அம்மா அதிகம் பேசாதவள்

 

தி.சுபாஷிணி

ஆம்! அம்மா அதிகம் பேசமாட்டாள். இதோ! இப்பவும் பேசாதுதான் கிடக்கிறாள். ஆட்கள் ஒருவர் ஒருவராய் வரத் தொடங்கி விட்டனர். எனது உறவுகளும், அம்மாவின் உறவுகளும் அப்பாவழி எங்களுக்குக் கிடைத்த உறவுகளும் வர தொடங்கிவிட்டனர். எங்களுக்கு உறவுக்காரர்கள் மிகவும் குறைவு. அப்பாவின் பொதுத் தொண்டின் பயனால் நண்பர்கள் அதிகம். அம்மா கல்யாணத்திற்கு போனாலும் சரி, கருமாதிக்குப் போனாலும் சரி, ஓரே மாதிரியாகத்தான் போவாள். அவளுக்கு அதில் ஒன்றும் வேறுபாடு தெரியாதா? இல்லை அவள் அதில் காண விருப்பப்படவில்லையா எதுவும் எங்களுக்குத் தெரியாது.

இதோ! சிறிய அத்தை பெண் அழைக்கிறாள். வா! மாமியைக் குளிப்பாட்டிப் புதுப்புடவை உடுத்திவிடுவோம் என்று. நானும் அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அம்மாவின் அருகில் போகிறேன். நான் தண்ணீர் எடுத்து வருகின்றேன், முதலில் தலையில் விடுகின்றேன்.

அம்மா! உடம்பு சரியில்லாது படுத்து 15 நாட்கள் இருக்குமா? நல்ல ஜூரம் என்றுதான் படுத்தாள். நான் அம்மா வீட்டிலிருந்து நான்கு தெருக்கள் தாண்டித்தான் இருக்கிறேன். நாலு தடவை ஆள் அனுப்பித்தாள். பின்புதான் சென்றேன். ஏனெனில் குடும்ப வேலை முக்கியம். அது சிறிது நகர்ந்து இடமளித்தால்தான் என் உறவுகளை நினைக்க முடியும். போனேன். ஆசையாய் ஒரு பார்வை பார்த்தாள். இந்தப் பார்வையை நான் பிறந்து அவளுடன் இருக்கும் வரை நான் கண்டதில்லை. அவள் வீட்டு அருகில் கடைகள் இருக்கின்றன. ஆனால் அவளுக்கு நான் வந்து அவளுக்கு வேண்டியதை வாங்கித் தரவேண்டும். சென்றவாரம் என்னிடம் பருப்புத் துவையல் கேட்டிருந்தாள். அவசர அவசரமாய் அது நினைவு வர ஒரு நிமிட நேரத்தில் அரைத்துக் கொணர்ந்தேன். சமையல் அறைக்குச் சென்று மன்னி செய்து வைத்திருந்த சீரக ரசத்தை சூடுபண்ணி, தட்டில் சாதம் போட்டு ரசம் ஊற்றிப் பிசைந்து பருப்புத் துவையல் வைத்து எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தேன். ஒரு சிரிப்பு சிரித்தாள். தட்டை வாங்கிக் கொண்டு சாப்பிட்டாள். கைக்குத் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டேன். குடிக்கத் தண்ணீர் கொடுத்து பின் தலைவாரி அவளை அப்படியே அணைத்து ஆடை மாற்றினேன். ‘அம்மா’ என்று அனுபவித்தாள். அந்த அணைப்பு அவளுக்கு வேண்டியிருந்திருக்கின்றது. பாவி! சொல்லமாட்டாளோ! அதுகூடத் தெரியாது இருந்திருக்கிறாள். அது என்னை என்னவோ செய்துவிட்டது. பாவம் அவள்! மென்மையான உணர்வு இல்லாமலே இருந்து விட்டாள். அதை அவள் வறுமையும் கடின உழைப்பும் அப்படியே அமுக்கி விட்டிருக்கின்றது.

