நான் அறிந்த சிலம்பு – 20

0

மலர் சபா

புகார்க்காண்டம் – 3. அரங்கேற்ற காதை
மாதவியின் நாட்டியம்

மங்கலப்பாடல்

அரசன் முதலான அனைவரும்
தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில்
அமர்ந்திருந்தனர்.

இசைக்கருவிகளை இசைப்பவர்தாமும்
அவரவர்க்குரிய இடத்தில்
முறைப்படி நின்றனர்.

நடனமாடும் கணிகையவள்
மாதவி தானும்
தன் வலது காலை முன் வைத்து
அரங்கம் அதனில் ஏறியே
பொருமுகத்திரை பொருந்திய
வலப்பக்கத்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனள்.
ஆடிய அனுபவ முதிர்ச்சி அதிகமுள்ள
தோரிய நடன மகளிர் தாமும்
ஒரு முகத்திரை பொருந்திய
இடபக்கத்தூண் அருகே
மரபதன்படி சென்றே நின்றனர்.

நன்மைகள் பெருகும்படியும்
தீமைகள் நீங்கும்படியும்
தாள இயல்பு பொலிந்திருந்து
அவதாள இயல்புகள் நீங்கியிருந்து
தெய்வப்பாடல்களாம்
ஓரொற்று வாரப்பாடல்களும்
ஈரொற்று வாரப்பாடல்களும்
முறைமையுடனே இசைத்தனர்.

வாரப்பாடல்கள் முடிகையில்
இசைக்கும் இசைக்கருவிகள் தாமும்
ஒருங்கே இசைத்தன.

இசைக்கருவிகள் ஒலித்த முறை

குழல் வழியே
அதன் அடியொற்றி
யாழது இசைத்தது.

யாழின் வழியே
சிறப்புடன்
தண்ணுமையது இசைத்தது.

தண்ணுமையின் வழியே
இழைவுடன்
முழவது இசைத்தது.

முழவுடன் கூடி நின்று
இடக்கை வாத்தியமாம்
ஆமந்திரிகை இசைத்தது.

அந்தரக் கொட்டு

ஆமந்திரிகையுடன் கூடி
இசைக்கருவிகள் இடைவெளியின்றியே
ஒன்றியிருந்து ஆர்த்து ஒலித்தன.

ஒரு தாளத்திற்கு
இரு கொட்டுகள் கொண்டு (10 பற்றுகள்)
பஞ்ச தாளப் பிரபந்தம்
கட்டப்பட்டது.
அத்துடன் தீர்வு என்பதுவும் சேர்ந்து (1 பற்று)
பற்று பதினொன்று ஆனது.

இங்ஙனம் பதினொறு பற்றாலே
ஆடி முடிப்பது தேசிக்கூத்து என்பது
நாடக நூல்கள் எழுதிய மரபு.
இம்முறை வழுவாது
அந்தரக்கொட்டு ஆடல் ஆடி முடித்தபின்…

தேசிக் கூத்து

பாலைப்பண் என்னும் மங்கலப்பண்ணை
அளவு குன்றாதபடி ஆளத்தி செய்து (ஆளத்தி – ஆலாபனை)
உறுப்புகள் நான்கும் (உக்கிரம், துருவை, ஆபோகம், பிரகலை)
மங்கலச் சொற்கள் உடையதாய்க்
குறைபடாமல் சொற்படுத்தி இசைப்படுத்தி

தேசிக்கூத்தின் முறைமைப்படி
மூன்று ஒத்து உடைய அளவில் ஆரம்பித்து
ஓர் ஒத்து உடைய தாளத்தில் முடித்து
அழகிய மண்டில நிலை கொண்டு
ஒற்றித்து ஒத்தல்
இரட்டித்து ஒத்தல் கடைப்பிடித்து
பாட்டும் கொட்டும் கூத்தும்
மாதவி ஆடிய பின்னே……..

மார்க்கக் கூத்து

பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட
வடுகில் ஒத்து தேசியில் ஒத்து காட்டி
இரட்டிக்கு இரட்டியாக (இரண்டிரண்டு)
மட்ட தாளம் முதல் நிலையாக
ஏக தாளம் இறுதி நிலையாக
வைசாக நிலை கொண்டு
ஆடியே முடித்தனள்.

பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று
வந்திருந்து நடனமாடியது போலவே
அபிநய பாவங்கள் அழகுறக் கடைப்பிடித்து
நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த
முறையது தவறிடாது
அனைவரும் கண்டு இன்புற்றிட
நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி.

அடிப்படையான சிலப்பதிகார வரிகள் இங்கே: 129 – 159:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram8.html

படத்துக்கு நன்றி:
http://www.4to40.com/coloring_book/Folk_Dances_of_India.asp?sc=Bharatanatyam

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *