இரெட்டியப்பட்டி சுவாமிகள் – 5
சு.கோதண்டராமன்
அறம் காக்க வந்த அவதாரம்
எப்பொழுதெல்லாம் அறத்திற்கு வீழ்ச்சியும் மறத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அப்பொழுதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கிறேன் என்று கீதையில் கண்ணன் கூறியபடி மக்கள் கூட்டத்தில் அவ்வப்போது அறம் நாட்ட ராமனாகவும் கிருஷ்ணனாகவும் புத்தராகவும் ஏசுவாகவும் முகமதுவாகவும் வள்ளலாராகவும் வந்த இறைவனே இரெட்டியப்பட்டி சுவாமிகளாகவும் அவதரித்தான் என்று கொள்ளலாம். அவர்கள் பேசின மொழியும் கூறிய வார்த்தைகளும் மாறுபட்டாலும் இவர்கள் அனைவரின் கருத்தும் ஒன்றே.
உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும் என்பதே அது.
சுவாமிகளின் நூறாண்டு பழமையான உபதேசங்கள் இன்றைக்குப் பயன்படுமா? நிச்சயமாக. சொல்லப் போனால் இன்றைக்குத் தான் அந்த உபதேசங்களுக்கு அவசியம் அதிகமாகி உள்ளது. மதங்களிடையே பூசலும், சாதிகளிடையே சண்டையும், செல்வம் அதிகாரம் புகழுக்காகப் பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சாத நிலைமையும் இயற்கைக்குப் புறம்பான வழிகளிலே நடந்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளும் போக்கும் சென்ற நூற்றாண்டை விடத் தற்போது அதிகம் காணப்படுகிறது.
விஞ்ஞான யுகத்தின் பக்க விளைவு நம்பிக்கைக் குறைவு. அறிவினால் எல்லாம் சாதித்து விட முடியும் என்ற ஆணவமும் நம் அறிவுக்கு எட்டாதது எதுவும் இல்லை என்ற அறியாமையும் தற்போது நம்மை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கின்றன. விளைவு நிம்மதி இன்மை. மனோ வாக் காயங்களுக்கு எட்டா இறைவனின் சீலத்தை யோகிகளே மெல்லத் தெளிந்தறிவர். நம் போன்று மெய்ஞானக் குன்றின் அடிவாரத்தில் இருப்போர் நம்புவதே வழி.
நம்புவதே வழி என்ற மறைதனை நாம் இன்று நம்பிவிட்டோம் என்றார் பாரதி. ஈமான் என்ற பெயரில் இஸ்லாம் வலியுறுத்துவதும் விசுவாசம் கொள்ளுங்கள் என்று கிருத்துவம் திரும்பத் திரும்ப முழங்குவதும் இதுவே. எல்லாச் சமயங்களுக்கும பொதுவான இறைவன் மீது எல்லாச் சமயங்களும் வலியுறுத்தும் நம்பிக்கை மார்க்கத்தில் செல்வது தான் நமது இன்னல்களுக்குத் தீர்வு என்ற சுவாமிகளின் கூற்று இன்றைக்கும் பொருத்தமாகவே உள்ளது.
தற்காலத்தின் மற்றொரு போக்கு இயற்கை நியதிகளை அலட்சியம் செய்து உணவு, உறக்கம், இல்லற வாழ்வு இவற்றில் கட்டுப்பாடு இன்றி மனம் போன போக்கில் வாழ்தலும், மேலை நாட்டாரைப் பார்த்துக் கண்மூடித்தனமாகப் பெருநுகர்வு கொள்ளலும். தன் உண்மையான தேவை எது என்பதை உணராமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்ற முறையில் மற்றவரைப் பார்த்துத் தானும் பல பொருட்களை வாங்க வேண்டும் என்னும் எண்ணம் அதிகமாகி வருகிறது. தேவைக்கு மேல் உணவு உண்ணல், தேவைக்கு மேல் உடை வகைகளை வாங்கிக் குவித்தல், தேவையற்ற பயணங்கள், பயண சாதனங்கள், புலன் இன்பத்திற்கான பொருட்கள் என்று இப்படிக் குவித்துக் கொள்வதால் எவ்வளவு பொருள் ஈட்டினாலும் போதவில்லை. எப்போதும் குறையுடனேயே வாழ்கிறோம்.
மற்றவரைப் பார்த்துப் பொறாமை, சமூக வளங்களைச் சுரண்டித் தனதாக்கிக் கொள்ளப் போட்டி, சமூகத்தைச் சாதி, மதம், மொழி இவற்றின் பெயரால் பிரித்துத் தான் ஆதாயம் அடையும் போக்கு – அம்மம்மா, எத்துணை குணக்கேடுகள்! உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என்ற நம் சான்றோர் சிநதனையும் அதனால் விளைந்த மன நிறைவும் எங்கே போயிற்று?
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் என்ற வள்ளுவர் வாசகம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அறம் நாட்ட வேண்டிய ஆட்சியாளரே கொஞ்சமும் கூச்சம் இன்றி ஊழல் வழிகளில் பொருள் சேர்க்கின்றனர்.
வேலியே பயிரை மேயும்போது உய்வு தான் என்ன?
சுவாமிகள் வருங்காலத்தை உணர்ந்து தேவைகளைக் குறைத்துக் கொள்ளுமாறு உபதேசித்தார்.
பொன்னினாலே செய்த பூஷணமென்றுமே
போட விரும்பினால் கேடு என்றும்
தேடும் பொருளெல்லாம் கூட வராது
செகத்தில் வாழ்வை நம்பொணாதது என்றும் பாடுகிறார்.
அவர் தானும் எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டினார். அவருக்காக அடியவர்கள் ஆடம்பரச் செலவு செய்தால் அவர் கோபிக்கவும் தயங்கியதில்லை.
இப்படி சுவாமிகள் உபதேசித்த இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வும் இறைவன் பால் பற்றுறுதியும் எக்காலத்துக்கும் பொருத்தமான அற வழிகளாகும்.
படத்திற்கு நன்றி:http://en.wikipedia.org/wiki/File:Sri_Reddiapatti_Swamigal.jpg