வித்தியாசமான ஒரு திருமணம்
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் நியுயார்க் நகரம். பல பெரிய புள்ளிகள் கலந்துகொண்ட, இரண்டு பெரிய புள்ளிகள் திருமணம் செய்துகொகொண்ட விழா. முன்னூறு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் திருமண விருந்தினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம். விருந்தினர் பட்டியல் தயாரிப்பது திருமண ஏற்பாடுகளில் நிறைய நேரம் எடுக்கும் வேலை. விருந்தினர்களில் மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் நியூயார்க் நகர மேயர் ப்ளூம்பெர்க்கும் நியுயார்க் மாநில ஆளுநர் கியுமோவும் அடக்கம். மணமக்கள் இருவரும் பெரிய புள்ளிகள். மணமக்களில் ஒருவர் நியுயார்க் மாநகர ஆட்சிக் குழுவின் தலைவர். அடுத்த வருடம் நடக்கப் போகும் நியுயார்க் நகர மேயர் பதவிக்குப் போட்டியிடப் போகிறவர். அநேகமாக ஜெயிக்கவும் செய்வார் என்று கூறப்படுகிறது. இவர் கண்டிப்பு நிறைந்தவர் என்று பெயர் வாங்கியிருந்தாலும் மணவிழாவில் அவர் திருமண வாக்குறுதிகளைக் கூறிய போது அதில் கொஞ்சம் மென்மை இருந்ததாக கூறுகிறார்கள். இன்னொருவர் பெரிய வழக்கறிஞர். நியுயார்க மாநில செனட்டர்களான கில்லிபிரேண்டும் ஷுமரும் நியுயார்க நகரத் தலைமைப் போலீஸ் அதிகாரி கெல்லியும் கலந்துகொண்டனர். நியுயார்க் நகர மேயர் அலுவலகத்திலிருந்து பல பெரிய புள்ளிகளும் நியுயார்க் மாநில காங்கிரஸ் அங்கத்தினர்களும் திருமணத்திற்கு வந்திருந்தனர்.
இந்தியாவில் திருமணத்திற்கு நேரில் அழைக்க விருந்தினர் வீடுகளுக்குச் சென்றால் அங்கு அவர்களுடைய விருந்தினர்களோ நண்பர்களோ இருந்தால் அவர்களுக்கும் – அவர்கள் நமக்கு நன்கு பரிச்சயமில்லாதவர்கள் என்றால் கூட – ஒரு அழைப்பிதழைக் கொடுத்து வைப்போம். அநேகமாக அவர்கள் வர மாட்டார்கள் என்பது ஒரு காரணம். அப்படியே வந்தாலும் அதிகமாக ஒரு சிலரை விருந்தோம்புவதில் பெரிய பிரச்சினை இல்லை. நூறு பேருக்கு சமைக்கும்போது நூற்றுப் பத்து பேருக்கு சமைப்பது பெரிய காரியமில்லை. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை. எத்தனை விருந்தினர்கள் வருவார்கள் என்று தெரிந்துகொண்டு அத்தனை பேருக்குப் பெரிய ஓட்டல்களில் உணவிற்கு ஆர்டர் கொடுப்பார்கள். அது மட்டுமல்ல, திருமணம் சம்பந்தப்பட்ட எல்லா ஏற்பாடுகளும் முறையாக நடக்கும். அதனால் ஒருவர் அதிகம் என்றாலும் அவர்களால் சமாளிக்க முடியாது.
அமெரிக்காவில் என் தோழி ஒருவர் என்னிடம் ‘என் தாய் என் திருமணத்திற்கு விருந்தினர்களை அழைக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருந்தார். அதிகம் பேரை அழைத்துவிட்டால் எப்படிச் சமாளிப்பது என்று பயந்துகொண்டிருந்தார்’ என்றார். அமெரிக்காவில் திருமணம் செய்துகொள்வதில் பலர் தயக்கம் காட்டினாலும், முடிவு செய்துவிட்டால் திருமணத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குரிய ஏற்பாடுகளைப் பல மாதங்களுக்கு முன்பு அல்லது ஒரு வருடத்திற்கு முன்பே கூடத் தொடங்கிவிடுகிறார்கள். அதிலும் பெரிய புள்ளிகள் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். ஏற்பாடுகள் மிகவும் தடபுடலாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட திருமணமும் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்டதாகையால் சில மாதங்களுக்கு முன்பே ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்கள். மணமக்கள் மிக விலையுயர்ந்த உடைகளை அணிந்திருந்தனர். மிகவும் சிறந்த அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இனிப்பிற்காக வழங்கப்பட்ட சாக்கலேட் கேக் மிகவும் சிறப்பானது. அது விலையுயர்ந்த ஐஸ்கிரீமோடு பரிமாறப்பட்டது. பிரபல பாடகர் ஒருவரின் பாடலுக்கு விருந்தினர்கள் அனைவரும் – ஏற்கனவே வீட்டுக்குப் போய்விட்ட மேயரையும் ஆளுநரையும் தவிர மற்றவர்கள் – நடனம் ஆடினர். அமெரிக்கத் திருமணங்களில் நடனம் ஒரு முக்கியமான பகுதி.
மணமக்கள் இருவருக்கும் பல வருடப் பழக்கம் உண்டு. இருவரும் தங்கள் பதின்ம வயதிலேயே தங்கள் தாய்மார்களை இழந்தவர்கள். இது இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க ஓரளவிற்கு உதவியது என்று சொல்லலாம். அதனால் இருவருடைய தந்தையரும் உயிரோடு இருக்கும் போதே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனராம். பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட திருமணம் என்றாலும் பத்திரிக்கைக்காரர்கள் யாரையும் அழைக்கவில்லையாம். திருமணத்தில் மணமக்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள், திருமண ஹாலுக்குள் எப்படி அலங்காரம் இருந்தது என்ற தகவல்களையும் சில புகைப்படங்களையும் பத்திரிக்கையாளர்களுக்குக் கொடுத்தார்களாம். விழாவின் முடிவில் செனட்டர் ஷுமர், காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த நிருபர்களிடம் பேசும் போது ‘நாடு மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த மாதிரித் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதல்ல இப்போதைய பிரச்சனை. எல்லா இடங்களிலும் எப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் கேள்வி’ என்றார்.
இந்த மணமக்கள் இருவரும் பெண்கள். இருவருக்கும் வயது 45. அமெரிக்கா வெகு வேகமாகத்தான் முன்னேறிக்கொண்டிருக்கிறது!
மனிதனுக்கும் நாய்க்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைப்பதை விட, (Female ஆக இருந்தாலும்) இது மேல் தானே?