அதிகாலைப்பல்லவன்-கவிதைப்புதினம் 13
பிச்சினிக்காடு இளங்கோ
எனக்கு மட்டும்
கொஞ்சம் லாபம்
கொஞ்ச நாளைக்கு லாபம்
கொஞ்சும் நாளைக்கு லாபம்
(கொஞ்சும் நாட்களில் லாபம்)
அதுவே எதிர்முனைக்கும்
ஆகலாம்
ஆனால்
லாபம் நட்டம்
கணக்குப்பார்க்கையில்
‘நட்டக்கணக்கே வாழ்க்கை’
என்ற தீர்மானம்
தீர்ப்பாகி விடும்
எனக்குக் கொஞ்சம்
லாபம்
அதுதான்
கொஞ்சிய லாபம்
என்னைக்
குதூகலமாய் ஆக்கிய லாபம்
என் வீட்டுக்கு
என்ன லாபம்?
எனவே
இருப்பதை இழக்காமல்
இருப்பதே கடமை
இருப்பாய் இருக்கும்
இன்பத்தை
எப்படி இழப்பது?
கூடு கட்டியிருக்கும்
அமைதியைக்
காதல் கற்கண்டு
(கல்கொண்டு)
கலைத்து விடக் கூடாது!
கவனமும்
கரிசனமும்
கைகோத்துக் கொண்டதால்
நிதானம் அருகில் வந்து
நிதர்சனம் தெளிந்ததால்
மயக்கம் தொலைத்து
மவுனப்புயலை விடுத்து
நல்ல முடிவுக்கு
நான் வந்தேன்
அந்த நாள் காலை
அதிகாலைப் பல்லவன்
புறப்படத் தயாராய்
ஒலி
எழுப்பிக் கொண்டிருந்தான்
அந்த வண்டியில்
எந்தப் பெட்டியில்
ஜன்னலின் வழியே
எனக்காகக் கண்கள்
காத்திருக்கும்!
ஜன்னலின் கம்பிகளைத்
கைப்பந்தடித்த விரல்கள். . .
கடிதம்
எழுதி எழுதிக்
களைத்த விரல்கள்
எப்படியெல்லாம்
பிடித்திருக்கும்
கம்பிகளுக்கிடையே
ரதிநிலா உடைந்து
சிதறி இருக்கும்
வண்டி புறப்படும்வரை
வாசலிலே நின்று
வாடியிருக்கும்
வண்டி நகர்ந்தும்
நகராமல்
மனம் நின்றிருக்கும்
நானும்
நகராமல்
நின்று விட்டேன்
என் மனம்
ரயிலில் பயணம்
திருமுகம் தேடி. . .
ரதியின் மனம்
ரயில் நிலையத்தில்
என்னைத்தேடி…
சந்திப்பில்
சந்திப்புக்காக
இன்னும்
தெரியாத முகத்தோடு
அதோ நகர்கிறது
அதிகாலைப்பல்லவன்
(நிறுத்தம் வந்து விட்டது)
படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_5781512_young-woman-looking-to-the-train-window-portrait.html