தனி ஈழம் சாத்தியமில்லை? கசக்கும் உண்மைகள்?

0

 

இலங்கையிலிருந்து நமது நிருபர்

                  ‘‘தனித் தமிழ் ஈழம் அமைந்திட, ஐ.நா மன்றம் வாயிலாக இலங்கையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என்ற குரல் உலகம் முழுக்க இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 27 ஆண்டுகள் கழித்து, மீண்டும் டெசோ(தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு) அமைப்பைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி, ‘‘வாக்கெடுப்பின்போது,புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும் அனுமதிக்கவேண்டும். தமிழர் பகுதிகளில் புதிதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது’’ என்று சொல்லியிருக்கிறார். 

இதெல்லாம் சாத்தியமா? இதற்கு தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் ஆதரவு அளிப்பார்கள்? என்ற கேள்விக்கு தமிழகத்தில் வாக்காளர்கள் இதுவரை ஈழப் பிரச்னையை வைத்து எந்தத் தேர்தலிலும் வாக்களித்ததில்லை. ஈழத் தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில்லை. சொல்லப்போனால், இருந்த இடம் தெரியாத அளவுக்கு இக்கட்சிகளை ஒதுக்கி விடுகிறார்கள். இதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கபட்ட வைகோவே உதாரணம்.

சரி, ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் வெற்றி கிடைத்துவிடுமா? தற்போதைய சூழலில், இதற்குப் பதிலளிப்பது சிரமமான ஒன்றாகும். ஈழத்தில் இரு தனித்தனி இனங்கள் வாழ்கின்றன. தமிழர் நிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும், சிங்களர் நிலத்தில் சிங்களர் பெரும்பான்மையாகவும் வசிக்கிறார்கள். இதில், விதிவிலக்குகள்,புத்தளம் மாவட்டமும் நுவரேலியா மாவட்டமும். இலங்கையின் 25 மாவட்டங்களில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு,மட்டக்கிளப்பு, திருகோணமலை, அம்பாறை, புத்தளம் ஆகிய 9 மாவட்டங்கள் தமிழர் நிலங்கள். மீதமுள்ள 16மாவட்டங்கள் அனைத்தும் சிங்களவர் நிலங்கள்.  

சிங்களப் பிரதேசமான நுவரேலியா மாவட்டத்தில் 52 விழுக்காடு தமிழர்கள் இருக்கிறார்கள். அதேபோல் கொழும்பு மாவட்டத்தில் 40, 45 விழுக்காடு தமிழர்களும், இஸ்லாமியர்களுமாக இருக்கிறார்கள். இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர, சிங்களர் நிலங்களில் தமிழர்களுடைய எண்ணிக்கை குறைவு. 

தமிழர் நிலமான புத்தளம் மாவட்டமானது, முழுக்க முழுக்கத் தமிழர் வாழ்ந்த மாவட்டம். ஆனால், கடந்த 40ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று 60 விழுக்காடு சிங்களர்கள் வசிக்கிறார்கள். தமிழர் நிலமான அம்பாறை மாவட்டத்தில் 60ஆண்டுகளுக்கு முன்பு 80 விழுக்காடு தமிழர்கள் இருந்தார்கள். சிங்களர்கள் 6 விழுக்காடுதான். ஆனால், இன்றைக்கு,ஏறத்தாழ 40 விழுக்காடு அளவுக்குச் சிங்களவர் ஆக்கிரமித்து விட்டார்கள். தமிழர்களும், இஸ்லாமியர்களும் தலா 30விழுக்காடு என்கிற அளவில் இருக்கிறார்கள். 

மட்டக்கிளப்பில்தான் 75 விழுக்காடு தமிழர்கள் வசிக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு சிங்களர்கள், மூன்றில் ஒரு பங்கு இஸ்லாமியர்கள், மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் எனச் சமமாக வசிக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009-க்குப் பிறகு 25 விழுக்காடு சிங்களர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள். 

