வார ராசி பலன் (14.05.2012 முதல் 20..05-2012வரை)
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம்: வியாபாரிகள் எதிர்பாராத நெருக்கடிகளுக்காக அங்கும், இங்கும் அலையும் சூழலிருப்பதால், பங்குதாரர்களோடு இணக்கமான உறவுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர் வரவும், வருகின்ற லாபமும் சரியாமலிருக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் இருப்பது அவசியம். திறமையாக செயல்படும் குணத்தால் பொது வாழ்வில் இருப்பவர்களின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் . பெண்கள் மறதிக்கு இடம் கொடாதவாறு செய்யும் வேலைகளை பட்டியலிட்டுக் கொள்வது புத்திசாலித்தனமாகும். மாணவர்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். கலைஞர்கள் வீண் செலவுகளுக்கு தடை போடுவது அவசியம்.
ரிஷபம்: வேலை காரணமாக வெளியிடம் செல்லும் வியாபாரிகள் காரசாரமான உணவு வகைகளைத் தவிர்த்து விட்டால் உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வியாபார வட்டத்தில் உதவி கேட்டு செல்லும் முன் சூழலுக் கேற்றவாறு, தக்கவரை அணுகினால், ஏமாற்றங்களை தவிர்த்து விடலாம். மாணவர்கள் வம்பிழுப்பவர்களை இனங்கண்டு ஒதுங்க, கவனச் சிதறலின்றி படிப்பில் ஈடுபட்டு அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். கணக்கு வழக்குகளில் இருந்த சிக்கல்கள் நீங்குவதால், சுய தொழில் புரிபவர்கள் விடுபட்ட சலுகைகளைப் பெற்று மகிழ்வார்கள். கலைஞர்கள் கடனாக பணம் வாங்கி செலவழித்த நிலை மாறிவிடும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம்: பெண்கள் எந்த காரியத்திலும் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். சுய தொழில் புரிபவர்கள் சிறிய பொருள்களின் பயன்பாட்டில் விழிப்புடன் இருக்க, வேலைகள் தேங்காமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் சலுகைகளை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போவதால், மாணவர்களின் போக்கில் எரிச்சலும் ,படபடப்பும் வந்து போகும். இந்த வாரம் கலைஞர்கள் இடையே நிலவிய கருத்து வேறுபாடு சரியாகும்.
கடகம்: இந்த வாரம் வேலைக்குச் செல்லும் பெண்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்சனைகளைத் திறம்பட சமாளிக்க நேரிடும். முதியவர்கள் புதிய மருந்துகளை உண்ணும் முன் மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சட்ட திட்டங்களைக் கடைபிடிப்பதில் உறுதியாய் இருந்தால், சிக்கல்களில் சிக்காமல் வேலைகளில் கவனம் செலுத்த முடியும். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருந்தால், உழைப்பு வீணாவதைத் தவிர்க்கலாம். மாணவர்கள் படபடப்புக்கும் அவசரத்திற்கும் இடமளிக்காமல், வேலைகளில் ஈடுபடுவது சிறப்பாகும்.
சிம்மம்: பணியில் இருப்பவர்கள் அவ்வப்போது தன் பொறுப்பில் உள்ள கோப்புகளை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம் பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட விரும்பும் வியாபாரிகள், தினசரி நிலவரத்தைக் கவனித்து செயல்படவும். . விட்டுக் கொடுத்துச் செல்லும் மாணவர்கள் வேண்டிய செயல்களை பக்குவமாக முடித்துக் கொள்ளலாம் பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றில் பெண்கள் அளவாக உரையாட, மன வேற்றுமை, கருத்து மோதல் ஆகியவற்றில் சிக்காமல் நழுவி விடலாம் . கலைஞர்கள் கடன் வாங்குதல், அவற்றைத் தீர்த்தல் ஆகியவற்றில் பிறரை முழுமையாக நம்பி செயல்படுவதைக் காட்டிலும், நேரடியாக செயல்பட்டால் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிராது.
கன்னி: பொது வாழ்வில் இருப்பவர்கள் பண விவகாரங்களில் சற்று விழிப்புடன் இருந்தால், அவப்பெயர் வராமலிருக்கும். இந்த வாரம் வேலைக்கு முயற்சித்து வந்தவர்கள், தங்கள் திறமைக்கு ஏற்ற வேலையில் அமர்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். மாணவர்கள் கல்வி தொடர்பான வேலைகளுக்கு அங்கும், இங்கும் அலைந்து திரிய நேரிடும். கலைஞர்கள் தங்கள் நடை, உடை, பாவனை மூன்றிலும் கண்ணியத்தின் அளவு குறையாமல் பார்த்துக் கொண்டால் நல்ல பெயர் எப்போதும் இருக்கும்.
துலாம்: இந்த வாரம் பெண்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது அவசியம். பங்குதாரர்களின் செயல்கள் அதிருப்தியாக இருக்கும் நேரங்களில் வியாபாரிகள் பக்குவமாக நடந்து கொண்டால், வியாபாரத்தின் போக்கு சீராகத் திகழும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த ஒரு முயற்சியிலும் திறமையுடன் ஈடுபட்டால், நல்ல பெயரை எளிதில் தக்க வைத்துக் கொள்ளலாம். கலைஞர்கள் பண விவகாரங்களில் அவசரமான செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். மாணவர்கள் தாங்கள் கலந்து கொள்ளும் விவாதம், பட்டிமன்றம் ஆகியவற்றில் வெற்றி பெற்று மகிழ்வார்கள்.
விருச்சிகம்: நெருங்கிப் பழகியவர்கள் கருத்து வேறுபாடால் உங்களை விட்டுப் பிரியலாம். எனவே பெண்கள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் முடிந்து விட்ட பிரச்சனைகளை கிளப்பிவிடும் மனிதர்களிடமிருந்து ஒதுங்கி இருந்தால், தன் கடமைகளை சரிவர செய்ய இயலும். கலைஞர்கள் தங்கள் நல்ல பெயரை சிதறச் செய்யும் காரியங்களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாமலிருக்கும் . இந்த வாரம் வியாபாரிகள் போடும் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைப்பது என்பது சற்று சிரமமாக இருக்கும்.
தனுசு: இந்த வாரம் வியாபாரிகளுக்கு சரக்கு போக்குவரத்துக்களில் ஏற்படும் கோளாறு களால் வேலைகள் தேங்கும் நிலை உருவாகலாம். கலைஞர்கள் உறுதியான உழைப்பின் மூலம் தங்கள் பெயரை தக்கவைத்துக் கொள்வதால் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும். சுயதொழில் புரிபவர்கள் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆசிரியர்களும்,பெற்றோர்களும் காட்டும் ஆதரவை மாணவர்கள் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் வளமாக இருக்கும். கலைஞர்கள் தங்களுக்கேற்ற நாகரீக உடை, ஆபரணங்கள் ஆகியவற்றை வாங்கி மகிழ்வார்கள்.
மகரம்: பெண்கள் குடும்பத்தில் காரசாரமான பேச்சு வார்த்தைகள் வளர இடம் கொடாமலிருந்தால் எல்லோரும் அமைதியாய் வலம்வர இயலும். கண் உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விட்டால், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர்கள் பணிகளை சுணக்கமின்றி செய்யலாம். படிப்புக்காக வெளியிடம் செல்லும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் தேவையான பணத்தோடு இதமான அறிவுரைகளையும் வழங்கினால், தீய வழிகளின் பக்கம் செல்லாதிருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் எளிமையாய் இருத்தல், இனிமையாய் பேசுதல் இரண்டையும் கடை பிடித்தால், அனைவரும் உங்கள் பக்கமே இருப்பதோடு உதவி செய்யவும் முன் வருவார்கள்.
கும்பம்: பெண்கள் குழப்பம் தரும் விஷயங்களில் தகுந்த ஆலோசனையை மேற்கொள்வது நல்லது. கடினமான வேலைகளை பிறர் உங்கள் தலையில் கட்டலாம். எனவே பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படவும். வியாபார நெருக்கடியின் காரணமாக வியாபாரிகள் பங்குதாரர்களிடமிருந்து சில முணுமுணுப்புக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கலைஞர்கள் திட்டமிட்டு செயல் புரிவது என்பதை கடைபிடித்து வந்தால், சக கலைஞர்களின் அனுசரணையைப் பெறலாம். பணத்தட்டுப்பாடு இல்லாமலிருக்க பொது வாழ்வில் இருப்பவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது
மீனம்: மாணவர்கள் பொது இடங்களில், எல்லை மீறாமல் நடந்து கொண்டால் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். வியாபாரிகள் நிறுவன விஸ்தரிப்பு வேலைகளில் உள்ள நிறை குறைகளை அவ்வப்போது கவனிப்பது மூலம் பணம் மற்றும் நேரம் இரண்டும் விரையமாகாமலிருக்கும். இந்த வாரம் உறவுகளின் வருகையால், குடும்பத்தினரின் மன அமைதி குறையலாம். உயர் பதவியில் இருபவர்கள் பணியாளர்களிடம் தேவையற்ற கெடுபிடி காட்டுவதைத் தவிர்ப்பது நலம். அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தை பிறர் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் .