சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-13)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
சமையலறையில் மாமியின் உதவியோடு பரபரவென இயங்கிக் கொண்டிருந்தாள் மங்கை. பஜ்ஜி, கேசரி முதலியவை தயாராகிக் கொண்டிருந்தன. குழந்தைகள் இருவரும் ஸ்கூலுக்குப் போய்விட்டனர். அந்தப் பெரிய வீடு அலங்கரிக்கப்பட்டு சுத்தமாக விளங்கியது. சிவநேசன் ஆபீசுக்குப் பெர்மிஷன் போட்டிருந்தான். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
விஷயம் இதுதான், இன்று நாலு மணி வாக்கில் ப்ரியாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள். பின்னே என்ன? ப்ரியாவும் காலேஜ் கடைசி வருடம் முடிக்கப் போகிறாளே! ஆம்! அந்த விமான விபத்தில் சிவநேசன் தப்பித்து ஒரு வருடமாகப் போகிறது. மாப்பிள்ளைப் பையன் எம்.பி.ஏ படித்து விட்டு டெல்லியில் ஒரு கம்பெனியில் பெரிய வேலையில் இருந்தான். மாசம் 60,000 சம்பளம், வீட்டுக்கு ஒரே பையன் போன்ற விவரங்கள் எல்லாரையும் திருப்திப் படுத்தியது.
மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பரஸ்பரம் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்து விட்டது. வந்தவர்கள் எதையுமே எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் சிவநேசன் செய்வதாகச் சொன்ன சீர்களை மறுக்காமல் ஒப்புக்கொண்டதோடு சந்தோஷமும் தெரிவித்தனர். பையனும் பார்க்க மிகவும் அமைதியானவனாகத் தோன்றினான். ப்ரியாவின் முகச் சிவப்பே அவளுக்குப் பையனைப் பிடித்திருப்பதைத் தெரிவித்தது. எல்லாருக்கும் பிடித்து விடவே நிச்சயத்தையும், கல்யாணத்தையும் ஒன்றாகவே நடத்தலாம் என்று திட்டமிட்டு நாள் குறித்தனர். முஹூர்த்தம் இன்னும் ரெண்டு மாதம் கழித்து.
அந்த நாளும் வந்தது. இனிமையான அந்தக் காலை வேளையில் மாப்பிள்ளை சுரேஷ், ப்ரியாவின் கழுத்தில் தாலி கட்டினான். எங்கும் மங்கல ஒலி எழுந்து நிறைந்தது. சிவநேசனும், மங்கையும் தங்களுடைய கடமைகளில் முதல் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டனர். இனி இந்தக் குடும்பத்துக்கு என்றும் மங்கலம் என்று சொல்லாமல் சொல்லியது அந்தக் கெட்டி மேளம். அதைக் கேட்டபடி மற்ற வேலைகளைக் கவனிக்க உள்ளே போனார்கள் சிவநேசன் குடும்பத்தார்.
குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது
சுபம்..
படங்களுக்கு நன்றி: http://brideseverywhere.blogspot.in/2007/11/south-indian-traditional-wedding.html
http://www.freewebs.com/s9consulting/s9weddingplanner.htm