இலக்கியம்கவிதைகள்

உனக்கான மலர்

 

 

கவிநயா

தாகூரின் ‘கீதாஞ்சலி’யில் உள்ள ‘flower’ என்ற கவிதையின் தமிழாக்கம்.

சின்னஞ் சிறு மலராய் நான்
இதழ்கள் விரித்துச் சிரிக்கின்றேன்;
தாமதமின்றி உடனே நீ
பறித்துச் சூடிக் கொள்ளாயோ,
நான் வாடி மண்ணில் வீழும் முன்னே?

உன் மாலை தன்னில் ஓர் மலராகும்
பேறு எனக்கிலை என்றாலும்
உன் விரல்களால் என்னைத் தொட்டுப் பறித்து,
அந்த வலியைத் தந்தேனும்
எனக்குப் பெருமை சேர்த்திடுவாய்!
நாளிது ஓடி முடிந்திடும் முன்னே…
நானுனைச் சேரும் காலம் கடந்திடும் முன்னே…

இந்த மலரின் நிறம் அப்படியொன்றும் ஆழமில்லை
இதன் மணமும் மனதை மயக்குவதாய் இல்லை
இருப்பினும்
உன் சேவைக்கென இதை எடுத்துக் கொள்!
காலம் இருக்கையிலேயே பறித்துக் கொள்!

 

Original in English:

Pluck this little flower and take it, delay not! I fear lest it
droop and drop into the dust.

I may not find a place in thy garland, but honour it with a touch of
pain from thy hand and pluck it. I fear lest the day end before I am
aware, and the time of offering go by.

Though its colour be not deep and its smell be faint, use this flower
in thy service and pluck it while there is time.

படத்திற்கு நன்றி:

http://www.flowerstore.com/

Print Friendly, PDF & Email
Share

Comments (9)

 1. Avatar

  அன்பின் கவிநயா,
  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இருப்பினும் ஒரு சிறிய கருத்து. இந்தக் கவிதை, ஒரு மலர் தன்னைப் பற்றி பாடுவதாக எழுதப்பட்டதல்ல என்றெண்ணுகிறேன். மலரைப் பற்றி பிறிதொருவர் ( தாகூர்) பாடுவதாக எழுதப்பட்டதென்று எண்ணுகிறேன். இன்னும் யோசித்தால், மலருக்கு சொல்வது போல், வாழ்வில் தவறவிடக் கூடாத பல விஷயங்களுக்காக எழுதப் பட்ட கவிதையென்றும் எண்ணலாம்.

 2. Avatar

  அதே போல ஆங்கில மூலம் என்று தாங்கள் தந்திருக்கும் வரிகளில் ஒரு சிறு தவறு என்று எண்ணுகிறேன். “I may not find
  ” என்பதற்குப் பதிலாக “It may not find” என்று வந்திருக்க வேண்டுமோ?

 3. Avatar

  கருத்துக்கு நன்றி, திரு. இளங்கோ. ஆங்கில வடிவில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் என்னிடமுள்ள புத்தகத்திலும், இணையத்திலும், ஒரே மாதிரிதான் இருக்கிறது.

  கீதாஞ்சலி கவிதைகள் இறைவனைத் தேடி, இறைவனுக்காக ஏங்குவதாக அமைந்தவை என்பதே என் புரிதல். “I” என்று வருவதால்தான் என் மொழியாக்கமும் அவ்விதமே அமைந்திருக்கிறது. அத்துடன் பொதுவாகவே, கவிதைகளுக்கு அவரவர் அனுபவத்திற்கும், மன நிலைக்கும் ஏற்ப புரிதல்களும் வேறுபடும். ஆங்கிலத்தில் சொல்வதானால், interpretation would differ from person to person. உதாரணத்திற்கு, பேச்சாளர்கள் இலக்கியத்தில் ஒரு வரியை வைத்துக் கொண்டு வித விதமாகப் பொருள் சொல்வதை நீங்களும் அறிவீர்கள். எழுதியவரே வந்து, ‘நான் இப்படித்தான் நினைத்து எழுதினேன்’, என்று சொன்னால்தான் உண்டு.

  நான் எழுதியதே சரி என்று சொல்ல வரவில்லை; எனக்குப் புரிந்த அளவில், என் சிற்றறிவிற்கு எட்டிய அளவில் எழுதி இருக்கிறேன், அவ்வளவே. வாசித்தமைக்கு நன்றிகள் பல.

 4. Avatar

  தமிழில் எழுதுவோர் எண்ணிக்கை ஏராளம் என்றாலும் பிறமொழி ஆக்கங்களை மொழி பெயர்க்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை மிக குறைவு.. தொடரட்டும் உங்கள் முயற்சி

 5. Avatar

  ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி திரு.பாரதிமோகன் 🙂

 6. Avatar

  திரு.இளங்கோ அவர்களுக்கு: மறுபடியும் இன்னுமொரு புத்தகத்தில் பார்த்த போது, நீங்கள் சொன்னபடி ‘It’ என்று இருக்கிறது. அதனால் எது சரி என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. அடுத்த முறை ஆங்கில மூலத்தை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்த பிறகே எடுத்துக் கொள்வேன்.

 7. Avatar

  தங்கள் விளக்கத்துக்கு நன்றி கவிநயா. தாங்கள் சொல்வது போலஒரு கவிதைக்கு அவரவர்க்கு விளங்கியது போலத் தான் எழுத முடியும் என்பது உண்மைதான். ஆனாலும், தவறான பதிப்பில், மூலம் படிக்கப்பட்டிருக்கலாமோ என்ற ஐயத்தில் அவ்வாறு கூறியிருந்தேன். தங்களுடைய மொழி மாற்றத்தில் குறை காணவில்லை. இணையத்தில் பெரும்பான்மையான பதிவுகளில், தாங்கள் சொல்லியது போல் தான் இருக்கிறது என்பது உண்மை. ஆனால், ஒரு இடத்தில் ( Book published by Branden Publishing Co – Original Translation by Rabindranath Tagore from Bengali with an introduction by William Butler yeats – Page 15 ) , “It may not find” என்றிருக்கிறது. இதைப் பற்றி தாங்கள் மேலும் ஆய்ந்து விளக்கினால் நலம்.
  நல்ல பிறமொழிக் கவிதைகள் தமிழில் மொழி மாற்றம் செய்ய்யப்பட வேண்டும் என்ற தங்கள் முயற்சியைப் போலவே, இணையத்தில் தவறாக ஒரு மொழி மாற்றம் பதிவு செய்யப் பட்டு விடக் கூடாது என்ற அக்கறையில் எழுந்த எண்ணம் தான் அது. ஆகையால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். மற்றபடி தங்கள் முயற்சிக்கு என் நல்வாழ்த்துக்கள்.

  http://books.google.co.in/books?id=XpgKk24qYW8C&pg=PA15&lpg=PA15&dq=It+may+not+find+a+place+in+thy+garland&source=bl&ots=DxAfv5moud&sig=6vQ1ExJw968YZmDln9G7A6A8BVk&hl=en&sa=X&ei=NIrVT42mGcjmrAeL6Kz8Dw&ved=0CGUQ6AEwCA#v=onepage&q=It%20may%20not%20find%20a%20place%20in%20thy%20garland&f=false

 8. Avatar

  அன்பினிய கவிநயா அவர்களே !
  மிகவும் அருமையான மொழியாக்கம். அத்துடன் உங்களுக்கும் தம்பி இளங்கோவிற்கும் இடையே நடந்த கருத்தாடல் உங்கள் இருவரினதும் இலக்கிய நாகரீக முதிர்ச்சியில் பல முன்னோடி எழுத்தாளர்களுக்கே ஓர் முன்னுதாரணமாய் இருக்கிறது. தொடர்ந்து பல படையுங்கள். அன்பான வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி சக்திதாசன்

 9. Avatar

  அன்பினிய சக்தி! உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி! 🙂 வாசித்தமைக்கும், உற்சாகம் அளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கும், மிகவும் நன்றி!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க