சு. கோதண்டராமன்
 

கர மயமாதல் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது. முன்னாள் கிராம மற்றும் சிற்றூர் வாசிகள், தாங்கள் சிறுவயதில் அனுபவித்த இன்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லையே என ஏங்குவது இயல்பு. அத்தகைய இன்பங்களில் ஒன்று ஆற்றிலும் குளத்திலும் குளித்தல். இன்றுள்ள அடுக்கு மனைக் கலாசாரத்தில் குளத்தில் குளிக்க விரும்பினால் நடக்குமா? நடக்க வாய்ப்பு உண்டு. எப்படி என்று பார்ப்போம்.

கட்டிடம் கட்டி விற்பவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளைக் கட்டுதல் வழக்கமாகி விட்டது. இத்தகைய பெரிய வளாகங்களில் ஒரு குளத்தை ஏன் உருவாக்கக் கூடாது?

தற்போது சிலர் நீச்சல் குளம் அமைத்து வருகிறார்கள். ரசாயனப் பொருட்கள் சேர்ந்த நீரை நிரப்புகிறார்கள். இந்த நீச்சல் குளத்தைச் சற்றே மாற்றிக் குளியல் குளமாக ஆக்கலாம்.

150 அடி நீளம் 150 அடி அகலம் 6 அடி ஆழம் கொண்ட ஒரு குளம் அமைக்க வேண்டும்.  நான்கு புறமும் 10 அடி அகலமுள்ள நடைபாதையும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட வேண்டும். இதில் தேங்கக் கூடிய நீரின் அளவு 40,50,000 லிட்டர். இதில் மீன்கள் வளர்க்கப்பட வேண்டும். குளத்தைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் வளர்க்க வேண்டும். இதில் ஒரே நேரத்தில் குறைந்தது 150 பேர் குளிக்கலாம். 400 அல்லது 500 குடியிருப்புகள் கொண்ட பகுதிக்கு இந்த அளவு குளம் போதுமானதாக இருக்கும்.

1100 பேர் தலைக்கு ஒரு நாளைக்கு 10 லிட்டர் வீதம் ஒரு ஆண்டு குளிப்பதற்கு இந்த அளவு நீர் ஆகும். குளியலறையில் பயன்படுத்திய நீர் வீணாகக் கழிவு நீராகப் போகிறது. மேற் சொன்ன அளவுள்ள குளத்தில் நீர் தேக்கி வைக்கப்பட்டால், 2000 பேர் ஆண்டு முழுவதும் குளிக்கலாம். குளிப்பதனால் குறைவு படாமல் நீர் அப்படியே இருக்கும். மேலும் பல ஆண்டுகளுக்கு இதைப் பயன் படுத்த முடியும்.

பல பேர் குளிப்பதால் நீர் அழுக்காகாதா? ஆகாது. இந்தக் குளத்தில் மீன் வளர்ப்பதால் மீன் அழுக்கை உண்டு விட்டு நீரைத் தூய்மைப்படுத்தி விடும். அசைவம் உண்பவர்களுக்கு மீன் உணவாகும். தினமும் இந்த நீர் சூரிய வெப்பத்தில் காய்வதால் நோய்க் கிருமிகள் தொற்றும் அபாயம் இல்லை. இதற்கு ரசாயனப் பொருள் சேர்க்க வேண்டும் என்பதில்லை. ரசாயனப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்படுகின்றன. மேலும் நீச்சல் குளத்தில் நீந்தியபின் மீண்டும் நல்ல நீரில் குளிக்க வேண்டியிருக்கிறது. அதற்காக நீர் மேலும் செலவாகிறது. நாம் சொல்லும் குளத்தில் அந்த அவசியம் இல்லை.

குளிப்பதாலும் சூரிய வெப்பத்தால் ஆவியாவதாலும் எப்படியும் சிறிதளவு நீர் குறையத் தான் செய்யும். அவ்வப்போது பெய்யும் மழையால் இந்த இழப்பு ஈடு செய்யப்படுவது மட்டுமல்லாமல் தண்ணீர் புதுப்பித்தலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதனால் மீன்களுக்குத் தேவையான உயிர் வளியும் குறைவுபடாமல் கிடைக்கும்.

வளாகத்தில் பெய்யும் மழை நீரை இந்தக் குளத்தில் வடியுமாறு செய்யலாம். இதனால் மழைநீர் சேகரிப்புக்கென்று தனியே ஆழ்துளை வடிகால் அமைக்கும் செலவு மிச்சம்.

குளிப்பதால் வெளியேறும் நீரே வீடுகளின் கழிவு நீரின் பெரும்பகுதி. குளம் அமைப்பதால் இந்தக் கழிவு நீரின் அளவு குறையும். எனவே கழிவு நீர் மறு சுழற்சி செய்வதற்கான செலவும் குறையும்.

வளாகத்தில் உள்ள அத்தனை பேரும் இதில் குளிப்பது என வழக்கம் வைத்துக் கொண்டால் இரு குளியல் அறைகள் உள்ள வீட்டில் ஒரு குளியல் அறை, அதுவும் அவசர காலங்களுக்கென்று, அமைத்தால் போதுமானது.

இந்த நாற்பது லட்சம் லிட்டர் நீரை மேல் நிலைத் தொட்டிக்கு ஏற்றுவதற்கான மின்சாரம் மிச்சம்.

சமூக உறவுகள் மேம்படும். நான்கு சுவர்களுக்குள் முடங்கி அடுத்த பிளாட்டில் குடியிருப்போர் யார் என்று கூட அறியாமல் இருக்கும் கூட்டுப்புழு மனோபாவத்துக்கு இது முடிவு கட்டும். குளத்தில் குளிக்க வருபவர்கள் ஒருவரோடொருவர் கலந்து பழகி உரையாட இது வாய்ப்புக் கொடுக்கும். ஒற்றுமை ஓங்கும்.

இந்த நீரின் தூய்மையைப் பாதுகாக்க இதற்கென்று தனியே காவலர் நியமிக்கப்படத் தேவை இல்லை. பெரும் குடியிருப்புகளில் எப்படியும் ஒரு காவல்காரர் இருப்பார். அவரே இதையும் பார்த்துக் கொள்ளலாம். குடியிருப்போர் சங்கப் பொறுப்பாளர்கள் தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.

பெண்கள் இதில் குளிக்க முடியுமா? குளிக்கலாம்.  சிற்றூர்களில் பெண்களுக்கென்று தனித் துறைகள் இருப்பது போல இங்கும் சில பகுதிகளைப் பெண்களுக்கென்று ஒதுக்கலாம். அல்லது முஸ்லீம் கிராமங்களில் செய்வது போல பெண்கள் குளிக்கும் துறையின் நான்கு புறங்களிலும் மறைப்பு ஏற்படுத்தலாம்.

சிறுவர்களும் பெரியவர்களும் இதில் நீந்திப் பழகலாம். நீச்சல் நல்ல உடற்பயிற்சி. தோள்பட்டை, மார்பு விரிவடையும்  சுவாச நோய்கள் வராது. குளத்து நீரில் குளிப்பதால் சளி பிடிக்கும் என்ற பயம் அனாவசியமானது. குளத்து நீர் கோடைக் காலத்தில் மேல் பகுதி சூடாக இருந்தாலும் அடியில் ஜில்லென்று உடம்புக்கு இதமாக இருக்கும். குளிர்காலத்தில் குளிருக்குப் பயந்து கொண்டு கரையில் நடுங்கிக் கொண்டிருப்பவர் துணிந்து ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் குளிர் போய்விடும். கீழ்ப்பகுதி நீரின் இதமான வெப்பம் குளித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

கோடைக்காலத்தில் வெப்பம் தாங்காமல் மீன்கள் செத்துவிடும் என்று பயந்து கோடை துவங்குமுன் அவற்றை வலை போட்டுப் பிடிக்கும் வழக்கம் சில ஊர்களில் உள்ளது. அவ்வாறு வலை போடப்பட்ட குளம் நாறத் தொடங்கி விடும். ஆழமான குளங்களில் இந்தப் பிரச்சினை இல்லை. அடிப்பகுதி நீர் எப்பொழுதும் குளிர்ச்சியாகவே இருக்கும். மேலும் குளத்தைச் சுற்றி மரங்கள் வளர்ப்பதால் நீரின் ஏதேனும் ஒரு பகுதியில் நிழல் இருக்கும். வெய்யில் நேரத்தில் மீன்கள் அங்கு சென்று பதுங்கி விடும். வெய்யில் தணிந்த பிறகு எல்லா இடங்களிலும் சஞ்சரிக்கும். மாதத்தில் ஒரு நாள் தூண்டில் போட அனுமதிப்பதன் மூலம் மீன்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும். விரும்புவோர்க்கு உணவும் ஆகும்.

குளத்தைச் சுற்றியுள்ள நடைபாதை மாலை நேரத்தில் உலாச் செல்வதற்கு ஏற்ற இடமாக இருக்கும்.

செலவு நிறைய ஆகுமோ? ஆகாது. மேற்சொன்ன அளவுள்ள குளத்திற்குத் தேவையான நிலம் 170*170- 28900 சதுர அடி. இது பெரும் குடியிருப்புகளில் அமைக்கப்படும் நீச்சல் குளங்களை விடச் சற்றே பெரியது. இந்த அளவு தான் அமைக்க வேண்டும் என்பதில்லை. அந்தந்த வளாகத்தின் வசதிப்படி தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம். தண்ணீர்ச் செலவு, அதிகப்படியான குளியலறை கட்டுதற்கான செலவு, மின்சாரச் செலவு முதலானவற்றைக் கணக்கிட்டால் குளியல் குளம் அமைப்பதால் பெரும் செலவு ஏற்படப் போவதில்லை.

பெரும் வளாகங்கள் கட்டுபவர்கள் கவனிப்பார்களா? அரசாங்கம் அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிமுறைகள் ஏற்படுத்துமா? பொது மக்களாகிய நாம் ஒரு பொதுக் கருத்தை உருவாக்கிவிட்டால் எதுவும் நடைபெறும்.

புகைப்படத்துக்கு நன்றி:

http://3.bp.blogspot.com/-o9LNAPmg5pI/TdXwiNW3avI/AAAAAAAACdM/1RxjL60mpec/s400/meerappalli.jpg

http://www.indyarealtor.com/uploadimages/20081022071316cosmos-celebrity-apartment2.gif

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நீர் மேலாண்மை

  1. குளங்கள் பற்றிய பல  பிற்போக்கு சிந்தனைகள் கொண்டுள்ள நம் சமுதாயத்திற்கு, தக்க சமயத்தில் நல்ல விழிப்புணர்வு
    குளத்து நீரைக் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்  என்கிற பழக்கம் இறுந்த ஒரு வளமான அறிவியல் சமுதாயம் நம்முடையது.

    பொன் எனத் துலக்கிய பித்தளைக் குடங்களில் குளத்து நீர் வடிகட்டி நிரப்பி  சிம்மாடு கொசுவி, சுருட்டித் தலை மீது வைத்து சிம்மாட்டின் மேல் ஒன்றின் மீது ஒன்றாய் நீர் நிரப்பிய அக்குடங்களை லாவகமாய் அடுக்கி , தோதாய் ஒன்றின் மேல ஒன்று இடுப்பிலும் பொருத்தி, கூட்டம் கூட்டமாய்  எம்  பெண்கள் தண்ணீர்க் குடங்களுடன் ஒய்யார நடை நடந்தபடி, வீட்டிற்கு வெளியில் சென்று, காலார நடந்து, இயற்கைச் சூழலை அனுபவித்தபடி  சமுதாயத் தொடர்பு கொண்டபடி, தோழியரிடம் மனம் விட்டு பேசி,  உடல் ஆரோக்யத்தொடு, மன நலமும் பெற்றுப் பெண்கள் வாழ்ந்த காலம்!
    குளத்தங்கரை விநாயகரும் தப்பாமல் இருக்கும் நாவல் மரமும், நடு மண்டபமும்!
    குளத்து மேட்டுக் காவியங்கள் ஏன் இப்படி ஒரே அடியாய் தலைகீழாய் மாறிப் போயினவோ!
    குளத்தில்  தண்ணீர் முகரும்போது  நம் பெண்கள்  ஒரு வாயில் சேலைத் துண்டில் அல்லது மெல்லிய வேட்டித்துண்டில் வடிகட்டி மட்டுமே நீரை முகர்வர். 
    சுத்தமான துண்டில் வடிகட்டும்போது நீரில் உள்ள அனைத்துக் காளான்களும் கிருமிகளும் வடிகட்டப்பட்டு விடும். தூய்மையான நீர் மட்டுமே குடத்துக்குள் செல்லும். அவ்வாறு வடிகட்டிக் கொணர்ந்த நீரை வீட்டில் அனைவரும் அப்படியே பருகுவர். சமையலுக்கும் பயன்படுத்துவர். எவருக்கும் எந்த பிணியும் வந்ததில்லை.
    அன்றைய நாளில் நம்மவரின் பழக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பல வெளிநாட்டு விஞ்ஞானிகள  இம்முறையைத் தமது ஆய்வகத்தில் நிகழ்த்திப் பார்த்து, வாயில்சேலை/வேட்டித்   துண்டு கொண்டு வடிகட்டப்படும்போது நீர் தூய்மை அடையும்  உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் . அவர்களது கண்டு பிடிப்பின் படி இவ்வாறு வாயில்சேலை/வேட்டித் துணித் துண்டில் வடிகட்டப்பட்ட குளத்து நீரில் காலரா கிருமிகள்  இல்லவே இல்லை என்பதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
    இவ்வாறு நீரைத் தூய்மையாக்கி நாம் பருகிவந்ததை, நாம் இன்னமும் கடை பிடிப்பதாகவே கூட இவர்கள இன்னமும் நம்புகிறார்கள். இதற்கு Sari Method  of water filtration என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.
     செலவில்லாத இந்த எளிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அதனைப் பழக்கத்தில் கொண்டுள்ள நம்மைப் பாராட்டி வருகிறார்கள். 
    பாராட்டியதோடு நின்று விடாமல், அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி அறிவியல் பாடத்தில் இதனைப் பாடப் பகுதியாக வைத்திருக்கிறார்கள்.
    எல்லா அமெரிக்கக் குழந்தைகளும் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய ஒன்பதாம் வகுப்பு உயிரியல் (Biology) புத்தகத்தில், இரண்டாவது பாடமான இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உடல் நலம் (Health in Twenty First Century) என்ற பாடத்தில் முதல் பகுதியில் இம்முறை போதிக்கப் படுகிறது. தேர்வுக்கு முக்கியமான பகுதியாகும் இது .
    இப்பாடத்தை நடத்தும்போது அமெரிக்க மாணவர்கள் அதிசயிக்கிறார்கள் நம் அறிவுத்திறனைக் கண்டு.
    நம்மைப் பிறர் பார்த்துப் பரவசப்படும் நிலை இருந்தது- இப்போது இல்லை – இது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை.
    இந்நிலை சீர்பெற – நாம் தொடர்ந்து நல்ல பழக்கவழக்க நிலைக்கு மீள – பிற நாட்டவர் பார்வையில் நாம் நல்லவர்களாக – வல்லவர்களாக நிலைபெற – நல்லதொரு சிந்தனைப் புரட்டலைத் தொடங்கி  இருக்கிறீர்கள் .
    பெருமைப்படுகிறேன், வியக்கிறேன், இது காலத்தே நீங்கள் செய்திருக்கிற மாபெரும் சமுதாயப் புரட்சி – அறிவியில் அதிரடி-
    குளங்களைத் துத்து வீடு கட்டிப் பாழ் செய்து வருகிறோம். 
    இது பாவகரமான செயல்!!
    குளங்களை நாம் மீட்டாக வேண்டும்.
    உலகெங்கும் நம் குலப்பெருமை சாற்றும் குளங்களின் 
    பெருமையினை  நினைவுபடுத்தி 
    எளிமையாய் இடித்துரைக்கும் – எடுத்துரைக்கும் 
    இக்கட்டுரை 
    சீரிய சிந்தனை
    திடமான பதிவு
    பொறுப்பான நோக்கம்
    குளங்கள் சமரசம் குலாவும் இடம்!!
    குளங்கள் நம் மூத்த குடி மக்கள் நமக்காய் ஏற்படுத்திப் போயிருக்கிற அமுத ஊருணிகள்!!   
    இளைய வாசகர்களுக்கு:
    நம் குளத்து நீரின் பெருமை அறிய இங்கு ஒரு இணைப்பைத் தருகிறேன்: 
    http://www.icddrb.org/media-centre/news/2141-simple-sari-cloth-filtration-of-water-protect-villagers-from-cholera-in-matlab-bangladesh 
    அதிக விலை கொடுத்து வாங்கும் பில்டர்கள் எல்லாம் இந்த சேலை/வேட்டித் துண்டு வடிகட்டுதல் முறைக்கு முன்னே ஒன்று மில்லை!! 

  2. நன்றி அவ்வை மகள்அவர்களே. இளம் வயதில் குளங்களை நன்றாக ரசித்து மகிழ்ந்திருக்கிறீர்கள் என்பதும் அவை தற்காலத்தில் புறக்கணிக்கப்படுவது கண்டு வேதனைப் படுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் நம் முன்னோர்கள் குளங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பது அவற்றைச் சுற்றி அவர்கள் கட்டிய அழகிய பெரும் கட்டிடங்கள் மூலம் தெரிகிறது. இணைப்புகளைப் பார்க்க.
    http://www.skyscrapercity.com/showthread.php?t=1085767
    http://www.jeyamohan.in/?p=24633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.