அவள் மிகவும் அழுதும் நான் பார்த்ததில்லை, சிரித்தும் பார்த்ததில்லை. ஏதோ வெறியில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். அந்த வெறிக்கு நாங்கள் ஈடுகொடுத்து சென்று கொண்டிருந்தோம். அவள் கஷ்டம் அறிந்து நாங்கள் எங்கள் காரியங்களை நாங்களே செய்து கொள்வோம். எந்த எதிர்பார்ப்பும் யாரிடமும் இருக்காது. வீட்டில் சிரிப்பும் துள்ளலும் இருக்காது. துவண்டும் போகாது. என் அம்மாவின் தங்கையும் அவளது குழந்தைகளும் வரும்போதுதான் வீடு கலகலக்கும்.

வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது, வீட்டுக்காரர் சத்தம் போடுவார். அப்பவும் கலங்காது. தன் சொந்தத் தம்பி வம்பை விலைக்கு வாங்கி வருவான். போலீஸ் ஸ்டேஷன் கூட போயிருக்கிறாள். அப்பவும் இடிந்து உட்கார மாட்டாள். யாரிடமும் புலம்பவும் மாட்டாள்.

எப்போதோ! அவருக்கு வீடு நினைவு வரும்போது வரும் சமூக சேவகர் பற்றிய கவலையும் இல்லை. அவர் வந்தால் என்னவோ நேற்றுவரை வந்து கொண்டிருப்பவர்போல் கவனித்து உணவளிப்பாள். அவர் அழைத்துவரும் பட்டாளத்திற்கும் இருக்கும் உணவு பகிர்ந்து கொடுக்கப்படும். அதற்கும் ஒரு பாதிப்பு இருக்காது. எல்லாம் இவள் செய்ய வேண்டிய கடமைபோல் செய்வாள்.

அம்மாவின் அன்பு செயலாய் வெளிப்பட்டது. அம்மா எங்களை அணைத்து அனுபவித்தது இல்லை. அவள் அருகில் படுத்த சுகமும், அவள் உடம்பின் வாசனையும் நாங்கள் அறியோம். ஆனால் அவள் உழைப்பின் வாசம் அறிவோம். அவள் நடந்து நடந்து அந்த ஊரையே அளந்த அளவை நாங்கள் அறிவோம்.

தன் உழைப்பால் சேர்த்து சேமித்து வைத்ததில் முதல் பெண் என் அக்காளை திருமணம் செய்து வைத்தாள். என் அப்பாவும் இதில் பங்கு பெற்றார்.

எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனது வீட்டின் நிலைமையை உத்தேசித்து என் நண்பரையே நானாக திருமணம் செய்து கொண்டேன். அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் திருமணம் புரிந்து கொண்டோம். வெறும் பதிவுத் திருமணச் செலவு 50 ரூபாய் மட்டும்தான், திருமணச் செலவு அன்று. அம்மாவிடம் சொல்லவில்லை. பாவம்! கஷ்டப்படுவாள் என்றுதான் சொல்லவில்லை. திருமணம் முடிந்து அம்மாவைப் பார்க்க வரும்போது “என்னிடம் நம்பிக்கையில்லையா உனக்கு” என ஒரு துளி கண்ணீர் என்னை அணைத்தவாறு செலவிட்டாள். அவ்வளவுதான். அன்றுதான் நான் அவளது அணைப்பின் அனுபவம் பெற்றேன். அதுவும் நொடி நேரம்தான்.

அப்புறம், அம்மா வேலைக்குப் போகவில்லை. அண்ணன்கள் வேலைக்குப் போகத் தொடங்கினார்கள். வீட்டுப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். அம்மா! மெதுமெதுவே தன் மெல்லுணர்வுகளை உணரத் தொடங்கினாள். நான் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சேர்ந்திருந்தபோது, அவளால் தன் வீட்டில் இருக்கமுடியவில்லை. ஆஸ்பத்திரி தேடி ஓடிவந்து விட்டாள். எனக்கே மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

அவள் என்னை குளிப்பாட்டிப் பொட்டிட்டு, பூவிட்டு நானறியவில்லை. இதோ அவளை நான் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றேன். மெதுமெதுவாக இளகிய முகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி இருக்கின்றது. என் கடமை முடிந்தது என்னும் வகையில் வாயை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்.

தண்ணீரைக் கால்பக்கம் ஊற்றினேன்! எங்களுக்காக நடந்து நடந்து தேய்ந்த கால்களைப் பிடித்துவிட்டேன். மரக்கட்டையாய் கிடந்தன. எங்களூரில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் விடிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவாள். நான்கு மைல் தூரத்தில் திருவண்ணாமலை உண்டு. அங்கு திருப்பதி பெருமாள் காட்சியளிப்பார். தன் கஷ்டம் தீர வேண்டுவதற்கு, அவனிடம் ஒரு சொல் போட்டு வைக்க கிளம்புவாள். நானும் கூடப் போவேன். போகும்போதும் பேச்சு இருக்காது. வரும்போதும் பேச்சு இருக்காது. நான் உடன் செல்வது கடமை போல் செல்வேன். காலை எட்டுமணிக்கெல்லாம் திரும்பிவிடலாம். அழகான சிறியமலை, படிகள் ஒரு இருநூறு இருக்கலாம். முக்கால்வாசி ஏறிவிடலாம். பாவம்! அம்மாவால் மேலே உயரத்திலுள்ள படிதான் ஏற முடியாது. நின்று நின்று ஏறிவருவாள். அங்கு அழகாய் நின்று கொண்டிருப்பான் வெங்கடாசலபதி. இங்கு இவனைச் சேவித்தால் திருப்பதி சென்று சேவித்த புண்ணியம் என்பார்கள். வெய்யில் வருவதற்குள் மலையிலிருந்து திரும்பி விடுவோம். ஒழுங்கான வழி கிடையாது, மணல் சுடும். வழியெல்லாம் செங்கற் சூளைதான் இருக்கும். வீடுகள் இருக்கும் சுவடே தெரியாது. பாவம் அம்மா! அவளுக்கு கால்கள் வலித்துதானே இருக்கும். கொஞ்சம் இரட்டை சரீரம். என் தங்கை பிறந்தப்புறம்தான் குண்டாகிவிட்டதாக யாரிடமோ சொன்னதாக நினைவு!

அப்போது எங்க சொந்த ஊரில் எங்கள் அம்மாவின் அம்மா வீட்டில்தான் இருந்தோம். பாவம் பாட்டிதான் புலம்புவாள்! “நிறைய சொத்து இருக்கு என்றுதானே இரட்டைச்சீர் தந்து கல்யாணம் செய்து கொடுத்தேன். எல்லாவற்றையும் நாட்டுக்கு நாட்டுக்குன்னு கொடுத்துவிட்டு பெண்ணையும் குழந்தைகளையும் நிர்கதியாய் நிறுத்திவிட்டார்களே” என்று புலம்புவாள். அம்மாவிற்கு எதுவும் காதில் விழாது. மாதர் சங்கம் போய் தையல் கற்றுக் கொண்டாள். இந்தி படித்தாள். அப்பா அப்போது ஏதாவது ஒரு கிராமத்தில் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன்.

அப்பாவின் அம்மா இறந்துபோனாள். ஊர் கூடி வசூலித்துதான் கரை சேர்த்தார்கள். அப்பாவின் சகோதரி தன் அம்மாவின் பத்தாம் நாள் காரியத்திற்கு வந்தாள். நேராக தன் சகோதரியைக் கண்டாள். பொருள்கள் கொணர்ந்தாள், அங்கு கொடுத்தாள். சென்றாள். இதைப்பற்றியும் குற்றப்பத்திரிகை ஒன்றும் அவள் படித்ததில்லை. அப்பவும் அம்மா நிலையில் நின்றாள். இப்போது நினைக்கும்போது ‘அது என்ன ஆற்றல், பேராற்றல்’ என்று வியக்கின்றேன்.

ஒரு நாள் தானே முடிவெடுத்தாள். அப்பாவிற்கு கடிதம் போட்டாள். ஊரிலிருந்து அவர் இருக்கும் நகரத்திற்கு வருகிறேன் என்று. அவருக்கு வேறு வழியில்லை. வீடு ஒன்று பார்த்தார். அவ்வளவுதான் அவருடைய வேலை. நாங்கள் அங்கு சென்று குடியேறினோம். அன்றிலிருந்து அந்த நகரத்தின் தென்கோடிக்கும் வடகோடிக்கும் நடந்து நடந்து, இந்தி டியூஷன் எடுத்தாள். அப்பாவை அவள் எதிர்பார்க்கவில்லை. அவர் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமையில் வருவார் எப்போது எப்படி வருவார் என்று தெரியாது. தனியாகவும் வரலாம், கூட்டமாகவும் வரலாம். பல தலைவர்கள் வந்திருக்கிறார்கள் என வந்து அவர்களுக்காக அம்மாவிடம் உணவு தயாரித்துதரச் சொல்லி எடுத்துச் செல்லவும் வருவார்.

திருமணம் என்ற ஒன்றையும் பிள்ளைகள் பெற்றதையும் தவிர, மற்ற முடிவுகள் எல்லாம் அவள் முடிவாகத்தான் இருக்கும். அவளிடம் அந்த ஆளுமை உண்டு. அதைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியும் உண்டு.

அத்தை பெண் துண்டால் துவட்டினாள். அவள் கொடுத்தப் புடவையை கையில் வாங்கினேன். இருவருமாய் அதைக் ‘கொசுவம்’ வைத்தோம். அம்மாவைப் பார்க்கின்றேன். அம்மா! இந்தப்புடவையும் நீ வாங்கினது தான் அம்மா! உனக்காக உன் கணவனோ, நாங்களோ எதுவும் தந்ததில்லை. ஆம்! அம்மாதான் எல்லோருக்கும் வாங்கிக் கொடுப்பாள். புடவை தேர்ந்தெடுப்பதிலும் நல்ல ரசனை உண்டு. ஆனால் அவளுக்கு நன்றாக உடுத்திக் கொள்ளத் தெரியாது. ஒன்று ஓடிக் கொண்டே இருந்தது. இன்னொன்று அதற்குரிய மனம் இல்லை, அவளிடத்தில்.

இதோ! இந்த நடுமத்தியானத்தில் அவளைக் குளிப்பாட்டிக் கொண்டு இருக்கின்றோம். அவளுக்கு முந்தி அவள் சகோதரன் போய்விட்டான். அந்த சகோதரனுக்காக அவள் பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். படிப்பு ஏறவில்லை. முரட்டுத்தனம் குடிகொண்டு விட்டது. திருமணம் புரிந்து கொள்ளவில்லை. ஏதோ சொந்த ஊரில் சிட்பண்டில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்தார். அம்மாவையும், அம்மாவின் அம்மாவையும் வேண்டுமளவு கஷ்டப்படுத்திவிட்டு அவரது இறுதி சில வருடங்களில் மிகவும் சாதுவாக ஆஞ்சநேய பக்தனாக மாறிவிட்டார். இந்த தம்பிக்காக இவள் ஏறாத இடம் இல்லை. ஆணுக்கு ஆணாய் அலைந்து இந்த வேலையில் நிறுத்தினாள். கோயிலின் வாசலிலே சன்ஸ்டோராக்கிப் போய்விட்டான் என்றதும், அம்மாவிற்கு எனக்கிருந்த ஒரு உறவும் போய்விட்டது என்ற ஒரு வலி வந்துவிட்டிருந்தது.

அதில் அவளது உறவின் வலிமையெல்லாம் தெறித்து விழுந்தது. ஆம்! அன்று நினைத்திருப்பாள்! தான் இறந்து போனால் தனக்குப் புதுசு போட்டு வழியனுப்ப பிறந்த வீட்டு உறவு இல்லையே என நினைத்திருப்பாள்.

அம்மா! எனக்கு நினைவில் வருகின்றது. ஒரு நிகழ்வு! அப்பா ஒருமுறை அதிசயமாய் ஒரு புடவை வாங்கி வந்தார். அதை என் அக்காவிற்கு என்றார் அவர். உடனே அம்மா “இல்லை நான் எடுத்துக் கொள்கின்றேன்’ என்றதும் எனக்கு அன்று புரியவில்லை. என்ன அம்மா! இப்படி? என்றுமே எதுவுமே கேட்காத அம்மா என்று யோசித்தேன். நான் திருமணமானபின் அதன் பொருள் புரிந்தது. தன் கணவர் கையால் ஒரு நூலிழையைப்பெறாதவள் அம்மா அதிசயமாய் வாங்கி வந்ததும் அவர் நினைவாக எடுத்துக் கொண்டிருக்கின்றாள் என்று! ஏனெனில் எங்கள் வீட்டில் நாங்கள் யாரும் எதுவும் கேட்கமாட்டோம். அம்மாவாகத்தான் கொடுப்பார்கள். பசித்தால்கூட பசிக்கிறது என்று கூறமாட்டோம். அம்மா அன்று உணவு இருந்தால் கூப்பிடுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

“என்ன செய்ய! காலங்கடந்து புரிந்து கொள்கிறோம். அம்மா!” என்று எனது மனம் புலம்பிக்கொண்டு புதிய புடவையை உடுத்தினேன் அத்தையின் பெண் உதவியில். பொட்டிட முடியாது. அப்பா முதலில் போய்விட்டார். அவருக்கு அந்த சிரமம் அம்மா வைக்கவில்லை. அவரை நல்லபடியாக அனுப்பிவிட்டுச் செல்கிறாள். அம்மா! நீ அங்கு சென்றாவது அப்பாவுடன் இரு. ஏனம்மா! இப்படி சொல்கிறேன் என்று பார்க்கிறாய்!

அம்மா! இந்தக்கைகளைப் பிடித்துக்கொண்டு தானே ஆட்டோவில் உள்ள அப்பாவைப் பார்க்க அழைத்துச் சென்றேன். அப்போதுகூட வாய்திறந்து கேட்கலியே அம்மா. அப்பா! எப்படி நன்றாகத்தானே இருக்கிறார் என்றார்களே. எப்படி இது நடந்தது என்று கேள்வியாய்த் துடிக்கலியே அம்மா நீ. அமைதியாக வருகிறாய். மெதுவாக ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம். லிஃடில் ஏறி அப்பா படுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் செல்கின்றேன். அவரைப் பார்க்கிறாய், அவர் கைகளை உன் கையால் பற்றுகிறாய். “ஏன்னா! நீங்கள் எங்கோ இருக்கிறீர்கள் என்றுதானே நான் தைரியமா இருந்தேன். இப்படி விட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே” என்று வாய் திறந்து கேட்டாள் அம்மா. அடடா! அம்மாவின் வலிமைக்கு, தைரியத்திற்குப்பின் அப்பாவின் இருப்பு- இருந்திருக்கின்றது என்று புரிந்து கொண்டேன். அவ்வளவுதான். அதற்குமேல் அம்மா அங்கு இல்லை. அப்பாவின் சகோதரி வீடு பக்கத்தில் இருப்பதால் அங்கு அழைத்துச் சென்று விட்டேன். அப்பாவையும் அங்கே கொணர்ந்தார்கள். ஏனெனில் அவருடைய நண்பர்கள் வட்டம், தெரிந்தவர்கள் வட்டம் பெரியது. அதனால் அங்கு வைத்திருந்தால்தான் வசதிப்படும் என்று திட்டமிட்டிருந்தார்கள்.

ஒரு மனைவியின் நிலையைப் பாருங்கள். தன் வாழ்வினை ஒப்புக் கொடுத்தவள் உரிமை கொண்டாட முடியவில்லை. எல்லோரும் பொதுவானவராகப் பார்க்க எப்படி இடம் கொடுக்கும். மேலும் ஐயோ! என உரிமையாய்க் கதறக்கூட முடியவில்லை. என்ன மனுஷி இவள்! அவளுக்கல்லவா முதல் உரிமை! கூட்டம் பெருங்கூட்டமாகக் கூடி விட்டது. அம்மா யாருமறியாது மெதுமெதுவே அவ்விடம் விட்டு நகர்கிறாள். என் பார்வை அவளிடம்தான் இருக்கின்றது. வருவோர்கள் “எப்படி திடீரென ஐயாவிற்கு?” என்று வினவுகிறார்கள். அய்யாவின் மனைவியைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு அப்பாவின் சகோதரியே பதில் சொல்லி சொல்லி மாய்கிறாள். அவளுடைய உரிமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறாள். தாரத்தை விட தாய்வழித் தொப்புள்கொடி உறவல்லவா அது! என்ன செய்ய? என்ன செய்ய என என் இயலாமை அழுத்துகிறது. நாங்கள் அப்படியே வாழ்ந்துவிட்டோம். இதற்கு காரணம் வறுமையும் ஒன்று.

எங்கள் வீட்டில் அப்பாவின் சகோதரியின் ஆளுமை அதிகம் உண்டு. அப்பாவும் விட்டுவிடுவார். அம்மா தான் எதையும் பொறுத்துக் கொள்பவள் ஆயிற்றே. தான் வளர்த்த பெண் தானே என விட்டுக் கொடுத்து விடுவாள். ஒவ்வொருவராய் அப்பாவைப் பார்க்க வரத் தொடங்கி விட்டனர். அம்மா அங்குதான் இருந்தாள். என் அப்பாவின் சகோதரியும் அங்குதான் இருந்தாள். என் அப்பாமேல் அவ்வளவு பிரியம். ஏனெனில் அவள் புகுந்தவீட்டில் ஏதோ சண்டை வந்து பிறந்தவீட்டிற்கு அவளை அனுப்பிவிட்டார்கள். என் தாத்தாவும் அதனுடைய விளைவு புரிந்து கொள்ளாது குழந்தை என்று கொஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்பாதான் பேசி சமாதானம் பண்ணி அவர்கள் வீட்டில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். அதனால் அப்பாமேல் பாசம் அதிகம். அதுவும் அப்பா யார் சொன்னாலும் மதித்துக் கேட்டுக் கொள்வார். அதனால் தன் சகோதரிக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்திருக்கிறார். அந்த இழப்பு பாவம் அவருக்கு. ஆனால் அதைவிட இழப்பு அம்மாவிற்கல்லவா. அதை அவள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அம்மாவிடம் துக்கம் கேட்க வருபவர்களிடம் தான் பேசி அம்மாவை பின்னுக்குத் தள்ளிவிட்டாள். பாவம்!அம்மா! தன் கணவனை தனக்காக முன்னிறுத்திக் கொள்ள முடியவில்லை. “அவளுக்கு என்ன தெரியும். நான்தான் எங்கண்ணனை பார்த்துக் கொண்டேன்” எனக் கூறி விட்டாள்.

அம்மா! நீ அந்தகணம் உன் உரிமைக்குக் குரலே கொடுக்கவில்லையே. இதற்கு நிதானம் பொறுமை என்பதா? அது அவளுடைய அறியாமை என்ற உன் பெருந்தன்மையைக் குறிக்கின்றதா! ஏனம்மா? உன் வலிகளைக் கூறாது உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு விட்டாய்! அம்மா! விண்ணுலகம் சென்றாவது உன் கணவரின் அருகாமையை உன்னிடம் இறுத்திக் கொள்வாயா!

இதோ! உன் பேரன் பேத்திகள் கீதை படித்து விட்டார்கள். உனக்குப் பிடித்த பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் மந்திரங்கள் ஓதப் பெற்று கிளம்பி விடுவாய்.

அம்மா! அடுத்த பிறவி ஒன்று உண்டெனில், அதிலாவது நீ பேசும் அம்மாவாக, உன் உரிமைக்கு குரல் கொடுக்கும் அம்மாவாக, உன் வலிகளைப் பகிர்ந்து, உன் சந்தோஷ அலைகளைப் பரப்பும் அம்மாவாகப் பிறப்பதற்கு என்னுடைய அன்புப் பிரார்த்தனைகள் உன்கூட அனுப்புகின்றேன் அம்மா. அதை நீ தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள். அம்மா! இது மகள் தாய்க்கு ஆற்றும் கடமை!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அம்மா அதிகம் பேசாதவள்

  1. பெரும்பாலான அம்மாக்கள் பேசுவதே இல்லை. ஒரு வேளை அப்படிப் பேசினால் நிலைமை இன்னும் மோசமாகப் போய்விடும் என்றுதான் அப்படி இருக்கிறார்களோ? அப்படிப் பேசாமல் இருப்பதால்தான் மோசமாகப் போகிறது என்று நான் பல நேரம் எண்ணுவதுண்டு. வாழ்வில் நாம் சந்தித்த பல அன்னையரைப் பற்றிய சிந்தனையைத் தூண்டிய கதை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.