அவ்வை மகள்

கல்வி எனும் பெயரால் – ஒரு மாபெரும் மானுட வதை

குழந்தைகள் உடம்பில் நீரின் அளவு அதிகம் எனக் கண்டோம். குழந்தைகள் நன்கு வளர வேண்டுமென்றால், அவர்கள் போதுமான அளவு நீர் பருக வேண்டும் என்றும் கண்டோம்,

ஆனால், பள்ளிக்கூட நாட்களில், குழந்தைகள் போதுமான அளவு நீர் பருகுவதில்லை எனப் பலப்பல தகவல்கள் காட்டுகின்றன எனவும் கண்டோம். இந்நிலைக்கு முக்கியமான காரணம்: மிகப் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் குடிநீர் வசதி இல்லை என்பதே எனவும் கண்டோம்.

சில பள்ளிகளில் குடிநீர் வசதி இருப்பதாகச் சொல்லப் பட்டாலும், அவ்வாறான பள்ளிகள் பலவற்றில் குடிநீர் என்று சொல்லப்படுவதான நீர், மனிதர்கள் குடிக்கின்ற அருகதையில் இல்லை.

உண்மையில் நல்ல குடிநீர் இருக்கின்ற பள்ளிகள் மிகச் சொற்பமான எண்ணிக்கையிலேயேதான் உள்ளன. அந்தக் குறைவான எண்ணிக்கை பள்ளிகளிலும் கூட, குடிநீரானது பள்ளியில் ஒரே ஒரு இடத்தில் ஒரு மூலையில் இருக்கும். வகுப்பு நடக்கும்போது குழந்தைகளுக்குத் தாகம் எடுக்கும் என்றால் வகுப்பை விட்டு வெளியே சென்று தண்ணீர் அருந்த அவர்களை ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை என்ற நிலையே நிலவுகிறது. இடைவேளை நேரம் வரை அவர்கள் தாகத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

ஆக மொத்ததில், வெகு பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் குடிநீரைப் பள்ளிக்குச் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்கள் சுமந்து கொண்டு செல்லும் நீர் பெரும்பாலும் ஒரு புட்டியே. அது அவர்களது தேவைக்குப் போதாத அளவு மட்டுமே!

அந்தக் குறைந்த அளவேயான நீரைப் பள்ளிக்கூட நேரம் முழுவதும் நீட்டித்து வைத்துக் குடிக்க வேண்டுமென்கிற கட்டாய நிலை குழந்தைகளுக்கு உள்ளது. அது மட்டுமல்ல, உண்மையிலேயே அவர்களுக்குக் காட்டமாக தாகம் எடுக்கும் பல சமயங்களில் தமது சொந்த பாட்டிலில் அவர்கள் கொண்டுவந்த சொந்தத் தண்ணீரையும் கூட அவர்கள் பருக சில ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை – அல்லது – வகுப்பில் பாடவேலையின் நெருக்கடி தண்ணீர்த் தாகம் எனச் சொல்லவும் அனுமதி கேட்கவும் கூட விடாததாய் இருக்கும்.

இவ்வாறுதான் குழந்தைகள் தாகத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கி, தாக்காட்டி – தாக்காட்டி – மிகக் குறைந்த அளவே நீர்ப்பருகும் நிர்ப்பந்ததைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கின்றன.

குழந்தைகளின் இன்றைய உணவுகள் கூட நீரை அதிகம் கொண்டிருக்கவில்லை என்பது இன்னுமொரு காரணம். பொதுவாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் அதிக நீர்ச்சத்து இருக்கவேண்டும் என்பது அடிப்படை – பத்து வயது வரை, குழந்தைகளுக்கு உணவின் மூலமாக அதிக நீர் சேர வேண்டும் எனத் தொன்று தொட்டு ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

நீர் சேர்ந்த திரவ வகை உணவுகளும், ஆவியில் வேக வைத்த உணவு வகைகளும் மட்டுமே முதலில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் – பால், கஞ்சி, கூழ், இட்டிலி, இடியாப்பம், ரசம் சாதம், கடைந்த பருப்பிட்டுப் பிசைந்த பருப்பு சாதம், புத்தம்புதுத் தயிரைக் கடைந்தெடுத்துப் பிசைந்த சாதம், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – பொங்கல்- இளநீர், பழங்கள் – எனப்படிப்படியாக மெனு வளரும். ஆரம்ப நாட்களில், சிற்றுண்டிகளுக்குத் தொட்டுக் கொள்ள சாம்பாருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்; சட்டினியையும் கூட நீர்விட்டு இளக்கியே வழங்குவர், சிறு குழந்தைகளுக்கு டிபனுக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடியைக் கண்ணில் சுலபமாகக் காட்ட மாட்டார்கள்.

குழந்தை வளர வளரக் கொஞ்சம் உலர்த் தீனிகளையும், கடினத் தின்பண்டங்களையும் சேர்ப்பர். இவ்வாறான உலர்த் தீனிகளையும், கடினத் தின்பண்டங்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் முறையே அலாதியானது.

குழந்தைக்குப் பல் முளைக்க ஆரம்பிக்கும்போது சூப்பான் என்று அரிசிமாவில் செய்த கெட்டியான விரல் போன்ற வடிவம் கொண்ட தின்பண்டத்தைக் குழந்தைக்குத் தருவர். வாயில் ஜொள் வடிய வடிய அந்தச் சூப்பானை, குழந்தை தனது முளைக்கும் பல்லால் கடித்துக் கடித்துப் பயிற்சி செய்ய, நீர் சேர்ந்த ஆகாரம் நிறைய புகட்ட, அப்போது, ஈறு இயல்பாய் விரிந்து ஆரோக்கியமாய்ப் பல் முளைக்கும்.

முதலில் கீழ்ப்பல் முளைக்க, அடுத்து மேல்பல் முளைக்க எனக் குழந்தைக்குப் பல் முளைத்த பிறகு, விதவிதமான உலர்த் தீனிகளை, படிப்படியாகச் சேர்ப்பர்.

இந்த உலர்த்தீனி வகைகளைச் சேர்ப்பதன் முக்கிய நோக்கம், வாய்க்கு வேலை கொடுத்து, வாயில் அமைந்துள்ள மூன்று ஜோடி பிரதான உமிழ்நீர்ச் சுரப்பிகளையும், 600 நுண்ணிய உமிழ்நீர்ச் சுரப்பிகளையும் தூண்டி விட்டு, உமிழ் நீரில் உள்ள அமைலேஸ் எனப்படும் என்சைமின் உதவியுடன் ஜீரண சக்தியை அதிகரித்து, பலமான உணவு – பலமான உடலை உருவாக்குமாறு செய்வதுதான்.

இவ்வாறு வாயில் இட்டு, பற்களுக்கு இடையே, எந்திர அரவையாக, மெனக்கிட்டுக் கடித்து – உடைத்துப் பொடித்து – உமிழ் நீர் சுரந்து – ஈர மாவாகிப் பதம் அடைந்து அதன் பின்பு மட்டுமே முழுச் சுவையும் தரக்கூடிய – தினுசுகளான சீடை, ஓட்டடை, பொரிவிளங்காய், வறுத்த பட்டாணி, போன்றவற்றை மட்டுமே அவர்கள் குழந்தைகளுக்காக அளித்தனர். இவ்வகை உணவுப்பொருட்களின் வேலையே தாகத்தை உண்டாகுவதுதான்.

ஆனால் காலப் போக்கில், குழந்தைகள் தம் கல்விக்காக அதிக நேரம் வீட்டை விட்டு வெளியே இருக்க வேண்டிய சூழலாலும், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகும் சூழலாலும் அவர்களுக்குத் தரப்படும் உணவின் உறுதியும் தரமும் குறைந்தது. கடைகளில் விற்கப்படும் உறுதியற்ற உணவுப் பொருட்கள் உள்ளே போகலாயின. அம்மட்டோ, குழந்தைகள், பள்ளியை விட்டுப் போகும் போதும், ஏன் வீட்டிற்குப் போன பின்பும் கூட, பலவிதமான – சோடா – இரசாயனப் பொருட்கள் கலந்த வெவ்வேறு விதமான பானங்களைப் பருகத் தொடங்கினர். விளைவு – தூய்மையான நீரைப் பருகி – அதனால்- விளைய வேண்டிய நன்மைகள் குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை.

உடலில் உள்ள நீரின் பெரும்பகுதி உடலைச் சுத்தம் செய்யும் துப்புரவுச் சுழற்சியில் உலா வருகிறது எனப் பார்த்தோம். மலம், சிறுநீர், வியர்வை ஆகியன உடலில் உள்ள உபரி அழுக்குகளை – உப்புக்களை – எச்சங்களை வெளியேற்றுபவை. போதுமான நீர் இருந்தால்தான் இயல்பாக மலஜலம் வெளியேறும். ஓடியாடி விளையாடினால்தான் தோலின் துவாரங்கள் வழியே உப்பும் மாசுக்களும் வெளியேறிக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க முடியும். கல்விக்கூடங்களில், குழந்தைகளுக்கு விளையாட்டு என்பது இல்லாதாகிப் போய்விட்டதால் குழந்தைகள் இயல்பாக வியர்க்க முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெப்ப மண்டலப் பிரதேசமான நம் நாட்டில், வெப்ப அலையில், அநியாயமாக வியர்க்கிறார்கள்.

காற்று இல்லாத நெருக்கடி வாழ்க்கையில், புழுங்கிப் புழுங்கி ஆரோக்கியம் இல்லாத வகையில் – செயற்கை இழை உடுப்பாலும் – இறுக்கமான் சாக்ஸ் மற்றும் காலணியாலும் அவர்கள் புழுங்கிப் போகின்றனர். இதைச் சென்ற பகுதிகளில் விவாதித்தோம்.

விளையாடுவதால் வியர்ப்பது ஆரோக்கியம் ஆவது என்றால் – வெப்பத்தால் வியர்ப்பது – உடலுக்குத் தீங்கு விளைவிப்பது. வெளி உறுப்புக்கள் மட்டுமன்றி – உள் உறுப்புக்களும் மெல்ல மெல்ல நீர் வற்றி – வெம்பிப் பலவீனமடையும் ஆபத்தான நிகழ்வு இது.

போதுமான நீர் பருகாது – செரியாது போகிற உணவு வேறு உடலில் அப்படியே படிந்து போகிறது – உடல் பலமில்லாமல் சாக்கு மூட்டை போலப் பருமனாகிப் போகிற பிரச்சனை நிறைய குழந்தைகளுக்கு!!

கல்விக்கூடங்களின் முறையற்ற ஏற்பாடுகளால் – கல்வியால் – குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிற நீர்ப் பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு ஏற்படுகிற பிரச்சனைகள் பின்வருமாறு:

(1) தலைவலி
(2)பார்வைக் கோளாறு
(3)கவனக்குறைவு
(4)எரிச்சல் உணர்ச்சி/கோபம்
(5)மலச்சிக்கல்/மூலவியாதி
(6)சிறு நீர்ப் புறவழிப் புண்கள்
(7)சிறுநீரகக் கற்கள்
(8)தோல் அழற்சி
(9)அக்குள் மற்றும் மறையுறுப்புத் தொற்றுகள்
(10)சர்க்கரை வியாதி
(11)நுரையீரல் புண்கள்/மூக்கில் இரத்தம் வழிதல்

இவற்றை அப்படியே விட்டு விடுகிற சூழல்களே பெரும்பாலான குழந்தைகளின் இல்லங்களிலும் என்பதால், இந்தத் தொடக்க காலக் கோளாறுகள் முற்றி – இரத்த அழுத்தம், இதயக் கோளாறு, நரம்பு மண்டலத் தளர்ச்சி ஆகியன விளைகின்றன.

பல பெற்றோர்கள், குழந்தைகளுக்கு எப்படியோ சமாளித்துப் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து, கல்விக்கூடங்கள் – டியூஷன் சென்டர் – ஆகியன போய் வரும் வழியில் நீர் வாங்கி அருந்தச் சொல்கிறார்கள் – இது ஒரு நல்ல யோசனை தான் – நல்ல ஏற்பாடுதான் என்றாலும் – அவ்வாறு விற்கப்படும் தண்ணீர்ப் பாக்கெட்டுகள் – தண்ணீர்ப் புட்டிகள் – பாதுகாப்பற்ற நீரையே – பல சமயங்களில் கொண்டுள்ளன.

இதனால், காசைக் கொடுத்து கர்மவினையை வாங்கி – பல வியாதிகளுக்கும் குழந்தைகள் இலக்காகின்றனர்.

பாதுகாப்பான குடிநீர் தந்து குழந்தைகளின் ஆரோக்யத்தைக் காக்காமல் அவர்களைப் “படி! படி!” என்று வறுத்து எடுக்கும் மூர்க்கத்தனமும், அராஜகமும் கல்விக் கூடங்களை விட்டு அகன்றாலொழிய, நம் குழந்தைகள் நல்ல எதிர்காலச் சந்ததிகளாக உருவாவது கடினமே. கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் இந்த அறிவீனம் பொசுக்கப் படவேண்டும்.

உலகு வியக்கும் கல்வித் தத்துவ ஞானியாகிய விவேகானந்தர், நம் இளைஞர்கள் எக்கால் (steel) ஆன உடலையும், வைரத்தால் ஆன மனதையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

போகிற போக்கைப் பார்த்தால் – நம் குழந்தைகள் – நீர்ச் சத்து இன்றி – வெந்து வறண்டு – உலர்ந்து – சுருங்கி – சுண்ணாம்புக் கால்வாயில் சுட்ட கதையாக – உருமாறித் தேய்ந்து போய் விடுவார்களோ என்று தோன்றுகிறது.

நம் கண்களில் வெள்ளத்தை வரவழைக்கும் இந்தக் குடிநீர்ப் பிரச்சனை சமுதாய அவலம் – கல்வி எனும் பெயரால் – ஒரு மாபெரும் மானுட வதை.

 

படத்திற்கு நன்றி: http://www.madeformums.com/toddler/children-who-drink-water-do-better-at-school/13537.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செரியாத கல்வியின் சுமை-19

  1. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை 
    கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ.”  என்றான் பாரதி.

    ஆனால், தண்ணீரே தராமல் நம் பிஞ்சுகளை கருக வைக்கும் கொடுமையை கண்ணீரோடு வடித்துள்ளீர்கள். இந்தக் கட்டுரைத் தொகுப்பு, சரியானவர்களின் பார்வையை சென்றடைய வேண்டும் என்பது என் அவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *