சில்லறை விஷயம்தான்.. ஆனால்…

திவாகர்

சென்ற வியாழனன்று ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் பேச்சை இங்கே சிலர் கேட்டிருக்கலாம். ஏற்கனவே இந்தியாவெங்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ஷாப்பிங் மிக அதிக அளவில் விரிவுபடுத்தப்படுமாம். அதாவது 1 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்னமும் முதல் போட்டு மூலை முடுக்கெல்லாம் ரிலையன்ஸ் ஷாப்பிங் திறந்து வைக்கப்போகிறாராம். இதனால் 25000 பேருக்கு டைரக்ட் வேலையும் 25000 பேருக்கு இண்டைரெக்ட் வேலையும் கொடுக்கப்போகிறாராம். லாபத்தையும் இரண்டு மடங்கு அதிகம் ஆக்கப்போகிறாராம். இது ரிலையன்ஸ் பொதுக்குழு கூட்டம் என்பதனால் வந்திருந்த ரிலையன்ஸ் பங்குதாரரெல்லாம் கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த ஆனந்தமான நிகழ்ச்சியை அன்று முழுவதும் எல்லா தொல்லைக்காட்சிகளும் கட்சி பேதமில்லாமல் காட்டின. (சாரி, தொலைக்காட்சிகளும் காட்சி பேதமில்லாமல் காட்டின)

ஆனால் உண்மையில் இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் பலன் உண்டா.. இல்லையென்றால் அப்படி என்ன கஷ்டங்கள்?.. என்ன பெரிய கஷ்டம்? இந்த குளிர்சாதன ஷோ ரூம்களில் பொதுவாக சின்னக் கடைகளில் கிடைக்கும் எல்லாச் சாமான்களும் கிடைக்கின்றனவே..இது முற்போக்கான வசதியை நமக்கெல்லாம் கொடுக்கிறது அல்லவா.. வேகாத வெய்யிலில் வேர்த்துக் கொண்டே காய்கறி பேரம் பேசி வாங்குவதை விட, இதோ இங்கே குளிர்சாதன ஷோ ரூம்களில் ஹாயாக நாமே பேக் செய்யப்பட்ட காய்கறியை அப்படியே எடுத்தோமா, கேட்ட (போட்ட) விலையை கொடுத்தோமா.. போய்க்கொண்டே இருந்தோமா..

ஆஹா.. நினைத்தாலே குளிரும் இந்த சுகமான நிலையில்தான் திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் ‘தொண்டு செய்தால் வேலை இல்லை’ எனும் கட்டுரையை வல்லமையில் இந்த வாரம் படிக்க நேர்ந்தது. https://www.vallamai.com/paragraphs/21639/

இந்த சங்கிலித் தொடர் ஷோ ரோம்களைப் பற்றி விரிவான கட்டுரை இது. எடுத்ததுக்கெல்லாம் ’அமெரிக்காவைப் போல வருமா.. அமெரிக்கா என்றால் சொர்க்கமன்றோ, எப்போது இந்த பாழும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளப்போகிறதோ..’ என்று அடிக்கடி அமெரிக்கப் புராணம் படிப்பவர்க்கெல்லாம் இந்தக் கட்டுரையின் உண்மை சுடலாம்தான். ஆனால் தற்சமயம் அமெரிக்கா உள்ள நியாயமான, யதார்த்தமான நிலையை இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் உணரவேண்டும் என்ற சமூக நல்நோக்கோடு எழுதப்பட்ட கட்டுரையாகத்தான் எனக்குப் பட்டது.. அமெரிக்காவை ஆகாயத்தில் வைத்துப் போற்றுவோருக்குக் கூட இது ஒரு பாடம்தான்.

இவர் எங்கேயோ ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டோ, இணையத் தகவல்களை எடுத்துக்கொண்டோ இந்தக் கட்டுரையை எழுதவில்லை என்பதை இக்கட்டுரையைப் படித்தவர் அறிவர். பல இடங்களில், அதுவும் பலரும் கூடும் டிபார்ட்மெண்டல் சங்கிலித் தொடர்களில் பகுதிநேரப் பணி செய்த அனுபவம் உள்ளவர். ஒரு சம்பவத்தை நேரில் கண்டது போல இவர் எழுதி இருப்பதால் அந்த சம்பவத்தின் உண்மையான நிலவரத்தை நாம் இங்கு உணரவேண்டும்.