ஒட்டுமொத்த தமிழர் நிலத்தையும் கணக்கிட்டால், இன்றைய தேதிக்கு தமிழர்கள் சிங்களர் இஸ்லாமியர்கள் சமமான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். ஏற்கெனவே 2 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தமிழர்களின் எட்டு மாவட்டங்களிலும் குடிகொண்டுவிட்டார்கள். கூடவே, அவர்களுடைய குடும்பத்தினரையும் கொண்டு வந்துவிட்டார்கள். இவர்கள், வீட்டுக்கு 4 பேர் என்றால்கூட மொத்தம் 8 லட்சம் இருக்கிறார்கள்.  இலங்கையிலிருந்து ஈழத்தை தனியாகப் பிரிப்பதுதான் வாக்கெடுப்பின் நோக்கம். அப்படி வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, தாங்கள் வாழக்கூடிய நிலத்தை தாயகமாகக் கொண்ட அனைவரும் வாக்களிப்பார்கள். அந்த வகையில் பார்த்தால், சிங்களர்களும், இஸ்லாமியர்களும் தனி ஈழத்துக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டார்கள். எனவே வெற்றி என்பது நிச்சயிக்கப்படாத ஒன்றாகவே இருக்கும். 

இன்னொரு முக்கியமான விஷயம், வாக்கெடுப்புக் கோருபவர்கள் வெற்றிக்கு உதாரணமாக தெற்கு சூடான்,கிழக்குத் திமோர், கொசோவா, போஸ்னியா ஆகிய நாடுகளை உதாரணம் காட்டுவதுதான். இதன் பின்னணி எப்படிப்பட்டது என்பதை முழுமையாக உணர்ந்தவர்கள் இவ்வாறு பேசமாட்டார்கள். மேற்கண்ட நாடுகள் அனைத்தும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டவை. சூடானில், முஸ்லிம் மேலாதிக்கத்தில் அவதிப்பட்டு வந்த தெற்கத்திய கிறிஸ்தவர்களை விடுதலை பெற வைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் தெற்கு சூடான். அதேபோல், இந்தோனேஷியாவின் முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து, கிறிஸ்தவ மக்களைப் பிரித்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் கிழக்குத் திமோர். கொசோவாவும், போஸ்னியாவும் கிறிஸ்தவ ஆதிக்கத்திலிருந்து இஸ்லாமியர்களை விடுவிப்பதற்காக கொண்டுவரப்பட்டவை. இந்த நாடுகள் உருவானதன் பின்னணியில் மேற்குலக நாடுகள் இருந்தன. 

எனவே, இலங்கைத் தீவில் அப்படிப்பட்ட அழுத்தம் வரவேண்டும் என்றால், ‘ஈழத் தமிழர்கள் இந்துக்கள்’ என்கிற அடிப்படையில் இந்தியாதான் குரல் எழுப்பவேண்டும். இந்தியா அப்படி எழுப்புமா என்பது சந்தேகம்தான். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வர, இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. இதனிடையே எதிர்பாராதவிதமாக வாக்கெடுப்புக் கேட்டு இந்தியா குரல் எழுப்பினால், ‘‘அன்றைய ஐநா தீர்மானத்தை ஏற்று, முதலில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்திவிட்டு, அதன்பிறகு இலங்கைக்கு ஐநா வழி வாருங்கள்’’ என்று ராஜபக்ஷே பதிலடி கொடுக்கக்கூடும்! 

கியுபெக் மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து போகவேண்டுமா என வாக்கெடுப்பு நடத்தியபொழுது,ஆதரவாக 49% வாக்களிப்பபு எதிர்த்து 51% வாக்களிப்பு. கியுபெக் மாகாணம் தனி நாடாவதைக் கைவிடவேண்டிய சூழ்நிலை. 

இவ்வாறான சூழ்நிலையில், தனி ஈழத்துக்கென வாக்கெடுப்பு என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் இருந்தால் மட்டுமே முடியும். அப்படியொரு அழுத்தத்தை மூன்று மாதங்களுக்குள் கொண்டு வரவேண்டும். அப்படிச் செய்தால், வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் உண்டு. 

இல்லையென்றால், வாக்கெடுப்பு வருவதை மனத்தில் கொண்டு, சிங்களக் குடியேற்றம் விரைவாக நடந்து அவர்களின் எண்ணிக்கை தமிழர் நிலத்தில் 60% எட்டிவிடுமே!. மாவட்டந்தோறும் 70%சிங்களவர், 20% தமிழர் 10%இஸ்லாமியரும் ஏனையோரும் என்ற விகிதாசாரத்தில் மக்கள் வாழவேண்டும் அப்பொழுதுததான் பிரிவினைக் கோரிக்கை வராது எனப் பலமுறை இராசபக்சே சொல்லிவிட்டார்.

கிழக்கு மாகாண மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடு மக்கள் கருணாவுக்கும், பிள்ளையானுக்கும் ஆதரவாகச் செயல்படக்கூடிய சூழ்நிலையில், காலம் கடந்த வாக்கெடுப்பு என்பது தமிழீழக் கோரிக்கை கனவாகிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *