சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-9)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

செய்தியைக் கேட்டவுடன் மாமிக்கு முதலில் மங்கையின் நினைவு தான் முதலில் தோன்றியது. “கடவுளே! நல்லபடியா அவ பொழச்சு எழுந்து வருவான்னு நெனச்சிருக்கும் பொது இப்ப இப்படி இடியத் தூக்கித் தலையில போட்டுட்டியே? பச்சக் கொழந்தைங்கள வெச்சுண்டு நான் என்ன செய்யப் போறேன்? சாண் ஏறினா மொழம் சறுக்கறதே இந்தக் குடும்பத்துக்கு? ஏன் இப்படியெல்லாம் சோதிக்கிறாய் ஆண்டவா” என்று மனதுள் அரற்றியபடி வேறு ஒன்றும் தோன்றாமல் ப்ரியாவைப் பார்த்தாள். அவள் வேறு எங்கோ அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ப்ரியாவின் பார்வையைத் தொடர்ந்தவளுக்குத் தேள் கொட்டினாற்போல் அதிர்ச்சி. குழந்தைகள் இருவரும் எல்லா விஷயத்தையும் கேட்டபடி நின்றிருந்தனர்.

நிகில் தான் சுதாரித்துக் கொண்டு ப்ரியாவைக் கேள்வியால் தாக்கினான். “அத்தை! அப்பாவுக்கு என்ன? தயவு செஞ்சு கொஞ்சம் வெவரமா சொல்லுங்க அத்தை. எதானாலும் எங்கிட்ட சொல்லுங்க. ப்ளீஸ்! என்னால தாங்க முடியல்லே!” என்று கதறி விட்டான். ப்ரியா மாமியைக் கேள்வியாகப் பார்த்தாள். மாமியும் புரிந்து கொண்டு ” ப்ரியா, அவங்கிட்டச் சொல்லித்தான் ஆகணும். என்ன இருந்தாலும் இந்த வீட்டோட தலப் பிள்ள அவன். அவனுக்குத் தெரியாமே இருக்க வேண்டாம், நித்திலாவை நான் வெளியில கூட்டிண்டு போறேன், நீ அவங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடு” என்று கூறி விட்டு அழுகை வழியும் கண்களோடு கடைக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.

நிகிலிடம் எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தாள் ப்ரியா. “நிகில் உங்கப்பா நம்ம எல்லாரையும் விட்டுட்டுப் போயிட்டாருப்பா. அவர் போன விமானம் வெடிச்சு யாருமே பிழைக்கலையாம். உடலைக் கூட மீட்க முடியலயாம்” என்று சொல்லிக் கதறிக் கண்ணீர் விட்டாள். அவள் சுடிதார், முகம், துப்பட்டா எல்லாம் கண்ணீரால் நனைந்தது. நிகில் ஒன்றுமே பேசவில்லை. திடீரெனப் பேசும் சக்தியை இழந்து விட்டவனைப் போல வெறுமே நின்றான். கண்களும் வறண்டு கிடந்தன. ப்ரியாவுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க பயமாக இருந்தது. “டேய் நிகில்! அழுதுடுடா! உங்கப்பாவை நெனச்சு அழுதுடு! நீ இப்படி அமைதியா இருந்து என் தலையில கல்லைத்தூக்கிப் போட்டுடாதே. டேய் நிகில்” என்று கத்தியவளுக்குப் பதில் சொல்வது போல்

“அத்தை நீங்க சொல்றதெல்லாம் உண்மையா? அப்பா இனிமே திரும்பியே வரமாட்டாரா? இனிமே எங்கப்பாவை நான் பாக்கவே முடியாதா?” என்று கேட்டு விட்டு உடைந்து போய்க் கீழே உட்கார்ந்தவன் கண்களில் அருவியாகத் தண்ணீர். “நாம என்ன தப்புப் பண்ணினோம் அத்தை? நமக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது? கொஞ்சம் வசதியா வாழணும்னு நெனச்சது தப்பா? அதுக்கா இத்தனை பெரிய தண்டனை? ஐயோ! அப்பா! நீங்க ஏன் வெளி நாடு போனீங்க? இப்போ நான் என்ன பண்ணுவேன்?” புலம்பியவன் கண்களிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

மாமி தூங்கி விட்ட நித்திலாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். குழந்தையைக் கட்டிலில் விட்டவள் நேரே நிகிலிடம் வந்து “இதோ பாருடா கண்ணா! அப்பா உன்னைப் பெரிய மனுஷனாக்கிட்டுப் போயிட்டார். இனிமேதான் நாம தைரியமா இருக்கணும். ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும். என்ன நான் சொல்றது புரிஞ்சிதா?” என்று தைரியமாகப் பேச ஆரம்பித்தவள் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.

அழுது அரற்றி ஒருவாறு அவர்கள் அந்த செய்தியை கிரகித்துக்கொள்ள கிட்டத்தட்ட 2 மணி நேரம் பிடித்தது. முதலில் தேறியது நிகில் தான். “அத்தை! நாம பாட்டுக்கு இப்படி அழுதுட்டு இருக்கோமே அம்மாவுக்கு விஷயம் தெரியக்கூடாதுல்ல? டாக்டர் இப்போ எந்த அதிர்ச்சியான நியூசையும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல? அம்மாவை எப்படிச் சமாளிக்கறது?”