முக்கியமாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இந்த சங்கிலித் தொடர் டிபார்ட்மெண்ட் ‘ஷோரூம்’ (கடைகள் என்று எழுதக்கூடாதாம்) ஏராளமாக வந்து விட்ட நிலையில் நாம் மிக எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். ஏற்கனவே இங்கு சில்லறைக் கடைகள் பல இந்த சங்கிலித் தொடரின் ஆதிக்கத்தில் கரைந்தும் காணாமலும் போய்விட்ட நிலையில் பொதுமக்கள் இனி தம் தேவைகளுக்கு இந்த சங்கிலித் தொடரே கதி எனும் நிலைமைக்கும் வந்துவிட்டார்கள்தான்.

நான்கு பேர் உள்ள நடுத்தரக் குடும்பங்களில் அத்தியாவசிய மளிகைச் செல்வு என்பது இரண்டாயிரம் ரூபாய்க்குள் இரண்டு வருடம் முன்பு வரை பெருகியது என்றால் தற்சமயம் அது நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் அதிகமாகி விட்டதையும், எல்லோருமே அறிவோம். தற்போதைய நாட்டின் பொருளாதார வீழ்ச்சியோ அதனால் ஏற்படும் விலைவாசி ஏற்றமோ மட்டுமே இதற்கு காரணம் அல்லவென்பதும், ஒரு போலி ஏற்றத்தை ஒரு சில அத்தியாவசியப் பொருட்கள் மீது அரசாங்கத்தின் மறைமுக உதவியுடனே ஏற்றப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையையும், கூடவே தேவையே இல்லாத அலங்கார-ஆடம்பரப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்கள் வரிசையில் கட்டாயப்படுத்தி வைத்து நம் தலைமீது கட்டி, இதனால் சாதாரண மக்களை பெரும் கடனாளிகளாக உருவாக்கிவிட்டார்கள்.

அதுவும் கடன் அட்டை சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் நம் வாங்கும் சக்தியும் அதிகமாகிவிட்டதுதான். இந்த வாங்கு சக்தி அதிமானது கூட ஒரு போலி நிலைதான் என்பது உண்மையான வணிகக் கணிப்பாளருக்குத் தெரியும். இந்தக் கடன் அட்டையைப் பற்றிய திருமதி நாகேஸ்வரியின் கணிப்பு மிகச் சரியானது என்பதை நீங்கள் அவர் கட்டுரையின் இந்தப் பகுதியைப் படித்தாலே உணர்ந்து கொள்வீர்கள்

”எப்போதுமே வாடிக்கையாளர்களை கடன் அட்டை வாங்கவைப்பதற்கு ஏமாற்ற வேண்டியிருக்கும். இம்மாதிரி சமயங்களில் இன்னும் அதிகமாக ஏமாற்ற வேண்டியிருக்கும். இப்படிச் செய்வது சரியா தவறா என்றெல்லாம் விற்பனையாளர்களை யோசிக்கவிட மாட்டார்கள். அதிகப் பணம் என்னும் ஆசையைக் காட்டி விற்கத் தூண்டுவார்கள்.

ஒவ்வொரு கடன் அட்டை விற்கும்போதும் அதை வைத்துச் சாமான்கள் வாங்கினால் எப்போது அவற்றிற்குரிய பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும், கட்டத் தவறினால் எவ்வளவு வட்டி வசூலிப்பார்கள் என்பது பற்றியெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு விளக்க வேண்டும். இதற்குச் சட்டமே இருக்கிறது. ஆனால் கடைகளும் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; விற்பனையாளர்களும் சிந்திப்பதில்லை. பல சமயங்களில் கடன் அட்டை மூலம் சாமான்கள் வாங்கினால் கொஞ்சம் விலை குறைவாக இருக்கும். இந்தச் சலுகையைக் காட்டியே வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்க வைத்துவிடுவார்கள். கடையைப் பொறுத்தவரை எப்படியாவது சாமான்கள் விற்றால் சரி; விற்பனையாளர்களைப் பொறுத்தவரை சம்பளத்தோடு கூடக் கொஞ்சம் பணம் வந்தால் சரி.

கடன் அட்டை விற்பனை மூலம் வருமானத்தைக் கூட்டிக்கொள்வது ஒரு வகை. கடையில் அப்போது ஸ்டாக்கில் இல்லாத சாமான்களை இன்டெர்நெட் மூலம் ஆர்டர் செய்து சாமான்களை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். அதற்குக் கடையிலேயே இருக்கும் கணினிகளை உபயோகிக்கலாம். எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கணினியை உபயோகிக்கத் தெரியாது. கடையில் இருக்கும் விற்பனையாளர்கள் கணினி மூலம் ஆர்டர் செய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவினால் அதற்கு அந்தப் பொருளின் விலையில் ஒரு சதவிகிதம் கமிஷன் விற்பனையாளர்களுக்கு உண்டு.”

தன்னார்வத் தொண்டுகள் அமெரிக்காவில் எப்படி இன்றைக்கு மதிக்கப்படுகின்றன என்பதையும் தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா முழுதுமே முதலாளிகளின் முக்கியக் கொள்கையே பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில்தான் இருக்கும் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதும் அருமை.

கார்ப்பரேட்டுகள் நிறைந்த அமெரிக்காவில் மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடத்தும் ஜனநாயகம் என்ற பெயரில் இப்போது நடப்பது கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடத்தும் கார்ப்பரேட் ஆட்சியே .(Corporatocracy) என்று சொல்லலாம். இந்த கார்ப்பரேட்டுகள் தங்கள் பணப் பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றன.

இது முத்தாய்ப்பான முடிவு. மறுபடியும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி பேச்சு ஞாபகம் வருகிறது. 1000 கோடி ரூபாய் மூலதனம் இதற்காக போட்டு சங்கிலித் தொடர்களை விரிவாக்கப்போகிறேன் என்று சொன்னதால் அங்குள்ளோர் யாரும் கைதட்டவில்லை என்பதும், இரண்டு மடங்கு லாபத்தைக் கூட்டப்போகிறேன் எனச் சொல்லி ரிலையன்ஸ் பங்குதாரர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததால்தான் அந்த கை தட்டல் என்பதையும் உணர்கிறேன்.

ஆகா.. ஒரு சின்னஞ்சிறு கூட்டத்தின் லாபங்களுக்காக எத்தனை பெரிய இழப்புகளை இந்தத் தேசம் சந்திக்கின்றது என்ற எண்ணம் இந்தக் கட்டுரையைப் படித்ததும் எழுந்தது. நல்லதொரு பாடத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து மற்றவர்களும் இந்த உண்மையை உணரவேண்டும் என்று ஒரு அர்த்தமுள்ள கட்டுரையைப் படைத்த திருமதி நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராக அறிவிப்பதில் எனக்கு பரிபூரண மகிழ்ச்சி. நல்லவை எங்கிருந்தாலும் அறியப்படவேண்டும் என்பதை உணர்ந்து, எல்லோரும் இந்த நீண்ட கட்டுரையை ஒருமுறை படித்து மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்..

’நம்ம பையனுக்கு கவலை ஒண்ணும் இல்லே..சார், பொட்டிக் கடை வைத்தாவது பிழைத்துக் கொள்வான்’ என இனி எந்தப் பெற்றோரும் ஆறுதல் அடையமுடியாது.. சில்லறை விஷயத்தில் எத்தனையோ கோடிகள் புரளுகிறது என்ற உண்மையைக் கண்டு கொண்ட கார்ப்பொரேட்டுகள் வைக்கும் ’ஷோ ரூம்களில் வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வான்’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்…

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “வல்லமையாளர்!

  1. மிக நல்ல தேர்வு. நாகேஸ்வரி அண்ணாமலை தொடும் கருப்பொருள்கள் அனைத்தும் சமூக நோக்குடனே இருக்கும். எல்லோரும் புகழும் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவதில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு கட்டுரையையும் அர்ப்பணிப்பு உணர்வுடன், தொழில் நேர்த்தியுடன், எளிமையுடன், கூர்மையுடன் படைத்து வருகிறார். அவர் வல்லமையாளர் விருது பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  2. மனம் நிறை நல்வாழ்த்துக்கள்,  நாகேஸ்வரி அம்மா. தொடரட்டும் உங்கள் எழுத்துப் 
    பணி! 
    அன்புடன் 
    இளங்கோ

  3. சிறப்பு! சிறப்பு !! சிறப்பு !!!
    பாராட்டுக்கள்.
    தங்களின் மகத்தான எழுத்துப் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.