உறவேல் ஒழிக்க ஒழியாது! (பகுதி-3)
ராமஸ்வாமி ஸம்பத்
நாம் தென்னக வரலாற்று ஏடுகளைச் சற்றுப் புரட்டிப்பார்ப்பது இக்கதையின் போக்கினைப் புரிந்து கொள்ள உதவும். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி’ என்று பெயர் பெற்ற தமிழினம் வளம் பொருந்திய தென் புலத்தில் கூடியிருந்து குளிர்ந்து வாழ்ந்து வந்தது வரலாற்று வல்லுனர்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். ஆதி சிவன் பெற்றெடுத்து அகத்தியனார் பாலூட்டி போதித்த முத்தமிழினை முதல், இடை, கடைச் சங்கங்கள் மூலம் வளர்த்தனர் பாண்டிய மன்னர்கள் [மிகவும் பண்டைய அரசர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பாண்டியர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர்].
முதல் இடைச் சங்கங்கள் தழைத்த ’லெமூரியா’ என்றும் ‘குமரிக்கண்டம்’ (தற்போது உள்ள குமரி முனைக்குத் தெற்கே இருந்த மாபெரும் நிலப்பரப்பு) என்றும் வரலாற்றினில் கூறப்படுகிற தென் கண்டத்தினைக் (Gondwanaland) கடல் கொண்ட பின், பாண்டிய மன்னர்கள் வடக்கே பெயர்ந்து சேர சோழ மாநிலப் பகுதிகளை ஆக்ரமித்து ’நான்மாடக்கூடல்’ என்று போற்றப்படும் மதுரையைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்தனர். [முதற் சங்கக் காலத்தில் அவர்கள் ராஜதானி ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று யானை கட்டிப் போரடித்த’ அழகான தென் மதுரையாகும். அதனைக்கடல் கொண்ட பின் அவர்கள் தலைநகரைக் கபாடபுரம் என்ற நகருக்கு மாற்றி அங்கு இடைச்சங்கத்தினை அமைத்தனர். அப்பகுதியையும் கடல் கொண்டு விட்டது.]
மதுரையம்பதியில் கடைச்சங்கத்தை அமைத்து, தமிழைப் பேணி வளர்த்ததோடு, பாண்டிய மன்னர்கள் தங்கள் குடிமக்களுக்கு ஒரு நல்லாட்சியையும் நல்கினர். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் தத்தம் ஆட்சித்திறனோடு மட்டுமன்றி, தங்கள் புஜபல பராக்கிரமத்தாலும் வடபுலம் மற்றும் இலங்கை, மானக்கவாரம், சாவகம், ஸ்ரீவிஜயம், கடாரம் போன்ற கீழை நாடுகளையும் வென்று தமிழர்களின் புகழைப் பரப்பினர். இவர்களுக்குப் பின் வந்த பல்லவர்களும் செந்தமிழோடு வடமொழியையும் தழைக்கச் செய்தனர்.
இம்மன்னர்கள் தங்களுக்குள் அடிக்கடி போர் புரிய நேர்ந்தாலும் தமிழுக்கும் தங்கள் சநாதன அகச்சமயங்களான சைவத்திற்கும் வைணவத்திற்கும் சேவை செய்வதில் எள்ளளவும் சளைத்தவர்கள் அல்ல. அதே போல் புறச்சமயங்களான பெளத்தம், சமணம் ஆகியவற்றிற்கும் அவர்கள் புகலிடம் அளித்து வளர்ச்சி பெற உதவி அளித்தனர்.
இப்படி ஒரு பொற்காலம் தென்புலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த தருணத்தில், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு அளவில் எங்கிருந்தோ வந்த களப்பிரர் என்ற முரட்டுச் சாதியினர் மூவேந்தர்களையும் தொண்டை நாட்டுப் பல்லவர்களையும் மையத்து நாட்டினை ஆண்டு வந்த சாளுக்கியர்களையும் தோற்கடித்துத் தென்னகத்தை ஆக்ரமித்து அவர்களது பாலி மொழியை அரசாங்க மொழியாக்கி, சமண, பெளத்த மதங்களை அரச மதங்களாக்கி, தமிழையும் சநாதனச் சமயங்களையும் நசுக்கி வேரோடு கிள்ளியெறிய முற்பட்டனர். இத்தகைய அராஜகத்தினால் பல தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகள் காணாமற்போயின. தென்னக வரலாற்று வல்லுனர்களான K.A. நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவப் பண்டாரத்தார், நா. சுப்ரமணியன், P.T. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் முதலானோர் களப்பிரர் ஆண்ட காலத்தினை தமிழகத்தின் ‘இருண்ட காலம்’ என்றே குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலை கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்துக்கு நீடித்தது. களப்பிர மன்னர்கள் அனுஷ்டித்து வந்த சமணத்தின் கை ஓங்கி சனாதன சமயங்கள் ஒரு க்ஷீணதசையில் வீழ்ந்தன. இறைவனுக்கே இது பொறுக்கவில்லை போலும்! அவன் அருளால் அக்காலகட்டத்தில் காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் எனப் பக்தியுடன் அழைக்கப்படும் சங்கர பகவத் பாதாச்சாரியர் பல விதமாகப் பிளந்து கிடந்த சநாதன தர்மத்தை ஒருங்கிணைக்கப் பல்வகையில் பாடுபட்டு, ஷண்மதங்களை ஸ்தாபனம் செய்து ஒரு சமயப்புரட்சியை உண்டாக்கினார்.
காணபத்யம், கௌமாரம், சாக்தம், சௌரம், சைவம், வைணவம் என்று அந்த ஆறு அகச்சமயங்கள் முறையே விநாயகர், முருகன், அன்னை பராசக்தி, சூரியன், சிவன், விஷ்ணு முதலானவர்களைப் பிரதானத் தெய்வங்களாகக் கொண்டவை. ஆதிசங்கரர் தமது அத்வைதச் சித்தாந்தத்தினைப் (அதாவது ஒன்றான, உருவமற குணங்களற்ற பரப்ரம்மத்தின் வேறுபட்ட வடிவங்களே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் யாவையும் என்ற கருத்தினை) பரப்பியதோடு இனிமை பொங்கும் வடமொழி சுலோகங்களால் இந்தத் தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்து, நாத்திகம் பேசி நாத்தழும்பேறியிருந்த தென்னகத்தில் ஒரு பக்தி இயக்கத்தினைத் துவக்கி வைத்தார்.
அதே தருணத்தில் சைவச்சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், வைணவத்தை வளர்த்த பன்னிரு ஆழ்வார்கள் தங்கள் இன்னிசை பொருந்திய திருமுறை மற்றும் திவ்யப்ரபந்த தமிழ்ப் பாடல்களாலும் இறைவனைப் போற்றி மக்களிடையே பக்தி மார்க்க மூலம் எல்லாம் வல்ல அவன் திருவருளைப் பெறுவதோடு முடிவில் அவன் திருவடி நீழலில் இளைப்பாறலாம் என்ற எண்ணத்தினை வித்திட்டு, நீரூற்றி, உரமிட்டு, களை பிடுங்கி இறையன்பினை அறுவடை செய்து ஊட்டி வளர்த்தனர்.
இறைமறுப்பு மற்றும் மறைமறுப்பு போன்ற சூன்யவாதங்களைத் தகர்த்தெறிந்த இப்பெருந்தகைகள் வாழ்ந்த காலத்தினைத் தென்னக வரலாற்றின் வசந்தகாலம் என்றே கூறலாம். பச்சிளம் பாலகனாகத் திகழ்ந்து இறைவனை இனிய தமிழில் போற்றிப் பெரும்புகழ் அடைந்த ஞானசம்பந்தரைச் சங்கரர் மெச்சி ‘திராவிடச் சிசு’ என்று பாராட்டினார். ”ஆரியமும் செந்தமிழும் ஆனான் கண்டாய்” என்றபடி அந்த வாடாமொழியும் நம் தேன்மொழியும் இறைவனுக்கு இருகண்களாகக் கருதப்பட்டுப் பக்தி இயக்கம் செழித்த காலம் அது.
படங்களுக்குநன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Nalvar.jpg
http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)
http://en.wikipedia.org/wiki/Adi_Shankara
திரு சம்பத் அவர்கள் பேசினாலே கம்பூடரே அவரிடம் கதை கேட்கும்,எந்த விஷயத்தையும் அருமையாக பாமரனுக்கும் புரியும்படி சொல்வதுதான் அவரின் தனி சிறப்பு ,எந்த இடத்திலும் அவர் எதை பற்றியும் பேசும் திறன் படைத்தவர் ,எப்போதும் சிரித்தமுகம் சின்னவரோ பெரியவரோ வயற வாங்கோ என்று அவர் கூப்பிடும் அழகே தனிதான் ,இன்று அவர் எழுத்தை படித்தபோது ,மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் போல் இருக்கிறது ,தயவு செய்து ,மாதத்திற்கு ஒன்று எழுதுங்கள் போதும்
****தேவா****
//அந்த வாடாமொழியும் நம் தேன்மொழியும்//
🙂
திரு.தேவா அவர்கள் சொன்னதையே நானும் உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் எழுத்து, நடை. மிகவும் நன்றி ஐயா.
அருமை. இந்தப் பகுதி முதல் பகுதியாக வந்திருந்தால், சரி ஏதோ சரித்திரம் என்று நினைத்திருப்பர் படிப்பவர்கள். ஆனால் அருமையான 2 பகுதி கதை எழுதி, அதையும் ஸஸ்பென்சின்சில் வைத்து விட்டு, இந்தப் பகுதி வந்திருப்பது, திரு. சம்பத் அவர்களின் எழுத்தாளமைக்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு.
தொடரட்டும், காத்திருக்கிறோம்.
*** மனோகர் ***