நிகிலின் அப்பட்டமான கேள்வி அவர்களை முகத்தில் அறைந்தது. இந்த விஷயத்தை எப்படிச் சமாளிப்பது? சிவநேசன் பற்றிய விஷயம் தெரிய வேண்டியது தான் மறு கணமே மங்கையும் அவன் சென்ற இடத்துக்கே போய் விடுவாள் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஏற்கனவே தகப்பனை இழந்து தவிக்கும் குழந்தைகள் தாயையும் இழக்க வேண்டி வரலாம். என்ன செய்வது என்று கூடி ஆலோசித்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் தெரிந்தது. அது விஷயத்தை மங்கையிடம் சொல்லாமல் மறைத்து விட வேண்டியது. அவளால் எப்போது எந்த அதிர்ச்சியையும் தாங்க முடியும் என்று டாக்டர் சொல்கிறாரோ அப்போது சொல்லிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

முடிவு செய்வது சுலபம், ஆனால் அதை நடைமுறைப் படுத்தும் போது என்னென்ன சோதனைகள் வந்தாலும் அவற்றைத் தாங்கித்தான் ஆக வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டார்கள்.

சிவநேசனின் அலுவலகத்திலிருந்து இரங்கல் தெரிவிக்க வந்து போனார்கள். அனைவருக்குமே அவர்கள் குடும்ப நிலைமை கண்ணீரை வரவழைத்தது. வந்திருந்த முதலாளி கிளம்பும் போது, ப்ரியாவையும் நிகிலையும் அழைத்து “நீங்க ரெண்டு பேருமே சின்னவங்க, உங்க கிட்ட இதையெல்லாம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுடுச்சு. உங்கப்பா எங்க கம்பெனிக்காக எவ்வளவோ உழைச்சிருக்காரு. இப்போக் கூட கம்பெனிக்காக வெளிநாடு போன இடத்துலதான் இப்படி ஒரு விபத்து. எங்களால கண்டிப்பா சிவநேசனைத் திருப்பித்தர முடியாது. ஆனா இந்தப் பணம் உங்க எதிர்காலத்துக்கு உதவும். இதை வெச்சிக்கோங்க” என்று ஒரு செக்கைக் கையில் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

மாமி அந்தப் பணத்தைப் பேங்கில் போட்டு வரும் வட்டியை எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னாள். ஆனால் அதில் ஒரு சிக்கல். பெரிய தொகைதான், ஆனால் வரும் வட்டி இவர்களுக்குப் போதாது. வெறுமே பேங்கில் போட்டு வைத்திருக்கலாம், பின்னால் யோசித்துக் கொள்ளலாம் என்று இவர்கள் எண்ணும் போதே, அதற்குச் செலவு வீட்டுச் சொந்தக்காரன் வடிவில் வந்தது.

சிவநேசன் இறந்து போன விஷயம் கேள்விப்பட்டு, இனிமேல் வாடகை எப்படிக் கொடுப்பார்கள்? என்று எண்ணி வீட்டுச் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யுமாறு கூறி விட்டார். அவர் கவலை அவருக்கு. இப்போது குறைந்த வாடகையில் வீடு மாறினால் மங்கைக்கு சந்தேகம் வரும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது. என்ன செய்வது என்று யோசித்த போது ப்ரியா ஒரு யோசனை சொன்னாள். “நாம இப்போ நமக்குக் கெடச்சிருக்கற பணத்துல பாதியை எடுத்து ஒரு வருஷ வாடகைன்னு ரசீது வாங்கிக்கிட்டு அந்த வீட்டுச் சொந்தக்காரர்ட்ட கொடுத்திடுவோம். அப்படிச் செஞ்சா மாசாமாசம் வாடகை குடுக்க வேண்டாம் இதே வீட்டுலேயும் நாம தங்கிக்கலாம்” என்றாள். அவள் யோசனை அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயல் படுத்தப்பட்டது. வீட்டு சொந்தக்காரரும் சம்மதித்து பணத்தை வாங்கிக் கொண்டு ரசீதைக் கொடுத்து விட்டார். அவருக்கென்ன? மொத்தமாகப் பணம் கிடைக்கும் போது வேண்டாமேன்றா சொல்லுவார்?

இதைத் தவிர மாதச் செலவுகள், மங்கையின் மருந்து மாத்திரைச் செலவுகள், நிகில் மற்றும் நித்திலாவின் ஸ்கூல் செலவு, சாப்பாட்டுச் செலவு என்று ஒவ்வொரு நாளைக்குமான பணத்தேவை இவர்களை மிரட்டியது. மங்கைக்கும் விஷயம் தெரிய வராமல் இத்தனைச் செலவுகளையும் எப்படிச் சமாளிக்கப் போகிறோம்! இந்தக் குடும்பம் என்னவாகும் போன்ற கேள்விகள் மூன்று பேரின் உள்ளத்தையும் நண்டாய் அரிக்க எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளறையில் நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் நித்திலா.

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது)

படத்திற்கு நன்றி:http://drunkdrivingisano-no.blogspot.in/2011/08/drunk-driving-is-no-no.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *