்தரிக்கப்படாமல் நன்கு படிக்கிற பெண் லேசாய் சலனப்படுகிறாள் என அழகாய் காட்டியுள்ளார் இயக்குனர். (ஆர்த்தியை விட அவர் தோழியாக வரும் ஸ்வேதா செம அழகு)
படத்தின் செம சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தான்! மிக இயல்பான நடிப்பில் நிஜ இன்ஸ்பெக்டரைக் கண் முன் கொண்டு வந்து விடுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கொண்டு ஜன்னல் வழியே அடிக்கடி வெளியே எச்சில் துப்புவதிலேயே இவர் என்ன மாதிரி ஆள் என உணர்த்தி விடுகிறார் இயக்குனர்.
வேலுவின் நண்பனாக வரும் வேலுசாமி என்கிற சிறுவன் அனைவர் மனதையும் கொள்ளை கொள்கிறான்.
கதை நடைபெறும் இடமான அந்தத் “தோஷி ப்ளாட்ஸ்” கூட ஒரு கதாபாத்திரம் மாதிரி விரிவது அருமை.
மாணவர்கள் மொபைல் போன் வைத்து எப்படிக் கெட்டுச் சீரழிகிறார்கள் என்பதைச் சற்று மிகைப்படுத்தலோடு தான் காட்டுகிறார்கள். நிச்சயம் பள்ளி/கல்லூரி மாணவிகளுக்கு, ஆண்கள் குறித்த எச்சரிக்கை மணி இந்தப் படம்! அந்த விதத்தில் சற்றுப் பெரிதுபடுத்திச் சொன்னால்தான், மனதில் உறைக்கும் என்பது உண்மையே!
படத்தில் இரண்டு பாடல்கள். ஆனால் இசை இன்றி ஒலிப்பதால் பலரும் ஒரே பாடல் மறுபடி மறுபடி வருகிறது என்றே நினைக்கிறார்கள். பின்னணி இசை பல இடங்களில் அடக்கி வாசித்தாலும், வேலு ஜோதியைப் பார்க்கும் இடத்திலெல்லாம் சஸ்பென்ஸ் இசை மாதிரி போட்டது உறுத்துகிறது.
எல்லாப் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்த இயக்குனர், பெற்றோர்களின் பாத்திரம் எதற்கும் ஒரு வடிவமின்றி, சும்மா வந்து போகிறவர்களாய் காட்டியிருக்கிறார். ஜோதியின் அம்மா பாத்திரத்துக்கு மட்டும் தான் Identity என ஒன்று சற்றேனும் உள்ளது!
நம் நாட்டில் பணம் உள்ளவர்கள் எந்தத் தப்பும் செய்யலாம்! போலீசும் நீதிமன்றமும் அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சுதந்திரமாய் விட்டு விடும் என்பது தான் சட்டத்தின் நிலை. இதைத் துல்லியமாகக் காட்ட முற்பட்ட இயக்குனருக்கு சபாஷ்! படத்தில் கெட்டவர்களுக்குத் தண்டனை கிடைத்து விடுகிறது. நிஜ உலகில் இப்படி நடப்பது இல்லை.
இப்படத்தை எத்தனையோ விதமாய் முடிக்க சாத்திய கூறுகள் உள்ளன. ஆனால் பார்வையாளர்கள் மகிழவும், நெகிழவும் இதை விடச் சிறந்த முடிவு இருக்க முடியாது!
படம் முடிந்து வெளியே வரும் போது, பொய் வழக்கில் உள்ளே இருக்கும் எத்தனையோ அப்பாவிகள் பற்றி யோசிக்கிறது மனது. இத்தகைய படங்கள் ஓட வேண்டும். தமிழ் சினிமாவிற்கு அது தான் நல்லது! ஓட வைப்பார்களா நம் மக்கள்?
படத்திற்கு நன்றி:http://desitwits.com/Tamil-Movies-twitter-photos-twitter-pics-kollywood-tamilfilms-1-1418137.html
இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் இப்படத்தின் மூலம் நீதியை நிலைநாட்டியுள்ளார் என்றே கூறலாம், இருப்பினும் படத்தின் காட்சிகளில் அவ்வப்போது ஒளிக்காட்சி அளவை – அதவாது திரையின் அளவை இருபக்கங்களிலும் ஒடுக்கி காட்டியிருக்கும் காரணம் தான் தெரியவில்லை. மேலும் பணக்கார வர்க்கங்களின் அத்துமீறிய அநீதிகளை அரசாங்கம் இத்திரைப்படம் மூலம் பாடம் கற்று தன்னை திருத்தியமைத்துக்கொண்டால் அதுவே இப்படத்திற்கு கிடைக்கும் ஆஸ்கார் என்பதில் ஐயமில்லை!!!