இலக்கியம்கவிதைகள்

அதிகாலைப்பல்லவன்-கவிதைப்புதினம்(8)

தாம்பரம் நிறுத்தம்-8
 
அதுவந்த நாளில்
அயலூர் சென்றிருந்தேன்
வந்த கடிதத்தை
வாய்ப்புக்கொடுக்காமல்
பிள்ளைகள் அதைப்
பிரித்துவிட்டார்கள்

பிரித்தது மட்டுமா?
படித்தும் விட்டார்கள்
வீட்டுக்கே வருகிறேன்
என்ற விவரம் இருந்தது

மனைவியும் பிள்ளைகளும்
என்ன நினைத்தார்கள்?
………………..
எனக்குத் தெரியாது

இரவுதான் நான்
புதுக்கோட்டையிலிருந்து
வந்துசேர்ந்தேன்

பிள்ளைகள் எல்லாம்
உறங்கியிருக்க வேண்டியவர்கள்
உறக்கத்தை
ஒத்திப்போட்டிருந்தார்கள்

துக்கம்போல் கடிதத்தைக்
கருதியதால்
தூக்கத்தைத் தள்ளிப்போட்டார்கள்

வீட்டுக்குள் நுழைந்ததும்
எல்லோரும்
விழித்திருந்தது
வியப்பாய் இருந்தது

மவுனம் வீட்டுக்குள்
கூடுகட்டி இருந்தது

சப்த நாடியும்
ஒடுங்கிய சடலமாய்
வீடு ஆனது

எல்லோர் முகத்திலும்
இருள்
ஆட்சி செய்தது

அப்பா என்று
அழைப்பவர்கள்கூட
தப்பாய் ஏதோ
நிகழ்ந்ததாய் எண்ணி
வாய்மூடிக்கொண்டார்கள்

மனைவியோ
சலனமின்றி
சாப்பாடு வைத்தாள்

சாப்பிட்டு முடிந்ததும்
வீட்டுக்கு வந்த
கடிதத்தைத் தந்தார்கள்

அதிர்ச்சியை
முகத்தில் காட்டாமல்
அப்பாவிபோல் படித்தேன்

மகன்களில் ஒருவன்
“அப்பா
‘அவர்கள்’
வீட்டுக்கு வரவேண்டாம்” என்றான்

ஏன்?
எதற்கு?
என்று கேட்காமல்
சரிப்பா என்றேன்

நாகரீகமாய்க் கேட்டிருந்தும்கூட
எவ்வளவு இறுக்கம்
மனதில் இருந்திருந்தால்
இப்படி மகன் கேட்டிருப்பான்!
இல்லை
இல்லை
இளகியிருப்பான்!

யாரோ
எவரோ
என்று எண்ணி
எப்படியெல்லாம்
மனைவியின் மனம்
குமைந்திருக்கும்!

மனம் கனத்தது…

சொல்லமுடியாத
ஒரு சோகம்
சூழ்ந்தது

விளக்கமுடியாமல்
வேதனை
கவ்வியது

அலுவலகத்தோடு இருக்கவேண்டியது
வீட்டுக்கும் வந்தது
என்ன நியாயம்?

கவிதைகள் பிடித்திருந்தாலும்
பிடித்த கவிதைகளைப்
படித்திருந்தாலும்
அளவோடு இருப்பதுதான்
அழகு

கவிதையைப் பிடித்ததா
கவிஞனைப் பிடித்ததா
யாருக்குத் தெரியும்

எனக்குத்தெரியும்…

எனக்குத் தெரிந்தது
மனைவிக்கும் தெரிந்தால்
என்ன ஆவது?

எனக்கு அது
பொழுதுபோக்கு

உற்சாகத்தோடு பணிபுரிய
அது
உதவியாக இருந்தது உண்மை

எல்லை மீறாமல்
இருக்கும்வரை
சரிதான்

எல்லையை மீறினால்!

உற்சாகம் தருகிறதே
என்று
ஒருபடி மேலேபோனால்
விளைவுகள்
எப்படி இருக்குமோ!

படத்திற்கு நன்றி
http://dangerousharvests.blogspot.in/2011_06_01_archive.html
 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க