பராமரிப்பு
தி.ந.இளங்கோவன்
நொச்சு நொச்சென்று எதையாவது பேசிக்கிட்டிருக்கும் கிழவியைப் போல நச நசவெனத் தொடர்ந்து பெய்து கொண்டு இருக்குது மழை. அடித்தும் பேயவில்லை. அசரவும் விடவில்லை இந்த நாலு நாளாய்.
மணிமேகலை ஆச்சிக்கு மழை மேல் அவ்வளவு கோவம். கொல்லையில் கட்டியிருக்கும் ரெண்டு எருமையும் பசியில் கத்துற சத்தம் வேறு, அவளை எரிச்சல் கொள்ள வைத்தது. முடியாத உடம்புடன், கொல்லைப் பக்கம் எழுந்து போனாள்.
“ஈர வைக்கலை திங்க முடியலையா? பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் கேக்குதோ? நான் எங்க போறது இந்த மழையுல உங்களுக்கு வக்கனையா தீனி வாங்க?”
மாட்டுக் கொட்டாய் பூராவும் ஒரே சாணியும், மூத்திரமுமாய்க் குளம்படி பட்டுச் சகதியாய்க் கிடந்தது.
கிழவியின் குரலைக் கேட்டதும் புல்லோ புண்ணாக்கோ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திரும்பிப் பார்த்தன எருமைகள்.
தலையில் கீத்துக்குடலையை மாட்டிக்கொண்டு, கையில் பில்லறுக்கும் அருவாளை எடுத்துக்கொண்டு, தோப்பை நோக்கி நடந்து போனாள் ஆச்சி.
மழை லேசாகத் தூறிய வண்ணம் இருக்க, “கொஞ்சம் புல்லு கொண்டு வந்து போட்டுப்பார்ப்போம், வாயில்லா சீவனுக, இப்படிப் பட்டினியாக் கடக்குதுகளே” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு நடந்தாள்.
“ஆச்சி, மணி எத்தனை இருக்கும்?” பக்கத்துக் கொல்லையில் இருந்து அகிலாவின் குரல்.
“நா என்ன கையில கடியாரமா கட்டி இருக்கேன், என்னப் போயி மணி கேக்குற” என்றவளின் கண்ணில் அப்போதுதான் பூத்துக் கொண்டிருக்கும் அந்திமல்லிப் பூக்கள் கண்ணில் பட்டன.
“மணி நாலு இருக்கும்டி, இப்பதான் அந்திமல்லி பூக்குது”
“மழ பேஞ்சா கால நேரமே தெரியல ஆச்சி”
குடலையை ஓரமாய் வைத்து விட்டு, வேலி ஓரம் படர்ந்திருந்த புற்களை அறுக்கும் ஆச்சிக்கு, அப்போதுதான் பள்ளிக் கூடம் போயிருந்த பேத்தியின் நினைவு வந்த்து.
“இந்தக் குட்டிய இன்னும் காணோமே, இவ்வளவு நேரம் ஆச்சு, இன்னும் என்ன செய்யுறா, பள்ளிக்கொடத்துல!”
மழைத் தூரலைவிட, வாழை மரத்தில் இருந்து அவ்வப்போது குட்டி மழையாகக் கொட்டிய தண்ணீர் கிழவியை நனைத்தது.
“ஆயி, நா வந்துட்டேன்” எட்டு வயது பேத்தி ஸ்கூல் யூனிபார்முடன் ஓடி வந்து பாட்டியின் மேல் சாய்ந்தது.
“இந்த மழையில எதுக்குக் கொல்லைக்கு வந்த?” பேத்தியை இடுப்பிலும், புல்லைத் தலையிலும் சுமந்தவாறு திரும்பி வந்தாள் ஆச்சி.
“ போ, போயி, ட்ரெஸ்ஸ மாத்திக்கிட்டுச் சாப்பிடு, நா இந்த மாடுகளுக்குப் புல்லு போட்டுட்டு வரேன்”
மாடுகளுக்குப் புல்லைப் போட்டு விட்டு, வெளக்கு மாத்தால, கொட்டாயைக் கூட்டிச் சுத்தம் செய்தவளின் காதுகளில், தூரத்தில் பால்காரனின் ஹாரன் சத்தம் கேட்டது.
“ஏ.. சின்ன குட்டி, பால் காரன் வர்றான், மாடு கறக்கனும், பால் வாளியைக் கொண்டு வர்றியா”
ஆச்சியின் குரலைக் கேட்டுப் பால் வாளியைக் கொண்டு வந்து படியில் வைத்து விட்டுப் போனாள், மருமகள் சுசீலா.
மாமியாருக்கும், மருமகளுக்கும், பேத்திதான் பேச்சிடைத் தூது, கடந்த சில வருடங்களாக.
சுசீலா மாமியாரிடம் சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்லுவாள். ஆனால் அத்தையென்றோ, மாமியென்றோ விளித்துச் சொல்ல மாட்டாள்.
ஆச்சி எப்போதும், பேத்தி பெயரை இடையில் வைத்து, தான் சொல்ல வந்ததைச் சொல்லுவாள்.
அது ஒரு தனிக் கதை.
ஆச்சிக்குப் பேர் சொல்ல ஒரே ஒரு பிள்ளை. ரங்கனாதன். பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, மாயூரத்தில் ஜவுளிக் கடை (கடல்) ஒன்றில் வேலை பார்க்கிறான்.
அவனுக்குப் பெண்ணெடுத்தது, மாயூரம் கொரநாட்டில் சாமினாதப்பிள்ளை வீட்டில்.
பொண்ணு நல்ல அழகு. ரங்கனாதனுக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.
ஆனா, சுசீலா டவுன்லயே வளந்த பொண்ணுங்கிறதால, கிராமத்து வாழ்க்கையில அவ்வளவு சுலபமா ஒட்ட முடியல.
இங்க புங்கனூர்ல, கொல்லையில அஞ்சாறு மாடுக நிக்கும் எப்பவுமே.
ஆச்சியின் கணவர் பசுபதி மாட்டுத் தரகர். அவ்வப்போது மாடுகளைத் தானே வாங்கி பத்து பதினைந்து நாள் கழித்துக் கை மாற்றி லாபம் பார்ப்பதும் உண்டு. அது போன்ற நாட்களில், கொட்டகையில் மாடுகளின் எண்ணிக்கை கூடி விடும்.
அதுகளுக்குச் சாணி அள்ளி, பருத்திக்கொட்டை அரைச்சு, ராட்டி தட்டி, சம்சாயி பண்ணி ஆகணும். இதெல்லாம், சுசீலாவால நெனச்சுக் கூட பாக்க முடியல.
கல்யாணம் முடிஞ்சு, ஒரு மாசம் வரைக்கும் ஆச்சிக்கு இது பெருசா தெரியல. ஆனா, சுசீலா கொல்லைப் பக்கமே எட்டிப் பாக்கலியேன்னு ஒரு நாள் மருமகளை விசாரிச்சா.
“எனக்கு அந்த வேலையெல்லாம் வராது அத்தே” னு சொன்ன உடனே பொசுக்குனு கோவம் வந்துடுச்சு ஆச்சிக்கு.
“நா இந்த மனுசனுக்கு வாக்கப் பட்டு வந்த போது பொத்தல் விழுந்த கூரை வீட்டுல தான் நொழஞ்சேன். இன்னக்குக் காரை வீடு எப்படி வந்துது? இந்த மாடு கன்னுகளப் பாத்ததாலதான வந்தது.”
மௌனத்தையே பதிலாகத் தருவாள் சுசீலா.
இந்த விஷயத்தில், மகன் எடுத்த நிலைப்பாடு ஆச்சிக்குப் பிடிக்கவில்லை.
“அவளுக்கு இந்த வேலையெல்லாம் வரலைன்னா என்னம்மா செய்றது?” ஒரே வரியில் ஒதுங்கிக் கொண்டான் ரங்கனாதன்.
நாள் ஆக ஆக, ஆச்சிக்கு மருமகள் மேல் ஆறாத கோபம். முதுமையின் காரணமாக வேலை செய்ய இயலாத போதெல்லாம் மருமகளின் மேல் கோபம் அதிகரிக்கும்.
“ஒருத்தன் சம்பாத்தியத்துல குடும்பம் தழைக்க முடியுமா? உக்காந்து சாப்புட இது என்ன ஜில்லா கலெக்டர் வீடா?”
“ஒன்னால முடியலன்னா மாடுகளை வித்துடும்மா” என்ற மகனின் பதிலுக்கும் ஆச்சி செவி மடுக்கவில்லை.
கால மாற்றத்தில், வீட்டில் டிவி நுழைந்தது. கேபிள் டிவி, டிவிடி பிளேயர் எல்லாம் ஒவ்வொன்றாக நுழைந்து மாதச் செலவை அதிகரித்தன.
பால், மோர், வெண்ணை, எரு விற்ற காசு என ஆச்சியின் உழைப்புதான் இந்தப் புதிய செலவினங்களைச் சமாளிக்க வசதியாய் இருந்தது.
இருந்த போதும், மருமகளும் சேர்ந்து உழைத்தால், இன்னும் வருமானம் வருமே என்ற ஆச்சியின் ஆதங்கம் நியாயமானதுதானே?
உழைத்துப் பழகிய உடம்புக்கு அனுபவிக்க ஆசையில்லை. ஆச்சி டிவி பார்க்க மாட்டாள். சினிமா பார்த்து ஒரு மாமாங்கத்துக்கு மேல் இருக்கும்.
சுசீலாவும் நல்ல உழைப்பவள்தான். என்ன இந்த மாடுகளைக் கட்டி மேய்க்க அவளுக்குப் பழக்கமில்லை, முயற்சிக்கவும் மனமில்லை.
கொல்லைப் பக்கம் வர மாட்டாளே தவிர, வீட்டுக்குள் அவ்வளவு வேலையும் நறுவிசாகச் செய்வாள். காலை, மாலையில் வீட்டைப் பெருக்கிக் கண்ணாடி போல் வைத்திருப்பாள். அக்கம் பக்கம் யார் வீட்டுக்கும் போய் வம்பளக்க மாட்டாள். கிராமத்தில் அவ்வப்போது பால் வாங்கவும், மோர் வாங்கவும் வருபவர்களுக்கு, எடுத்துக் கொடுத்து, மீதிச் சில்லரை கொடுப்பது எல்லாமே சுசீலா பார்த்துக் கொள்வாள். ஆச்சிக்கு வேலையெல்லாம் கொல்லையோடு சரி.
ஊரில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் மூட்டிவிடப் பலர் முயன்றும் அது கை கூடவில்லை. யாரிடமும் மருமகளை ஆச்சி விட்டுக் கொடுத்துப் பேச மாட்டாள். அதே போலத்தான் சுசீலாவும். அவ்வப்போது உடம்பு முடியாத போது ஆச்சியின் புலம்பல் உச்சத்துக்குப் போகும்.
“பாட்டி, நான் பால் கறக்கக் கத்துக்கவா?” என்று பேத்தி ஒரு நாள் கேட்ட போது, “ஒங்கம்மாவே மாட்டுக்கொட்டாய் பக்கம் ஒதுங்க மாட்டேங்குறா. உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். நீ நல்லாப் படிச்சு வாத்தியார் வேலைக்குப் போ. என்னோட போவட்டும் இந்த மாடுகளைச் சம்சாயி பண்ற வேலை” என்று சொல்லி பேத்தியை அந்த வேலையெல்லாம் செய்ய விடவில்லை.
“என்னிக்கு என் கட்டை காட்டுக்குப் போகுதோ, அன்னியோட இந்த வீட்டுல மாடு கன்னு கதை முடிஞ்சு போகும். அதுக்கு அப்புறம், எப்படிக் குடுத்தனம் நடக்கப் போகுதோ”
“ஒன் தாத்தா செத்துப்போனப்ப வீட்டுல இருந்த மாடு கன்னுகதான் எனக்கும் ஒன் அப்பனுக்கும் சோறு போட்டுது. அப்புறமில்ல ஒங்கப்பன் டவுனுக்கு போய் சம்பாரிக்க ஆரம்பிச்சான், அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டான். நெருப்புன்னா வாய் வெந்துடாது. நான் செத்ததுக்கு அப்புறம், ஒங்கப்பனுக்கு ஒடம்புக்கு சொகமில்லாம படுத்தான்னா சோத்துக்கு என்ன பண்ணுவீங்க? யோசிக்க வேண்டாம்?” இது பேத்திக்குச் சொல்வது போல மருமகளுக்குச் சொல்வது தான்.
அந்த பயம் சுசீலாவுக்கும் உண்டு. புருஷன் சம்பாத்தியம் மட்டும் இருந்தா, என்னத்தை மிச்சம் பிடிக்க முடியும்? நாளைக்கு இந்தப் பொண்ணை எப்படிக் கரை சேர்க்க முடியும், ஆத்திரம் அவசரம்னா என்ன செய்ய முடியும்னு என்று அவளுக்குள்ளும் அவ்வப்போது குழப்பம் வரும்.
என்ன செய்வது? எல்லாக் குழப்பங்களுக்கும் உடனடித் தீர்வு கிடைக்கிறதா என்ன? குழப்பங்களோடே வாழ்வதுதானே வாழ்க்கை என்றாகி விட்டது.
கறந்த பாலை டிப்போக்காரனிடம் அளந்து கொடுத்து விட்டு, வீட்டுக்கும், சில்லரை விற்பனைக்குமான பாலைக் கூடத்தில் வைத்து விட்டு ஆச்சி திண்ணையில் போய்ப் படுத்தாள்.
ஆச்சிக்குத் திண்ணைதான் வீடு. மழைக்காலமாதலால், நாலைஞ்சு கோணியைப் போட்டு அதன் மேல் பாயை விரித்துத்தான் படுத்துக் கிடப்பாள். இரவில் படுக்கும் போது மட்டும் பேத்தியும் கூட வந்து படுத்துக் கொள்வாள்.
“கதை சொல்லு பாட்டி” என்று பேத்தி தொணப்பி எடுத்தால் நல்லதங்காள் கதையைச் சொல்லுவாள். இது வரைக்கும் முழுக்கதையைச் சொல்ல முடியவில்லை. பேத்தி கதை சொல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கிப் போய் விடுவாள்.
இன்னிக்கு வேலை அதிகம் செஞ்சதாலயோ என்னவோ, பகலிலேயே தூக்கம் வர அப்படியே தூங்கிப் போனாள் ஆச்சி.
நேத்தி ராத்திரி ஆச்சிக்கு உடம்புக்கு வந்துடுச்சு. நேத்தி மதியம், திண்ணையில படுத்தவளை, ராத்திரி சாப்பிடக் கூப்பிட்டா பதிலே சொல்லலை. சுரம் வந்து, பிரக்ஞை தப்பிப் போயிருக்கு. டாக்டரைக் கூட்டிட்டு வரதுக்குள்ள, படுத்திருந்த எடத்துலேயே துணிமணியிலேயே எல்லாம் போக ஆரம்பிச்சுட்டுது.
அப்புறமா, திண்ணையிலேயே மறைப்பு கட்டி, சுசீலாதான், உடம்பைச் சுத்தம் செஞ்சி, வேற பொடவையக் கட்டி விட்டா.
பயப்பட ஒண்ணும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாரு. மாத்திரை, மருந்து எல்லாம் கொடுத்தாச்சு. காலைல தான் கண் முழிப்பாங்கன்னு டாக்டர் சொன்னதால ஆச்சியைச் சுத்தி எல்லாரும் உக்காந்திருக்காங்க.
நல்ல திடகாத்திரமா ஊரையே சுத்தி வந்துகிட்டிருந்த பெரிய மனுஷி இப்படிக் கிடப்பதைப் பாத்து ஊர்ல எல்லொருக்குமே வருத்தமா இருந்தது. பொண்டு பொடுசுக எல்லாம் சுத்தி நின்னுகிட்டு எப்போ ஆச்சி கண் முழிப்பாளோன்னு கவலையோட பாக்குது.
என்னதான் சுத்தம் பண்ணி இருந்தாலும், ஏதோ ஒரு வாடை அடிக்கத் தான் செய்யுது அந்த இடத்துல. பாட்டி செத்துப்போய்டுவாளோன்னு பயந்து போய் பேத்தி அழுதுகிட்டே உக்காந்து இருக்கா.
“அழக் கூடாது. பாட்டிக்கு ஒண்ணும் ஆகாது. பாட்டி இப்பக் கண் முழிச்சுடுவாங்க. தைரியமா இருக்கணும்” மகளுக்கு அறிவுரை சொன்னாள் சுசீலா.
ஆச்சிக்கு லேசாக நினைவு வந்தது. எல்லோரும் சுத்தி உக்காந்து இருக்கிறதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன ஆச்சு?” என்று எழ இருந்தவளை சுசீலாதான் தாங்கிப் பிடித்து உக்கார வைத்தாள்.
சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்ட ஆச்சிக்கு சில நொடிகளில் எல்லாம் புரிந்து போயிற்று. மாற்றியிருக்கும் புடவை, ஓங்கி அடிக்கும் பினாயில் வாசனை.
“தண்ணீ குடிக்கறீங்களா?” என்ற மருமகளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டாள் ஆச்சி. கண்ணிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. அது சொல்லாமல் சொல்லிய மன்னிப்பு ஏராளம்.
படத்திற்கு நன்றி:http://www.ilri.org/ilrinews/index.php/archives/category/research/breed-research/animal-breeding
கிழவி என்ன தவறு செய்தாள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு
நல்லதைத்தானே செய்தாள்!
மற்றபடி
அருமையான கிராமத்து நிகழ்வைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்
ARUMAIYILUM ARUMAI…UNMAIYILEYE ANDHA AACHI EN MANUDHUKKUL ULAVINAAL…
கருத்து வெளியிட்ட தமிழ்த்தேனீ ஐயா மற்றும் ரகுவுக்கு நன்றி!
கிராமத்து வாசனை….கதையின் முடிவு என்னைக்கவர்ந்தது .வயதானபின் எல்லோரும் வேண்டிக்கொள்வது “கடவுளே படுக்கையில் கிடைக்கவைக்காமல்
என் மலமூத்திரம் அள்ள வேண்டிய நிலைமை வராமல் போக வேண்டியது .
இந்தக்கதையில் சுசீலா கடைசியில் இந்த வேலையைச்செய்ய கிழவி மன்னிப்பு
கேட்டிருப்பார் என நினைக்கிறேன் .அன்புடன் விசாலம்
இளங்கோவிற்கு நீ எழுதிய கதை படித்தோம் ,நன்றாக இருந்தது
சொல்லாமல் சொல்லிய மன்னிப்பு மனதை தொடுகிறது … நன்றாக இருந்கிறது , சித்தப்பா
……
விசாலம் அம்மா அவர்களுக்கு,
இந்தக் கதையின் முடிவில் எழுதப்பட்ட வரிகள் அவ்வளவு நிறைவாக இல்லை என்று என் நண்பர்கள் பலர் என்னிடம் கூறினார்கள். இது குறித்து தமிழ்த்தேனீ ஐயா அவர்களிடம் குழுமத்தில் விவாதித்தபோது, அவர் கோணத்தில் இந்த முடிவை எழுதுமாறு வேண்டினேன். அவரும், மனமுவந்து, ஒரு முடிவைத்தந்தார். அவரின் பதிலையும், முடிவையும் கீழே கொடுத்துள்ளேன். உங்களின் எண்ணம் அதில் பிரதிபலிக்கிறது பாருங்கள்.
“தன்னுடைய நிலையை உணர்ந்த கிழவிக்கு புரிந்தது.
தன் மருமகள் தேவை என்று வரும்போது மனிதக் கழிவையும் சுத்தம் செய்யத் தயங்காத மனிதாபிமானி என்று.
புருஷனின் தாயை மதிக்காத இந்தக் காலத்தில் அவளுடைய மருமகளின் மனிதாபிமானம் அவளை நெகிழச் செய்தது. தன் மகனைக் கட்டிக் காக்க ஒரு சரியான பெண்ணையே தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்னும் உணர்வு அவளுக்கு ஆனந்தத்தை கொடுத்தது. அவளையறியாமல் அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அந்தக் கண்ணீர் அப்படியே உரைந்தது.”