சுக்குமி, ளகுதி, ப்பிலி… -2
இன்னம்பூரான்
‘கிச்சா! மந்தமாயிருக்கு என்றாயே. கஷாயம் போட்டுத்தருகிறேன். கொஞ்சம் கோமுட்டிக்கடையில் சுக்கு, மிளகு, திப்பிலி வாங்கிண்டு வா.’ போறான்.
‘கொஞ்சம் தரேளா? சுக்குமி, ளகுதி, ப்பிலி’ (நம்ம உலக்கைக் கொழுந்து) கோமுட்டிக்குக் காது கொஞ்சம் மந்தம். ‘சூரத்தாவரை இலவசமா தாரேன். ஆமணக்கெண்ணாயா கேட்டே?’ இவன் காதிலெ இலவசம் தான் விழுந்தது. கை நிறைய… ஹூம். பாட்டிக்குக் கண் பார்வை மந்தம். கஷாயம் காய்ச்சி வாயில் ஊத்திவிட்டாள். கிச்சாவுக்கு பிச்சுண்டுடுத்து -பேதியும், பீதியும்.
அந்த மாதிரி இருக்கு இன்றைய சூடான செய்தி. ஒரு சுற்று, பேய் மாதிரி அழுகுணியாட்டம் ஆடின பிறகு, கவர்மெண்ட்டார், உச்சநீதி மன்றத்தில், கூச்சமில்லாமல் கச்சம் கட்டிக்கொண்டு, சொச்சமிச்சம் லஜ்ஜையையும் உதறிவிட்டு, ஜனாதிபதி மாமி நாம உச்சாடணம் செய்து கொண்டு சமர்ப்பிவித்த அசட்டுக்கடுதாசை மே 10, 2012 வாபஸ் செய்வதாக, இன்று காலை தகவல். இதற்கு முன் நடந்த ஆபாசங்களைப் பற்றி ஏற்கனவே எழுதியாச்சு. ஏடு திருப்பினால், காணக்கிடைக்கும். விநாசகாலே விபரீத புத்தி என்று தெரியாமலா சொன்னான்.
‘சுக்கு, மிளகு, திப்பிலி’ ‘சுக்குமி, ளகுதி, ப்பிலி…’ யாக உருமாறி, சூரத்தாவரையாகவும், ஆமணக்கெண்ணயாகவும் வயிற்றில் இறங்கின மாதிரி, இன்னும் நமக்கு என்ன பேதியும், பீதியும் பாக்கி இருக்கிறதோ? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.
அரோஹரா!