காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: மாணவர்கள் சோம்பல் மற்றும் கவனக்குறையைத் தவிர்த்துக் கொண்டால், எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்கள் சற்றுப் பொறுமையோடு எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வதன் மூலம், குடும்ப அமைதியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். மேலதிகாரிகளின் கருணைப் பார்வை உங்கள் மேல் படும் வரை, பணியில் இருப்பவர்கள், வேலை செய்ய வேண்டி வரும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள், இடமாற்றத்துக்கு அவசரப்பட வேண்டாம். இந்த வாரம், வியாபாரிகள் பங்குச் சந்தைகளில், கவனமாகச் செயல்படுவது அவசியம். சுய தொழில் செய்பவர்களுக்கு, அரசாங்க ரீதியாக இருந்த கெடுபிடி, சங்கடம் எல்லாம் குறையும். கலைஞர்கள், சூழலுக்கு ஏற்பப் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், அதிக லாபத்தோடு, நல்ல பெயரும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தன் வரம்புக்கு மீறிய விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உங்களை வீண்பழிச்சொல்லில் இருந்து காப்பாற்றும்.

ரிஷபம்: வேலைக்குப் போகும் பெண்கள், அலுவலகங்களில் குடும்ப விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கொடுக்கல் வாங்கல் வகையில் விழிப்புடன் இருக்கவும். கலைஞர்கள் கவனமாக இருந்தால், வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் ஏற்படும் வீண் அலைச்சலும் செலவுகளும் குறையும். தொழிலதிபர்களுக்கு எதிர்பார்த்த விற்பனை இருந்த போதிலும், அரசு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் யோசித்துச் செயல் படவும். பொது வாழ்வில் இருப்பவர்கள், பெயருக்காகவும், பெருமைக்காகவும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டி வரும். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் சில மனச்சங்கடங்கள் தலை காட்டினாலும், கலைஞர்கள் அதைப் பெரிது படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளை அணுகும் போது கவனமாக இருப்பது அவசியம். கல்வி விவகாரங்களில், மாணவர்களுக்குப் பெற்றோரின் அனுகூலம் கிட்டும்.

மிதுனம்: கூட்டுத் தொழில்களில் உள்ளவர்கள் தொழிலாளர்களிடையே ஒற்றுமையான சூழ்நிலையை அபிவிருத்தி செய்து கொண்டால், நிறைவான லாபமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த வாரம், பெண்கள் மேற்கொள்ளும் சகல முயற்சிகளிலும் நிதானம் தேவை. அவர்கள் போடும் உழைப்பிற்கேற்றவாறு, கலைஞர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை வாய்ப்பதோடு திறமைகள் பிரகாசிக்கும் சூழலும் உருவாகும். பொதுச் சேவையில் தொடர்புள்ளவர்களுக்குத் தாமதம் அடைந்து வந்த காரியங்களில் கிடைக்கும் வெற்றி நல்ல பெயரையும், உயர்ந்த பதவியில் அமரும் வாய்ப்பையும் அழைத்து வரும். மாணவர்கள் மற்றவர்கள் பாராட்டக் கூடிய வகையில் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு வாரத் தொடக்கத்தில், சரக்குப் போக்குவரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கலைஞர்கள் ஒற்றுமை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம், தொழிலில் உள்ள சங்கடங்களைத் தவிர்த்து விடலாம்.

கடகம்: வியாபாரிகள் பேச்சு இனிமை, சாதூரியம் இவற்றைத் தக்க விதத்தில், பயன்படுத்தினால் புதிய ஒப்பந்தங்கள் சுலபமாகக் கிடைக்கும். இந்த வாரம் கலைஞர்களுக்குக் கடன்களால் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், வீண் செலவுகளைச் சுருக்கிக் கொள்ளவும். கணவன்-மனைவிக்குள் நிலவும் ஒற்றுமை, குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை உண்டாக்கும். சுய தொழில் செய்பவர்களுக்குத் தொழில்களில் போட்டி, பொறாமைகள் காணப்படுவதால் எதிலும் கவனமாக இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். இந்த வாரம் மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள் சில சிரமங்களுக்குப் பிறகே நிறைவேறும், என்றாலும் அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே வெற்றி கிடைக்க கிரகங்கள் கை கொடுப்பார்கள். வேலையில் இருப்பவர்கள், வீண் குற்றம் கண்டு பிடிப்பவர்களைச் சட்டை செய்யாமல் எப்போதும் போலத் தங்கள் கடமையைச் செய்து வர மேலதிகாரியின் பாராட்டு தானே வந்து சேரும்.

சிம்மம் பொது வாழ்வில் இருப்பவர்கள் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வேண்டாம். மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமலிருந்தால், குடும்பத்தில் குழப்பம் இருக்காது என்பதை உணர்ந்து பெண்கள் செயல்படவும். வியாபாரிகள் சின்னச் சின்ன விஷயங்களிலும் நேரடியான கவனம் செலுத்தி வந்தால் வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். மாணவர்கள் அளவுக்கு அதிகமாக உல்லாசம், கேளிக்கை ஆகியவற்றில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டால், பாதிப் பிரச்னைகள் தானாகவே குறைந்து விடும். வெளி நாடுகளில் பணிக்குச் செல்ல விரும்புபவர்கள் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை அணுகுவது மூலம் வேண்டாத ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். கலைஞர்கள் பொது விழாக்களில் படோடாபத்தைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். கோடைக்காலம் என்பதால் முதியவர்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவு வகைகளைத் தேர்வு செய்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி: பணிபுரியும் பெண்களுக்குப் பணியிடங்களில் இருந்த குளறுபடி விலகி மனதிற்கு இதமான சூழல் உண்டாகும். வீட்டுச்சாதனப் பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள், புதிய உத்திகளைப் பயன்படுத்தினால், நல்ல லாபம் அடையலாம். இந்த வாரம், சிக்கனமும், ஆடம்பரத்தைத் தவிர்த்தலுமே பொது வாழ்வில் இருப்பவர்களின் பணப் பிரச்னையைச் சீராக்க உதவும். மாணவர்கள் தேவையற்ற கேளிக்கை, வினோத விளையாட்டுகளில், அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், மதிப்பெண்களை அள்ளுவது சுலபமாக இருக்கும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை நிலவினாலும், வியாபாரிகள் சரக்குக் கணக்கெடுப்பு, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றில், கவனமாக இருந்தால் கிடைக்கின்ற லாபம் குறையாமல் இருக்கும். சுயதொழில் செய்பவர்கள், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.

துலாம்: எதிரிகளால் சிரமங்கள் உண்டானாலும், பொது வாழ்வில் இருப்பவர்கள், தக்க பதிலடி கொடுத்தால், நிலைமை கட்டுக்குள் இருக்கும். வியாபாரிகளுக்கு அரசு வழிக் கோரிக்கைகளைப் பெற அதிகாரிகளின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்கள் தர்ம காரியங்களுக்கு மகிழ்வோடு பணம் செலவழிப்பார்கள். மாணவர்கள் கவனக்குறைவாகச் செயல்படுவதைத் தவிர்த்தால், எந்தச் சிக்கலும் இல்லாமல் பாடங்களைப் படிக்க முடியும். சுய தொழில் செய்பவர்கள், தொழில் வளர்ச்சிப் பணிக்காகத் தகுதிக்கு மீறிய அளவில், கடன் பெறுதலைத் தவிர்ப்பது அவசியம். கலைஞர்கள் கடினமாக உழைத்தால்தான் தங்கள் பணத் தேவைகளை அதிகச் சிரமம் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள முடியும். பொது வாழ்வில் இருப்பவர்கள் இடம், பொருள் அறிந்து பேசுவது நல்லது. இந்த வாரம் வேலையில் இருப்பவர்களுக்கு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கலாம்.

விருச்சிகம்: இந்த வாரம் பணவரவு குறைவாக இருப்பதால், வியாபாரிகள் வேண்டிய சரக்குகளை மட்டும் தருவித்துக் கொள்வதுதான் நல்லது. மாணவர்கள் பொது இடங்களில், தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்த்து, சத்தான உணவு வகைகளை உண்டு வர, ஆரோக்கியம் சீராக இருக்கும். பொதுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், சிரமம் எதுவும் அணுகாமல் தவிர்க்கலாம். கசப்பான அனுபவங்கள் தலை காட்டாமல் இருக்க மாணவர்கள் நட்புறவில் நிதானமான அணுகுமுறையை மேற்கொள்ளுவது அவசியம். சுய தொழில் புரிபவர்கள் முன்யோசனையுடன் செயல் பட்டால் தான் திட்டங்கள் வெற்றி பெறும் என்பதை நினவில் வைத்துக் கொண்டு வேலை செய்வது நல்லது. கலைஞர்கள் வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய இது ஏற்ற வாரமாக இருக்கும்.

தனுசு: வியாபாரிகள் பொருட்களைக் கடனாக கொடுப்பதைத் தவிர்த்து ரொக்கத்திற்கு விற்பது மூலமாக வேண்டிய லாபத்தைப் பெறலாம். மாணவர்கள் படிப்புச் செலவைத்தவிர மற்ற ஆடம்பர விஷயங்களில் மனதைத் திசை திருப்பாமல் இருப்பதுதான் நல்ல பலனைத் தரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தாங்கள் பேசுவதே சரி என நினைத்துப் பிறர் மனதை புண்படுத்தாமல் இருந்தால் நட்பு எப்போதும் இனிமையாக இருக்கும். பெண்கள் வாக்குவாதம் வராத அளவிற்குப் பேச்சில் நிதானமாக இருந்தால், குடும்பத்தில் அமைதி நிலவும். பிடிவாதமாகச் செயல்படும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் பக்குவமாக நடந்து கொள்ளவும். இந்த வாரம், பேச்சால் பிரச்னை வரும் வாய்ப்பிருப்பதால், கலைஞர்கள் இயன்ற வரைக்கும் அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. சுய தொழில் புரிபவர்கள் கடமையில் கவனமாக இருந்தால், வரவும் திருப்திகரமாக இருக்கும்.

மகரம்: வியாபாரிகளுக்குப் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்த வாரம், சிறிது குழப்பமான மனநிலை ஏற்படும். வழக்கு விவகாரங்கள் தொல்லை கொடுக்காமல் இருக்க, வியாபாரிகள் தகுந்த அணுகு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண்கள் பணியிடங்களில், அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, பிரச்னைகளைப் பெருமளவில் குறைக்க உதவும். பணியாளர்களையும், வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த, சுய தொழில் புரிபவர்களுக்குக் கூடுதல் செலவு உண்டாகும். வயதானவர்கள் உடல்நலப் பாதுகாப்பில் சீரான அக்கறை செலுத்துதல் அவசியம். நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகக் கிடைக்கும். மாணவர்கள் ஊட்டம் தரும் உணவு, தகுந்த ஓய்வு இரண்டிலும் கவனமாக இருந்தால், சோர்வில்லாமல் படிக்க முடியும். உயர் பதவியில் இருப்பவர்கள், தங்கள் கீழ் வேலை செய்பவர்களிடம் தேவையற்ற விஷயங்களைப்பற்றிய விவாதங்களைச் செய்யாமலிருப்பதே நல்லது.

கும்பம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், அவசியமான பணிகளில் அதிக அக்கறை காட்டுவதுதான் புத்திசாலித்தனம். இல்லையெனில், வேண்டாத சிரமங்களை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் தரும் ஒத்துழைப்பால், வேலைகள் விரைந்து முடியும். மாணவர்கள் பட்ட பாடுக்கு நல்ல பலன் கிடைக்கும் நிலை இருப்பதால், வேண்டாத நண்பர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கவும். சக கலைஞர்களுடன் கலைஞர்கள் இணக்கமாகப் பழகினால், வேலைகளை நிம்மதியாகச் செய்ய இயலும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறதிக்கும், அஜாக்கிரதைக்கும் இடம் கொடுக்காமலிருந்தால், வேலையில் எந்தத் தொய்வும் இராது. பணியில் உள்ளவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், அவ்வப்போது தலை காட்டும் சிறிய பிரச்னைகள் நீங்குவதோடு, நல்ல பெயரும் தேடி வரும். சுற்றுலா செல்ல வேண்டும், புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்ற பெண்களின் எண்ணம் ஈடேற கிரகங்கள் துணை இருப்பார்கள்.

மீனம்: தொல்லை தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், புதுத் தெம்புடன் வலம் வருவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க்காலோசனைனயைப் பின்பற்ற, அதிக நன்மை பெறலாம். பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்குப் பங்கம் வராமலிருக்கும். புதிய துறையில் கால் பதிப்பவர்கள், சில கெடுபிடிகளைத் தாண்டி, தன் திறமைகளை நிரூபிக்க வேண்டி இருக்கும். பொதுச் சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறலாம். மாணவர்கள், கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்குச் சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.